சுங்கை சிப்புட்டில் சாமிவேலு சாதிப்பாரா?

1 samyதேர்தல்  கண்ணோட்டம் : மஇகா முன்னாள் தலைவர் ச.சாமிவேலு, கடந்த பொதுத் தேர்தலில் கைமாறிப்போன சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை பிஎன்னுக்கு மீட்டுத்தர முடியும் என்று மிகுந்த நம்பிக்கை கொண்டிருக்கிறார். இதற்காகவே கடந்த சில மாதங்களாக அதையே தம் படை வீடாக்கிக் கொண்டிருக்கிறார்.

நேற்று மலேசியாகினியுடன் தொலைபேசிவழி உரையாடிய சாமிவேலு, கடந்த 90 நாள்களாக சுங்கை சிப்புட்டில் தாம் செய்துள்ள களப்பணி அத்தொகுதியை பிஎன் கூட்டணி கைப்பற்ற உதவும் என்று நம்பிக்கை மிளிரக் கூறினார்.

சாமிவேலு,  நீண்ட காலம் சுங்கை சிப்புட் எம்பியாக இருந்தவர். 2008 நிகழ்ந்த அரசியல் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட தொகுதிகளில் அதுவும் ஒன்று. அங்கு பிஎஸ்எம்-மின் டாக்டர் மைக்கல் ஜெயக்குமார் 1.821 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றிபெற்றார்.

தம் பழைய தொகுதிக்குத் திரும்பிச் சென்ற அவர் அங்கு கிடைத்த வரவேற்பில் உற்சாகமடைந்துள்ளார். “இதுவரை 120 தடவை இங்குள்ள சமூகத் தலைவர்களைச் சந்தித்துப் பேசியுள்ளேன்.

“கிட்டதட்ட ஐந்தாண்டுகளுக்குப் பிறகு திரும்பி வந்திருக்கிறேன். மக்கள் இன்னும் என்னை நினைவு வைத்திருக்கிறார்கள். அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது”, என்று குதூகலித்தார்.

ஆனால், ஒன்று அத்தொகுதியில் பிஎன் வேட்பாளரை-  பராமரிப்பு அரசின் பிரதமர்துறை துணை அமைச்சர் எஸ்.கே. தேவமணி களமிறக்கப்படுவார் என்று தெரிகிறது-  வெற்றிபெற வைத்ததும் அவர் அங்கிருந்து அகன்று விடுவார். அங்கேயே ஒட்டிக்கொண்டிருக்க மாட்டார்.

“வேட்பாளரின் வெற்றிக்கு உதவிய பின்னரும் அங்கு இருப்பது நன்றாய் இராது. எனக்கும் வேலை இருக்கிறது. அதனால் தேர்தலுக்குப் பின்னர் புறப்பட்டு விடுவேன்”. சாமிவேலு 31 ஆண்டுகள் மஇகா தலைவராக இருந்தவர். 2010-இல்தான் அவர் அப்பதவியிலிருந்து விலகினார்.

தேர்தலில் தோல்வியுற்ற அவர் இந்தியாவுக்கும் தென்கிழக்காசியாவுக்குமான சிறப்புத் தூதராக நியமிக்கப்பட்டார்.

தொலைபேசி உரையாடலுக்குச் சற்று நேரத்து முன்னர்கூட அவர் சுங்கை சிப்புட் குடியிருப்பாளர்களைச் சந்தித்துவிட்டுத்தான் திரும்பி இருந்தார்.

அவர், அத்தொகுதி மக்களுக்குக் கூறிக்கொள்ள விரும்புவதெல்லாம் இது ஒன்றுதான்: பிஎன்னுக்கு “ஒரு வாய்ப்பு” கொடுங்கள்.

“அரசாங்கத்தால் மக்களுக்கு உதவ முடியும், உதவ அது தயாராகவும்  உள்ளது என்பதைத்தான் நான் சொல்லி வருகிறேன்”, என்று கூறியவர் கடந்த ஐந்தாண்டுகளில் எந்த மாற்றமும் அங்கு ஏற்பட்டிருப்பதாகத் தெரிவில்லை என்று குறைபட்டுக்கொண்டார்.

“எதுவும் மாறவில்லை. மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது. ஆனால் எங்கே போவது யாரைப் பார்ப்பது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இப்போது நாங்கள் வந்து அவர்களின் தேவைகளைக் கேட்டறிகிறோம்”, என்ற சாமிவேலு சுங்கை சிப்புட்டில் பிஎன்னின் ஒருங்கிணைப்பாளரும் ஆவார்.

நடப்பு எம்பிக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லை

1 samy2இதனிடையே, அத்தொகுதியின் நடப்பு எம்பி ஜெயக்குமார்,  சிரமப்படுகிறார் என்று தெரிகிறது.  பிஎன்னுடன் போட்டி போட்டிக்கொண்டு பணத்தைச் செலவுசெய்ய தம்மால் முடியாது என்று கூறிய அவர், 2008-இல் எதிர்பாராத வகையில் வென்ற அத்தொகுதியைத் தக்க வைத்துக்கொள்ளும் நம்பிக்கை பிஎஸ்எம்-முக்கோ பக்காத்தானுக்கோ அவ்வளவாக இல்லை என்பதை ஒப்புக்கொண்டார்.

“ நாங்கள் பணம் கொடுப்பதில்லை என்பதால் மக்களில் சிலர் அதிருப்தி அடைந்திருக்கிறார்கள். கொடுப்பதற்கு எங்களிடம் அவ்வளவு பணம் இல்லை. எங்கள் அரசியல் மாறுபட்டது”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

தங்களுடையது சேவையை அடிப்படையாகக் கொண்டது என்றாரவர். நிலம், பண்ணைத்தொழில், மறுகுடியேற்றம் போன்றவற்றில் பிஎஸ்எம் மக்களுக்கு உதவி வருவதாக ஜெயக்குமார் கூறினார்.

1 samy 3“இங்கு வெற்றிபெறுவது எளிதல்ல”, என்றவர் மக்கள் யாரை ஆதரிக்கிறார்கள் என்பதைக் கண்டறிவதே சிரமமாக இருப்பதாய்க் குறிப்பிட்டார்.

“சுங்கை சிப்புட் மக்கள் பணிவு மிக்கவர்கள். உங்களைப் பிடித்திருந்தால் பிடிக்கிறது என்பார்கள். பிடிக்கவில்லையா, சொல்ல மாட்டார்கள். ஆனாலும் புன்னகைப்பர்”,என்றார். மருத்துவரான ஜெயக்குமார் கடந்த மூன்று தேர்தல்களில் சாமிவேலுவை எதிர்த்துப் போட்டியிட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் ஜெயக்குமாரைப் பொருத்தவரை, தேவமணி கேமரன் மலையைவிட்டு சுங்கை சிப்புட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக நினைக்கவில்லை. அங்கேயே இருப்பதுதான் அவருக்குச் சாதகமாக இருக்கும் என்கிறார்.

“இங்குள்ளவர்களுக்கு அவரைத் தெரியாது என்று சொல்வதற்கில்லை. ஈப்போவில் அவர் நீண்டகாலம் ஆசிரியாக பணியாற்றியுள்ளார். இங்கும் அவர் நன்கு பிரபலமாக இருப்பவர்தான்”, என்றார்.

வரும் தேர்தலில் சுங்கை சிப்புட் எந்தப் பக்கம் சாயும்? அது  உறுதியாகத் தெரியவில்லை. அது அங்கு  சாமிவேலுக்கு இன்னும் எவ்வளவு செல்வாக்கு உண்டு என்பதைப் பொறுத்துள்ளது.

மக்களின் போக்கை வைத்து எதையும் தீர்மானிக்க முடியாது. ஜெயக்குமார் கூறியதுபோல் அவர்கள் பணிவுமிக்கவர்கள் என்பதால் எந்தக் கட்சிமீது அதிருப்தி கொண்டிருந்தாலும் வெளியில் காண்பிக்க மாட்டார்கள்.

எனவே, இக்கேள்விக்கு விடைகாண வாக்களிப்பு நாள்வரை காத்திருக்கத்தான் வேண்டும். 2008-இல் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய வாக்காளர்கள் இந்தத் தேர்தலில் மீண்டும் மனம் மாறுவார்கள் என்பதையும் ஒதுக்கித்தள்ளிவிட முடியாது.