சிலாங்கூர் மந்திரி புசார் : பெர்சே முதலில் ‘உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும்’

bersihசிலாங்கூர் பராமரிப்பு அரசாங்கம் என்ற முறையில் மாநில நிர்வாகம் மீது ‘சந்தேகம்’ கொள்வதற்கு முன்னர்  பெர்சே உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என அதன் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம்  கேட்டுக் கொண்டிருக்கிறார்.

காலித்-தின் பராமரிப்பு அரசாங்கம் பல விதிமுறைகளை மீறியுள்ளதாகக் கூறி ‘பெயர் குறிப்பிட்டு  அவமானப்படுத்தும்” பட்டியலில் அதனை பெர்சே சேர்த்துள்ளதை அவர் நிராகரித்தார்.

சட்டமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் மாநில ஆட்சி மன்றம் எடுத்த முடிவுகளையே பராமரிப்பு அரசாங்கம்  அமல் செய்தது என்றார் அவர்.

“பராமரிப்பு அரசாங்க காலத்தின் போது சிலாங்கூர் மக்களுடைய நலன்கள் பாதுகாக்கப்படுவதற்காக ஆட்சி மன்றம் அந்த முடிவுகளை செய்தது.”

“ஆகவே அந்த முடிவுகளும் நடவடிக்கைகளும் வாக்குகளை வாங்குவதற்கு ஒப்பானது அல்ல,” என காலித்  மேலும் சொன்னார்.

“எத்தகைய சந்தேகத்தையும் தெரிவிக்கும் முன்னர் உண்மைகளையும் சட்ட விவரங்களையும் பெர்சே உறுதி  செய்து கொள்ளும் என மாநில அரசாங்கம் நம்புகின்றது.”

bersih1பொதுத் தேர்தலின் போது பிரச்சார நோக்கங்களுக்குப் பொது நிதிகள் தவறாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்காக பக்காத்தான் ராக்யாட் நிர்வாகம் மிகவும் கவனமாக  செயல்படுவதாகவும் காலித் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னர் பக்காத்தான் ராக்யாட் வழி நடத்தும் சிலாங்கூர் மாநில அரசாங்கம் மீறியுள்ளதாகக் கூறப்படும் பல பராமரிப்பு அரசாங்க விதிமுறைகளை நேற்று பெர்சே பட்டியலிட்டது.

அவற்றுள் : -நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு அடுத்த நாள் ஏப்ரல் 4ம் தேதி மந்திரி புசார் காலித் இப்ராஹிம் மாநில அரசு ஊழியர்களுக்கு 300 ரிங்கிட் போனஸ் வழங்கியது

-ஏப்ரல் 5ம் தேதி குடியிருப்புப் பாதுகாப்பு திட்டங்களுக்கு 2.46 மில்லியன் ரிங்கிட் கூடுதல் ஒதுக்கீடுகளை வழங்கியது

-பெஸ்தாரி ஜெயாவில் உள்ள கிராமமக்களுக்கு நில உரிமைப் பத்திரங்கள் கொடுக்கப்பட்டன. அதற்கான பிரிமியம் தொகையைச் செலுத்த இயலாதவர்களுக்கு உதவி செய்ய மந்திரி புசார் காலித் இப்ராஹிம் முன் வந்தது ஆகியவையும் அடங்கும்.

அந்த நடவடிக்கைகள் வாக்குகளை வாங்குவதற்குச் சமமாகும் என பெர்சே அமைப்பின் தேர்தல் மீறல்
கண்காணிப்புக் குழுவின் இணைத் தலைவர் ஐரின் பெர்னாண்டெஸ் கூறினார்.

அந்தக் குழு கூட்டரசு மாநில அரசுகள் ஆகியவற்றைக் கண்காணித்து வருகின்றது.