கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பினாங்கில் நடைபெற்ற டிஏபி கட்சியின் மூவாண்டுப் பேரவையில் மத்திய நிர்வாகக் குழுத் தேர்தல்களின் போது நிகழ்ந்த நிர்வாகக் குளறுபடி தொடர்பில் செய்யப்பட்டுள்ள புகார்கள் மீதான விசாரணையில் கலந்து கொள்ளுமாறு ஆர்ஒஎஸ் என்ற சங்கப் பதிவதிகாரி அலுவலகம் டிஏபி-யைக் கேட்டுக் கொண்டுள்ளது.
ஏப்ரல் 9ம் தேதியிடப்பட்ட அந்தக் கடிதம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பத்து நாட்களுக்குப் பின்னர் அனுப்பப்பட்டுள்ளதாக டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் கூறினார்.
ஏப்ரல் 18ம் தேதி நிகழும் அந்த விசாரணையில் கலந்து கொள்ள கட்சியிலிருந்து இரண்டு சாட்சிகளை
அனுப்புமாறும் ஆர்ஒஎஸ் அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
டிஏபி முன்னாள் தேர்தல் இயக்குநர் பூய் வெங் கியோங்-கும் தேர்தல் வியூகவாதி ஒங் கியான் மிங்-கும் விசாரணையில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் அந்தக் கடிதம் கேட்டுக் கொண்டுள்ளதாக கர்பால் சொன்னார்.
கோலாலம்பூரில் உள்ள ஆர்ஒஎஸ் அலுவலகத்தில் காலை பத்து மணிக்கு விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் முகமட் நவாவி மாட் முன்னிலையில் விசாரணை நிகழும் என்றும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிர்வாகக் குழுத் தேர்தல்கள் தொடர்பாக ஒன்பது ஆவணங்களை சமர்பிக்குமாறும் கட்சி கேட்டுக்
கொள்ளப்பட்டுள்ளதாகவும் கர்பால் சொன்னார். அவற்றுள் கடந்த ஆண்டு பேராளர்களுக்கு அனுப்பபட்ட
நோட்டீஸ்களும் அடங்கும்.
“நாங்கள் சட்டத்துக்கு இணங்க சம்பந்தப்பட்ட ஆவணங்களை ஆர்ஒஎஸ் -க்கு வழங்க எண்ணியுள்ளோம்.”
“நாங்கள் அதனை நிர்வாக (technical) குளறுபடி என்றே கருதுகிறோம். சில தரப்புக்கள் கூறிக் கொள்வது
போல மோசடியோ அல்லது தவறான பிரதிநிதித்துவமோ நிகழவில்லை.”
“விசாரணைக்கு சில காலம் பிடிக்கும். ஆர்ஒஎஸ் எந்த முடிவு செய்தாலும் அது ஆதாரங்களின் அடிப்படையில்
இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்,” என கர்பால் பினாங்கில் நிருபர்களிடம் கூறினார்.
‘இடையூறு செய்யும் அறிக்கைகள் வேண்டாம்’
ஏப்ரல் 20ம் தேதி வேட்பாளர் நியமன நாளுக்கு முன்னதாக டிஏபி-யின் பதிவு ரத்துச் செய்யப்படலாம் என்ற கவலை குறித்து கருத்துரைத்த கர்பால், அது ‘முடியாது’ என்றார். ஏனெனில் ஆர்ஒஎஸ் ஒரு முடிவை எடுக்கும் முன்னர் எல்லா ஆதாரங்களையும் பரிசீலிக்க வேண்டும் என்றார் அவர்.
“அது நிகழ்ந்தால் (டிஏபி பதிவை ரத்துச் செய்வது) அது வேண்டுமென்றே செய்யப்பட்டதாக இருக்கும்.”
அந்த விசாரணைக்கு இடையூறாக அறிக்கைகளை விடுக்க வேண்டாம் என பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் டிஏபி-யை குறை கூறி வரும் துங்கு அப்துல் அஜிஸையும் கர்பால் கேட்டுக் கொண்டார்.
“ஆர்ஒஎஸ் மீது நஜிப் தேவையற்ற நெருக்குதலை தொடுக்கக் கூடாது. அந்த விவகாரம் மீது அது சுதந்திரமாக
முடிவு செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்,” என்றும் கர்பால் சொன்னார்.
கட்சித் தேர்தல்களில் நிகழ்ந்த முறைகேடுகளுக்காக டிஏபி நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என அந்தக்
கட்சியிலிருந்து விலகிய முன்னாள் டிஏபி செனட்டருமான துங்கு அப்துல் அஜிஸ் வலியுறுத்தி வருகிறார்.
கட்சித் தேர்தல்கள் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என அதிருப்தி அடைந்துள்ள சில டிஏபி உறுப்பினர்கள்
கேட்டுக் கொண்ட போதிலும் கட்சியின் முடிவு இறுதியானது என கர்பால் அறிவித்துள்ளார்.
மத்திய நிர்வாகக் குழுவுக்கு நடைபெற்ற தேர்தலில் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங்-கின் அரசியல் செயலாளர் ஜைரில் கிர் ஜொஹாரி தேர்வு பெற்றுள்ளதை புதிய முடிவுகள் காட்டின. ஜைரில் முதலில் அறிவிக்கப்பட்ட முடிவுகளின் படி அதிக வாக்குகள் பெற்ற 20 பேருக்குள் வரவில்லை.
ஆர்ஒஎஸ் முடிவு செய்யும் வரை பொதுத் தேர்தலில் தனது சின்னத்தைப் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடுவதற்கு டிஏபி அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கர்பால் சொன்னார்.
அந்த விசாரணை தள்ளி வைக்கப்பட வேண்டும் என டிஏபி கேட்டுக் கொள்ளவில்லை. மே 5 பொதுத்
தேர்தலுக்குப் பின்னர் அந்த முடிவைச் செய்யுமாறு மட்டுமே வேண்டிக் கொள்கிறது என அவர் குறிப்பிட்டார்.