மசீச அதன் முக்கிய புள்ளிகளில் இருவரை- முன்னாள் தலைவர் ஒங் தி கியாட், உதவித் தலைவர் கான் பிங் சியு ஆகியோரை- மே 5 பொதுத் தேர்தலில் களமிறக்காது.
இன்னொரு உதவித் தலைவரான டாக்டர் இங் யென் யென், தாம் போட்டியிடப்போவதில்லை என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
மசீச முடிவு மாலைநேர இதழை வெளியிட ஆயத்தமாகிக் கொண்டிருந்த சீனமொழி நாளேடுகளுக்கு இன்று பிற்பகல் தெரிவிக்கப்பட்டது.
பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் தெரிவுசெய்துள்ள வேட்பாளர்களின் விவரம் இன்றுகாலை மசீச-வுக்கு தெரிவிக்கப்பட்டது. ஆனால், அ்க்கட்சி அதன் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலை இன்னும் வெளியிடவில்லை.
இன்னொரு நிலவரத்தில், மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக், அக்கட்சி 37 நாடாளுமன்ற இடங்களிலும் 90 சட்டமன்ற இடங்களிலும் போட்டியிடுவதை உறுதிப்படுத்தினார்.
அதாவது, 2008-உடன் ஒப்பிடும்போது அது போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கேலாங் பாத்தா, குவாந்தான், வங்சா மாஜு ஆகிய மூன்று இடங்களை அது விட்டுக்கொடுத்துள்ளது.
அம்மூன்றும் பிஎன் உறுப்புக்கட்சிகளுக்கு “இரவல்” கொடுக்கப்பட்டுள்ளதாகவும் பிஎன் வெற்றியை உறுதிசெய்வதற்காக அவ்வாறு செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
“தொகுதி எல்லைகள் திருத்தி அமைக்கப்படும்போது மசீச-வுக்கு புதிய இடங்கள் கிடைக்கும். அதன் தொகுதிகளின் எண்ணிக்கையும் கூடும்”, என்று சுவா இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
கட்சி உறுப்பினர்கள் அதிருப்திக்கு இடமளிக்காமல் கட்சியின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.
நாடாளுமன்றத்துக்குப் போட்டியிடும் 37 வேட்பாளர்களில் 19பேர் புதுமுகங்கள் என்று சுவா தெரிவித்தார்.
அதேபோல் சட்டமன்றத்துக்குப் போட்டியிடும் 90 பேரில் 49பேர் புதியவர்கள்.