2008 பொதுத் தேர்தலில் தான் இழந்த அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளை மீண்டும் கைப்பற்றப் போவதாக மஇகா உறுதி அளித்துள்ளது.
அந்தத் தொகுதிகள் அனைத்திலும் மஇகா வெற்றி பெறும் எனத் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக கட்சித் தலைவர் ஜி பழனிவேல் இன்று கூறினார்.
அவர் 13வது பொதுத் தேர்தலுக்கான மஇகா வேட்பாளர்களை அறிவித்த பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
தாம் கேமிரன் ஹைலண்ட்ஸில் போட்டியிடுவதை அவர் உறுதிப்படுத்தினார். எஸ்கே தவமணி சுங்கை சிப்புட்டுக்கு மாற்றப்படுவதாகவும் தலைமைச் செயலாளர் எஸ் முருகேசன் கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் நிறுத்தப்படுவதாகவும் பழனிவேல் சொன்னார்.
கோத்தா ராஜா தொகுதியையும் சுங்கை சிப்புட் தொகுதியையும் மஇகா 2008 ‘அரசியல் சுனாமியில்’ இழந்தது.
2008 தேர்தலில் அந்தக் கட்சி இழந்த காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் மஇகா வேட்பாளராக
நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட பெமாண்டு இயக்குநர் ரவிந்திரன் தேவகுணம் பட்டியலில் இல்லை.
காப்பாரில் உள்ளூர் மஇகா தலைவரான ஏ சக்திவேல் அங்கு களமிறக்கப்படுகிறார். அந்தத் தொகுதியின் நடப்பு பிகேஆர் எம்பி-யான மாணிக்கவாசகம் மாநிலச் சட்டமன்றத் தொகுதி ஒன்றுக்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பிகேஆர் சின்னத்தில் நிறுத்தப்படும் புதுமுகமான ஜி மணிவண்ணனை சக்திவேல் எதிர்நோக்குவார்.
ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரான விஎஸ் மோகன் தெலுக் கெமாங் நாடாளுமன்றத்
தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார். அந்தத் தொகுதியை மஇகா 2008ல் பிகேஆர் கட்சியிடம் இழந்தது.
கட்சியின் உதவித் தலைவர் எம் சரவணன் மீண்டும் தாப்பாவிலும் புத்ரா மஇகா தலைவர் பி கமலநாதன் உலு சிலாங்கூரிலும் மீண்டும் நிறுத்தப்படுகின்றனர்.
எல்லா நாடாளுமன்றத் தொகுதிகளிலும் மஇகா வெற்றி பெறும் எனத் தாம் உறுதியாக நம்புவதாகவும்
பழனிவேல் சொன்னார். அந்தத் தொகுதிகளில் இந்தியர்கள் நிறைய இருப்பதாலும் மக்களிடமிருந்து பிஎன்-னுக்கு ஆதரவு கூடுவதாலும் அந்த இடங்கள் அனைத்தும் ‘வெற்றி பெறக் கூடியவை’ என தாம் கருதுவதாக அவர் மேலும் கூறினார்.
மஇகா போட்டியிடும் நாடாளுமன்றத் தொகுதிகளும் வேட்பாளர்களும்
01. கேமிரன் ஹைலண்ட்ஸ்- ஜி பழனிவேல்
02. சிகாமட்-டாக்டர் எஸ் சுப்ரமணியம்
03. தாப்பா- எம் சரவணன்
04. உலு சிலாங்கூர்- பி கமலநாதன்
05. சுங்கை சிப்புட்- எஸ்கே தேவமணி
06. சுபாங்-ஏ பிரகாஷ்ராவ்
07. காப்பார்- ஏ சக்திவேல்
08. கோத்தா ராஜா- எஸ் முருகேசன்
09. தெலுக் கெமாங்-விஎஸ் மோகன்