தம்மைக் களங்கப்படுத்தும் பாலியல் காணோளி ஒன்று வெளியிடப்படும் என்ற மருட்டலுக்கு எதிர்வினையாற்றியுள்ள சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம், அது வெளியிடப்படுவதில் தமக்கும் தம் மனைவிக்கும் “மகிழ்ச்சியே” என்றார்.
“அப்படி ஒன்று வெளிவந்தால் நான் அரசியல் ஈடுபாட்டை நிறுத்துவேன், பின்னர் இனிதே உலகை வலம்வரலாம் என்பதை நினைத்து என் மனைவி மனம் மகிழ்ந்து போகிறார்”, என்று அப்துல் காலிட் சீனமொழி ஊடகங்களுக்கு நேர்காணல் வழங்கியபோது கிண்டலடித்தார்.
2007-இல், ஈஜோக் இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது முதன்முதலாக இப்படிப்பட்ட அசிங்க அரசியலை எதிர்கொண்டதாக அவர் சொன்னார்.
“அப்போது இரவில் உறக்கம் வராது… கேள்விகள், கேள்விகளாகக் கேட்டுக்கொள்வேன்… என்ன வீடியோ என்று நொந்து கொள்வேன்.
“(இப்போது) அதைப் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லை… ஏனென்றால் நான் எதுவும் செய்யவில்லையே”.
போதுமான ஆதாரங்கள் இருந்தால் பிஎன்/அம்னோ இதுவரை அந்த வீடியோவை வெளியிடாமல் இருந்திருக்காது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
‘அஸ்மினுடன் ஆரோக்கியமான போட்டி’
இன்னொரு நிலவரத்தில், தாமும் பிகேஆர் துணைத் தலைவர் முகம்மட் அஸ்மின் அலியும் சிலாங்கூர் மந்திரி புசார் பதவிக்கான போட்டியாளர்கள் என்றும் காலிட் கூறினார். ஆனால், அது, ஆரோக்கியமான போட்டி.
“ஆமாம், (கட்சித் தலைவர் டாக்டர்) வான் அசிசா (வான் இஸ்மாயில்)-வுக்கு மந்திரி புசார் (எம்பி) ஆகும் ஆற்றல் உண்டு என்று நான் கூறும்போது அதே ஆற்றல் மற்றவர்களுக்கும் உண்டு”, என்றார்.
“அரசியலில் சேரும் ஒருவருக்கு இலட்சியம் இல்லை என்றால் ஏதோ கோளாறு என்றுதான் பொருள்”, என்றாரவர்.
ஈஜோக்கைவிட்டு இப்போது போர்ட் கிளாங்கில் போட்டியிடும் காலிட், பக்காத்தான் வெற்றிபெற்றால் மீண்டும் எம்பி ஆக நியமிக்கப்படுவதை விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
ஆனால், கட்சி அப்படி நினைக்கவில்லை என்றும் அது வேறு பலரைக் கருத்தில் கொண்டிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டதை அவர் ஏற்கவில்லை.
“இது எங்கும் நடக்கக்கூடியதுதான். (எந்தக் கட்சியுமே) ஒருவரை மட்டுமே நம்பிக்கொண்டிருக்க முடியாது”, என்று காலிட் கூறினார். அத்துடன் அப்பதவிக்கு நியமிக்கப்படுபவர் மற்ற உறுப்புக்கட்சிகளுக்கும் ஏற்புடையவராக இருத்தல் வேண்டும்.
வரும் தேர்தலில் பக்காத்தான் 45 சட்டமன்ற இடங்களைக் கைப்பற்றும் எனவும் அவர் நம்புகிறார். கடந்த தேர்தலில் 56 சட்டமன்ற இடங்களில் 35-ஐக் கைப்பற்றி அது மாநில அரசை அமைத்தது.
ஆய்வு ஒன்று சிலாங்கூர் எம்பி-க்கு ‘60விழுக்காடு ஆதரவு’ இருப்பதைக் காண்பிக்கிறது என்றாரவர். இளம் பூமிபுத்ராக்கள் பக்காத்தானுடன் சேர்ந்து மாற்றம் காண விரும்புகிறார்கள் என்பதையையும் நடுத்தட்டு மலாய்க்காரர்களுக்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டும் பெர்காசா தலைவர் இப்ராகில் அலியும் பேசுவது பிடிக்கவில்லை என்பதையும் அவ்வாய்வு காண்பித்தது.
சீன வாக்காளர்கள், அம்னோ அச்சமூகத்தைப் புறக்கணித்து வந்திருப்பதால் பக்காத்தானைத்தான் நம்புகிறார்கள். அத்துடன் மசீசவிலும் நெருக்கடி நிலவுகிறது என்றாரவர்.