நஜிப்: பிஎன் வேட்பாளர் பட்டியல் ‘இறுதியானது’.

najib13வது பொதுத் தேர்தலுக்கான பிஎன் வேட்பாளர் பட்டியல் இறுதியானது என பிஎன் தலைவர் நஜிப் அப்துல்  ரசாக் இன்று அறிவித்துள்ளார்.

அந்த ஆளும் கூட்டணியின் உறுப்புக் கட்சிகளின் தலைவர்களிடம் வேட்பாளர் பெயர்ப் பட்டியலை வழங்கிய பின்னர் அவர் நிருபர்களிடம் கூறினார்.

“இது இறுதிப் பட்டியல். நாங்கள் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்கவில்லை. மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படாது என நான் நம்புகிறேன்.”

“சட்ட ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் இன்னும் அதனை மாற்ற முடியும் என்றாலும் இது இறுதியானது என நாங்கள் கருதுகிறோம்,” என இன்று பிற்பகல் அம்னோ தலைமையகத்தில் நஜிப் கூறினார்.

நாடாளுமன்ற வேட்பாளர்களில் 33 விழுக்காட்டினரும் சட்டமன்றங்களுக்கான வேட்பாளர்களில் 49
விழுக்காட்டினரும் புதுமுகங்கள் என்றார் அவர்.

“பிஎன் -னும் அம்னோவும் புதுப்பிக்கப்படுவதைக் காண வாக்காளர்கள் விரும்புவதற்கு ஏற்ப அது  அமைந்துள்ளது.”

அதே வேளையில் பிஎன் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அரசாங்கத்தை அமைத்ததும் தனது தேர்தல் கொள்கை  அறிக்கையை சுமூகமாக அமல் செய்வதற்கு அனுபவம் வாய்ந்த வேட்பாளர்களும் தேவைப்படுவதாக நஜிப்  மேலும் சொன்னார்.

நாடாளுமன்ற இடங்களுக்கான வேட்பாளர்களில் 91 விழுக்காட்டினர் குறைந்த பட்சம் டிப்ளோமா தகுதியைப் பெற்றுள்ளனர். 31 விழுக்காட்டினர் தொழில் நிபுணர்கள்.

“அவர்களில் பேராசிரியர்களும் முன்னாள் அரசாங்க ஊழியர்களும் மருத்துவர்களும் வழக்குரைஞர்களும் சமய  அறிஞர்களும் கூட இருக்கின்றனர்.”

தெரிவு செய்யப்படாதவர்கள் ஏமாற்றமடைவார்களா என்ற கேள்விக்குப் பதில் அளித்த நஜிப், மக்கள்
ஏமாற்றமடைவதைப் பற்றியே நான் பெரிதும் கவலைப்படுகிறேன் என்றார்.

najib2இதனிடையே அந்தப் பட்டியல் பற்றி தாம் மகிழ்ச்சி கொள்வதாக அம்னோ இளைஞர் தலைவர் கைரி  ஜமாலுதின் அபு பாக்கார் நிருபர்களிடம் கூறினார்.

“வேட்பாளர்களில் இளைஞர்களும் இருக்கின்றனர். நாங்கள் அந்தப் பட்டியல் குறித்து மனநிறைவு  அடைந்துள்ளோம். நாளை நாங்கள் அதனை அறிவிப்போம்,” என்றும் அவர் சொன்னார்.

பிஎன் மாநிலத் தலைவர்கள் மௌனம் சாதித்தனர்

எல்லா மாநில பிஎன் தலைவர்களும் எதுவும் சொல்ல மறுத்து விட்டார்கள். நாளை மாநிலச் சட்டமன்ற வேட்பாளர்களை அறிவிப்பதாக மட்டும் அவர்கள் கூறினர்.

“நாளை நாங்கள் வேட்பாளர் பட்டியலை ஒரே நேரத்தில் அறிவிப்போம். என் மாநிலத்துக்கு மந்திரி புசார் இல்லத்தில் நாளை காலை மணி 10.30க்கு நான் வெளியிடுவேன். இப்போது நான் சொல்லக் கூடாது,” என
நெகிரி செம்பிலான் பராமரிப்பு அரசாங்க மந்திரி புசார் முகமட் ஹசான் சொன்னார்.

“நான் இன்னும் பட்டியலைப் பார்க்கவில்லை. அது சீல் வைக்கப்பட்ட கடித உறை. நாளை நாளை என
பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ் தெரிவித்தார்.

இதனிடையே சிறிய பிஎன் உறுப்புக் கட்சிகள் இன்று தங்கள் இடங்களை அறிவித்தன. பெரிய கட்சிகள்
நஜிப்பிடமிருந்து பட்டியலைப் பெற்றதும் இன்று பின்னேரம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.najib3

“எங்களுக்கு நாங்கள் விரும்பிய 100 விழுக்காடும் கிடைக்கவில்லை. என்றாலும் பிஎன் வெற்றி பெறுவது  முக்கியமாகும். ஆகவே நாங்கள் அந்தப் பட்டியலை ஏற்றுக் கொண்டோம். நான் பின்னர் எல்லா ஊடகங்களுக்கும் மின் அஞ்சல் வழி வேட்பாளர் பட்டியலை அனுப்புகிறேன்,” என  கெராக்கான் தலைவர் கோ சூ கூன் கூறினார்.

இதனிடையே மசீச இன்று தனது நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலை வெளியிடும் என கருதப்படுகின்றது.  அதில் மசீச-வுக்கும் அம்னோவுக்கும் இடையில் சர்ச்சை நிகழ்ந்த வாங்சா மாஜு, கேலாங் பாத்தா  தொகுதிகளும் அடங்கும்.

“இன்னும் சில மணி நேரத்தில் பட்டியலை ஆய்வு செய்த பின்னர் நான் நிருபர்களைச் சந்திப்பேன்,” என மசீச தலைவர் சுவா சொய் லெக் சொன்னார்.

najib4இதனிடையே கெப்போங் நாடாளுமன்றத் தொகுதியில் பிபிபி என்ற மக்கள் முற்போக்குக் கட்சி களமிறங்கும்  என அதன் தலைவர் எம் கேவியஸ் அறிவித்துள்ளார்.

அது கோத்தா லக்ஸ்மணா, மானெக் உராய், பாசிர் பெடெமார், கோத்தா அலாம் ஷா ஆகிய சட்டமன்றத்  தொகுதிகளிலும் அந்தக் கட்சி போட்டியிடும்.

பிஎன் சிலாங்கூரையும் பேராக்கையும் பிடிப்பதற்கு உதவியாக பேராக்கில் உள்ள பாசிர் பெடெமாரிலும்  சிலாங்கூரில் உள்ள கோத்தா அலாம் ஷாவிலும் பிபிபி போட்டியிடுவதாகவும் கேவியஸ் சொன்னார்.

சபாவைச் சேர்ந்த லிபரல் ஜனநாயகக் கட்சி ஒரு நாடாளுமன்றத் தொகுதியிலும் நான்கு சட்டமன்றத்
தொகுதிகளில் போட்டியிடும் என அதன் தலைவர் லியூ வூய் கியோங் தெரிவித்தார்.

TAGS: