13வது பொதுத் தேர்தலில் சொஸ்மா என அழைக்கப்படும் பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்)
சட்டம் தவறாக பயன்படுத்தப்பட மாட்டாது எனப் போலீஸ் உறுதியளித்துள்ளது.
பிரச்சாரத்தின் போது தேசியப் பாதுகாப்புக்கு மருட்டலை ஏற்படுத்துகின்றவர்கள் மீது மட்டுமே அந்தப் புதிய
சட்டம் பயன்படுத்தப்படும் என தேசியப் போலீஸ் படைத் தலைவர் செயலகத்தை சேர்ந்த பொது உறவு உதவித் தலைவர் ஏசிபி ராம்லி முகமட் யூசோப் கூறினார்.
“தேர்தல் சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய தேவைப்பட்டால் சொஸ்மா பயன்படுத்தப்படும். ஜனநாயக நடைமுறைக்கு இடையூறு ஏற்பாடமல் பார்த்துக் கொள்வது போலீசாருடைய பொறுப்பாகும்,” என அவர் கோலாலம்பூரில் 13வது பொதுத் தேர்தல் குறித்த விளக்கமளிப்புக் கூட்டத்தில் சொன்னார்.
தேர்தலின் போது நாடாளுமன்ற ஜனநாயகத்துக்குத் தீங்கு விளைவிக்கும் எனக் கருதப்படும் குற்றங்கள் மீது
போலீஸ் புதிய சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக் கூடும் என பிகேஆர் கட்சியின் ஆர் சிவராசா
தெரிவித்ததற்கு பற்றி ராம்லி பதிலளித்தார்.
பாதுகாப்புக்கும் பொது ஒழுங்கிற்கும் மருட்டல் ஏற்படும் போது மட்டுமே சொஸ்மா பயன்படுத்தப்படும் எனக்
குறிப்பிட்ட அவர், இல்லை என்றால் தேர்தலின் போது போலீஸ் எல்லா விவகாரங்களையும் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கும் என்றும் கூறினார்.
பெர்னாமா