ஒரு “தனிக் குழு” குறிப்பிட்ட சில அரசியல் தலைவர்களின் பெயரைக் கெடுப்பதற்காக பாலியல் வீடியோக்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறது என்கிறார் பார்டி ஈக்காத்தான் பங்சா மலேசியா தலைவர் அப்துல் காடிர் ஷேக் ஃபாட்சிர்.
இக்குழுவினருக்குச் சில தரப்பினர் நிதியுதவி செய்யும் தகவல் தமக்குக் கிடைத்திருப்பதாக காடிர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
“அவர்கள் கில்லாடிகள். இணையத்தளத்திலிருந்து சில வீடியோக்களைத் தெரிவு செய்து பின்னர் அவற்றில் உள்ளவர்களைக் குறிப்பிட்ட தலைவர்கள்போல் உருமாற்றி விடுவார்கள்.”.
மற்றவர்களைக் களங்கப்படுத்தும் இப்படிப்பட்ட காணொளிகளை வெளியிடுவது மிகவும் எளிது என்று முன்னாள் தகவல் அமைச்சரான அவர் சொன்னார். 56-ஆண்டுகள் அம்னோ உறுப்பினராக இருந்த காடிர் கடந்த ஆண்டு அதிலிருந்து வெளியேறினார்.
இப்படிப்பட்ட அசிங்கமான அரசியல் தந்திரத்தை மக்கள் ஏற்கமாட்டார்கள் என்றாரவர்.
“இப்படிப்பட்ட அரசியல் பரப்புரையை மலேசியர்கள் கண்டிப்பார்கள் என்று நம்புகிறேன். இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
நாட்டில் பற்பல ஆண்டுகளாக அரசியலில் “கண்ணியமும் ஒழுங்குமுறையும்” கடைப்பிடிக்கப்பட்டு வந்திருப்பதை காடிர் சுட்டிக்காட்டினார்.
“50 ஆண்டுகளுக்குப் பிறகு அரசியலில் முதிர்ச்சி பெற்றிருக்க வேண்டும்”, என்று அந்த 73-வயது அரசியல்வாதி குறிப்பிட்டார்.
செக்ஸ் வீடியோ ஆட்டத்தால் ஆகக் கடைசியாக பாதிக்கப்படவரான பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி இப்படிப்பட்ட “வெறுக்கத்தக்க பொய்களு”க்கு எதிராக “பொறுமையும் அமைதியும்” காக்க வேண்டும் என்றாரவர்.
“முஸ்தபாவை 70களில் அவர் பாஸ் இளைஞர் தலைவராக இருந்தபோதே நான் அறிவேன். அவர் ஒழுக்கமிக்கவர், பண்பாளர், கொள்கைபிடிப்புள்ளவர். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கிறார்”.
இச்சம்பவத்துக்குப் பின்னர் பாஸ் உறுப்பினரிடையேயும் பொதுமக்களிடமும் முஸ்தபாவுக்குள்ள மரியாதை கூடியிருக்குமே தவிர குறைந்திருக்காது என்றும் அவர் நம்புகிறார்.