மந்திரி புசார் பதவி இரண்டு தவணைக்கு மட்டுமே- ஜோகூர் பக்காத்தான் தீர்மானம்

1 johorஜோகூரில் மந்திரி புசாராக இருப்பவர் இரண்டு தவணைகளுக்கு மட்டுமே அப்பதவி வகிப்பார் என்று பக்காத்தான் ரக்யாட் உறுதியளித்துள்ளது.

நேற்று வெளியிடப்பட்ட மாநில தேர்தல் கொள்கை அறிக்கையில் இந்த உறுதிமொழி தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘ஜோகூர் மாஜு டான் பெர்கபாஜிகான் (Johor Maju dan Berkebajikan) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டிருக்கும் அவ்வறிக்கை, பக்காத்தான் அம்மாநிலத்தில் ஆட்சிப்பொறுப்பை ஏற்றால் ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற கவுன்சிலர்கள் அவர்கள் மனைவிமார் ஆகியோர் அவர்களின் சொத்து விவரங்களை ஒவ்வோர் ஆண்டும் அறிவிக்க வேண்டும் என்ற விதி கடைப்பிடிக்கப்படும் என்றும் உறுதியளித்தது.

1 johor1அத்துடன் அவர்கள் பதவியில் இருக்கும் காலத்தில் அரசு நிலம் கேட்டு விண்ணப்பம் செய்யவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

“அளவில்லா அதிகாரம் அளவில்லா ஊழலுக்கு வழிகோலும்…..எனவேதான் மந்திரி புசார் பதவி இரண்டு தவணைகள் மட்டுமே என்று வரம்புகட்ட முடிவு செய்தோம்”, என ஜோகூர் டிஏபி தலைவர் டாக்டர் பூ செங் ஹாவ் (படத்தில் வலம் இருப்பவர்) நேற்று தேர்தல் கொள்கை அறிக்கை வெளியீட்டு விழாவில் பேசுகையில் குறிப்பிட்டார்.

அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள இதர சலுகைகள் வருமாறு: ஒவ்வொரு மாதமும் 10 கன அடி தண்ணீர் இலவசம், நிலவரி, மதிப்பீட்டு வரிகளில் குறைப்பு, அரசுக்குத்தகைகளுக்கு திறந்தநிலை டெண்டர்கள், பெரிய நகரங்களில் இலவசமாக WiFi சேவைகள், புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்குக் கல்வி உதவிநிதி.

மக்கள் ஆலோசனை மன்றம்

1 johor2பக்காத்தான் மக்கள் ஆலோசனை மன்றம் அமைப்பது பற்றியும் ஆராயும் என பாஸ் உதவித் தலைவர் சலாஹுதின் ஆயுப் கூறினார். அம்மன்றம், அரசின் கொள்கைகளை ஆராய்வதுடன் அடிநிலை மக்களின் உணர்வுகளைக் கண்டறியும் நோக்கில்  மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை மக்களையும் என்ஜிஓ-களையும் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கும்.

பக்காத்தான் அதன் வாக்குறுதிகளை நிறைவேற்ற எவ்வளவு காலம் பிடிக்கும் என்ற கேள்விக்கு, 70விழுக்காட்டையாவது  முதல் ஐந்தாண்டுகளில் நிறைவேற்ற முடியும் என்று நம்புவதாக பூ தெரிவித்தார்.