-எம். குலசேகரன், ஏப்ரல் 13, 2013.
மீண்டும் மீண்டும் நான் கேட்டுக்கொண்டே இருக்கும் கேள்விதான் இது. இருந்தாலும் பிரச்சனை தீராதவரையில் பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதியான நான் கேட்கவேண்டும் என்ற கட்டாயத்தில் கேட்கிறேன்.
8 மாதம் ஆட்சியில் இருந்த பாக்கதான் கட்சியைப் பார்த்து நீங்கள் தமிழ்ப் பள்ளிகளுக்கு ஒன்றுமே செய்யவில்லை என்று சொன்னீர்கள் ? இப்பொழுது 2 ஆயிரம் எக்கர் நிலத்தை தமிழ்ப் பள்ளிகளுக்கு கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டு இன்னும் பூச்சாண்டிதான் காட்டிக் கொண்டிருக்கின்றீர்கள்!
நீங்கள் அமைக்க விருக்கும் வாரியத்தின் உறுப்பினர்கள் யாரென்று இதுவரை சொல்லவேயில்லை, ஏன் ? அதென்ன அப்படிப்பட்ட சிதம்பர ரகசியமா ? தமிழ்ப் பள்ளிகளுக்காக செய்ய வேண்டிய இந்த நற்பணியில் என்ன ஒளிவு மறைவு வேண்டிக்கிடக்கின்றது ? உண்மையிலேயே , நல்ல உறுப்பினர்களை, சமுதாய அக்கரையுள்ளவர்களை நீங்கள் தெரிவு செய்திருந்தால் உடனடியாக அந்த பட்லியலை மக்களின் பார்வைக்கு கொண்டு சேர்த்திட வேண்டியதுதானே?
மண்வெட்டியை கையில் எடுக்காதவன், தோட்டப்புற மண் வாசனை அறியாதவன் எல்லாம் வாரியக் குழு உறுப்பினர்களாக போட வேண்டும் என்று எண்ண வேண்டாம். விவசாயத்தையும் தோட்ட தொழில் துறைப் பற்றியும் தெரியாத பட்டணத்துவாசிகளைப் போட்டு இன்னொரு குட்டி மைக்க ஹோல்டிங்ஸ் போல் ஆரம்பித்து இதையும் குட்டிச்சுவராக்கி விடதீர்கள் . தோட்ட சூழ்நிலையில் பிறந்து வளர்ந்து படித்து சமுதாய உணர்வுள்ள பண்பட்டவர்களைத் தேர்வு செய்யுங்கள். வாரிய உறுபினர்கள் நல்ல கல்வி அறிவு உள்ளவர்களாகவும் நிர்வாகத் துறையில் அனுபமிக்கவர்களாகவும் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் .இவற்றைச் செய்தால் தமிழர்கள் உங்களைத் தலை நிமிர வைப்பார்கள்.
நீங்கள் நடத்தும் இந்த இழுத்தடிப்பு நாடகத்தைப் பார்த்தால் ஏதோ வில்லங்கம் இருப்பது போல் தெரிகிறது. ம.இ.காவினருக்கு இந்த நிலம் தாரை வார்த்து விடும் வகையில் ஏதோ குல்மால் நடப்பதாக ஓர் உணர்வு தோன்ற ஆரம்பித்துவிட்டது. மைகாவின் பழைய குப்பைகள் மறைமுகமாக வேறொரு உருவில் மீண்டும் நுழைய முயற்சிப்பதாக தெரிகிறது.
நாட்டின் பிரதமரே அரசு சார இயக்கங்களை சந்தித்து ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் , பேரா ம.இ.கா இவ்வியகங்கக்களை காணாமல் புறந்தள்ளுவது, இவர்களின் பலவீனத்தையும், மக்களின் நாடித்துடிப்பை அறியாத அறியாமையைப் புலப்படுத்துகிறது.
5 வருடங்களாக காத்திருந்த பேரா மாநில மக்களுக்கெல்லாம் ஒரு நல்ல சேதி சொல்ல விரும்புகிறேன் . டத்தோ வீரசிங்கத்திற்கும் டத்தோ கணேசனுக்கும் ஒரு வேண்டுகோள். நீங்கள் அமைப்பதாக இருந்த புதிய அறவாரியம் அமைக்க அவசரம் ஒன்றும் காட்ட வேண்டாம், கூடிய விரைவில் அதற்கு தானாக விடிவு வரப்போகிறது. தேர்தலுக்குப் பிறகு அந்த அறவாரியம் தேவைப்படாது. பாகாத்தான் அரசு அமைந்தவுடன் எது எப்படி அமைய வேண்டுமோ அது அப்படியே கீதையின் வாக்குப்படி அமையும்.
5 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் ஒரு 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தை தமிழ்ப் பள்ளிகளுக்காக ஒதுக்கப் பட்டிருந்தும் அதனை ஒரு முறையான வாரியத்திடம் ஒப்படைக்க முடியாத ம.இ.கா வா 2 மில்லியன் இந்தியர்களை வழி நடத்த போகின்றது ? ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல , இதனை வைத்தே பேரா மாநில இந்திய வாக்காளர்கள் உங்களின் ஆளும் திறமையை எடை போட்டு வைத்திருப்பார்கள் , அதன் முடிவுகளை தேர்தல் தெரிவித்துவிடும்.
பழம் அறுக்க காத்துக்கொண்டிருக்கும் சீனர்களின் நிலத்தின் பக்கத்தில் அனாதையாய் கேட்பாரட்டுக் கிடக்கும் இந்நிலத்தைப் பார்க்கும் பொழுது ஒவ்வொரு பேரா தமிழனும் ம.இ.காவின் இயலாமையைக் கண்ணுற்று வெட்கித் தலை குனிந்து கண்ணீர் வடிக்க வேண்டும்.