பிஎன் மீது மூன்று பினாங்கு பிஎன் தலைவர்கள் ‘போர்’ பிரகடனம்

Penang13வது பொதுத் தேர்தலுக்கு வரும் சனிக்கிழமை வேட்பாளர் நியமனங்கள் சமர்பிக்கப்படவிருக்கும் வேளையில்  பினாங்கு பிஎன்-னில் உட்பூசலும் சதி வேலையும் தீவிரமடைந்துள்ளன. அதனால் அந்தக் கூட்டணிக்குள்  குறிப்பாக அம்னோ, கெரக்கான் முகாம்களில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

பக்காத்தான் ராக்யாட்-டுக்கு எதிராக வாக்களிக்கப்படும் எனக் கருதப்படும் மலாய் கிராமப்புற, பல இனத்  தொகுதிகளை நம்பியிருக்கும் பிஎன் -னுக்கு அந்த சூழ்நிலை நல்ல சகுனமாக அமையவில்லை. அவ்விரு  கட்சிகளின் வேட்பாளர்களும் அந்தத் தொகுதிகளில் தான் போட்டியிடுகின்றனர்.

கெரக்கான் பத்து உபான் ஒருங்கிணைப்பாளர் ஏ மோகன், முன்னாள் தாசெக் குளுகோர் எம்பி ஷரிப் ஒமார்,
நடப்பு சுங்கை டுவா சட்டமன்ற உறுப்பினர் ஜாஸ்மின் முகமட் ஆகியோரே அந்த மூவரும் ஆவர்.

பத்து கவான் நாடாளுமன்றத் தொகுதியிலும் தாசெக் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு  முறையே மோகனும் ஷரிப்-பும் முடிவு செய்துள்ளனர்.

அதனால் அவ்விரு தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி ஏற்படக் கூடிய சாத்தியம் உருவாகியுள்ளது.

கீத்தா எனப்படும் Parti Kesejahteraan Insan சின்னத்தில் சட்டமன்றத் தொகுதி ஒன்றில் நிற்கவும் தாம்
எண்ணியுள்ளதாக மோகன் சொன்னார்.penang1

‘பக்காத்தான் ராக்யாட் நட்புறவு சுயேச்சையாக’ தாம் போட்டியிடப் போவதாக கூறிய ஷரிப், எந்தக் கட்சி  சின்னத்தைப் பயன்படுத்த எண்ணியிருப்பதைத் தெரிவிக்கவில்லை.

அவர்கள் இருவரும் தங்கள் முடிவை சனிக்கிழமை வெளியிடுவார்கள்.

penang2ஷரிப்பின் ஆதரவாளரான ஜாஸ்மின், வேட்பாளர் பட்டியலைத் தயாரித்த தலைவர்கள் அந்த விஷயத்தை  உடனடியாக மறு ஆய்வு செய்ய வேண்டும் இல்லை என்றால் மக்கள் கோபத்திற்கு இலக்காக நேரிடும் எனக்  கூறினார்.

‘வேட்பாளர் குழப்பத்துக்கு’ பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயாவ்-வும் பினாங்கு அம்னோ தலைவர்  ஜைனல் அபிடின் ஒஸ்மானும் காரணம் என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

மக்கள் விரும்பும் வேட்பாளர்களை ஒதுக்கி விட்டு தங்களுக்கு ஆதரவானவர்களை அந்த இருவரும் தேர்வு
செய்ததாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.