செனபோன் மலேசியாவுக்குள் நுழைய சட்ட நடவடிக்கை எடுக்கிறார்

Xenophonமலேசியாவுக்குள் தாம் நுழைவதற்கு மறுப்புத் தெரிவிக்கும் குடி நுழைவுத் துறை நோட்டீசை ரத்துச் செய்து  நாட்டுக்குள் நுழைய அனுமதிக்குமாறு கேட்டுக் கொள்ளும் நீதித் துறை மறு ஆய்வு விண்ணப்பத்தை  ஆஸ்திரேலிய சுயேச்சை செனட்டர் நிக் செனபோன் தாக்கல் செய்துள்ளார்.

அவரது வழக்குரைஞர் ரஞ்சித் சிங் வழியாக அந்த விண்ணப்பம் கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நேற்று சமர்பிக்கப்பட்டது. அதில் குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநரை செனபோன் ஒரே பிரதிவாதியாக பெயர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் செலவுத் தொகையையும் நீதிமன்றம் பொருத்தமானது எனக் கருதும் மற்ற இழப்பீடுகளையும் அதில் கோரியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 16ம் தேதி சிப்பாங் குறைந்த கட்டண விமான முனையத்தில் கிட்டத்தட்ட 15 மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் தென் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செனட்டரான செனபோன் ஆஸ்திரேலியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.

பிஎன், பக்காத்தான் ராக்யாட் ஆகியவற்றின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும் தேர்தல் ஆணைய அதிகாரிகளுடனும் தாம் கட்சிச் சார்பற்ற கலந்துரையாடலை நடத்தவிருப்பதையும் கருத்தில் கொள்ளாமல் முடிவு செய்ததின் மூலம் குடிநுழைவுத் துறை சட்ட அடிப்படையில் தவறாக நடந்து கொண்டதுடன் தனது அதிகாரத்தையும் மீறி செயல்பட்டுள்ளதாகவும் ஆதரவு ஆவணங்களுடன் செனபோன் குறிப்பிட்டுள்ளார்.

தமது பிப்ரவரி பயணத்துக்கு முன்னதாக மலேசிய ஊடகங்களில் தமக்கு எதிராக கூறப்பட்ட அவதூறு அறிக்கைகளுக்கு சட்ட ரீதியாக நிவாரணம் தேடும் பொருட்டும் தாம் மலேசியாவுக்குச் சென்றதாகவும் அந்த ஆஸ்திரேலிய அரசியல்வாதி தமது விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளார்.

தாம் இஸ்லாத்துக்கு எதிரானவர் என தம்மைக் குறிப்பிட்ட பல நாளேடுகளுக்கு எதிராக அந்த செனட்டர் வழக்குகளைத் தொடர்ந்துள்ளார்.