பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நோர்டின் ஷா ஆலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பது பற்றி மஇகாவையும் மற்ற பிஎன் கட்சிகளையும் சேர்ந்த வேட்பாளர்கள் தங்கள் நிலைபாட்டினைத் தெரிவிக்க வேண்டும். தெரிவிப்பார்களா? என்று சவால் விடுத்துள்ளார் பூச்சோங் எம்பி கோபிந்த் சிங் டியோ.
சுல்கிப்ளியை பிஎன் வேட்பாளராக பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தேர்வு செய்துள்ளார்.
முன்னாள் கூலிம்-பண்டார் பாரு எம்பி ஆன சுல்கிப்ளியை பிஎன் வேட்பாளராக்கியுள்ள நஜிப்பின் செயல், மஇகாவிலும் பிஎன்னின் மற்ற கட்சிகளிலுமுள்ள இந்திய தலைவர்களின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததற்கு ஒப்பாகும் என்று டிஏபி-யைச் சேர்ந்தவரான கோபிந்த் வருணித்தார்.
“இதுகாறும், இந்திய சமூகத்தவரின் மனம் புண்படுமாறு பேசி வந்துள்ள ரித்வான் டீ அப்துல்லா போன்றோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மஇகாவில் பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்துள்ளனர்.
“மஇகா தலைவர் எஸ்.வேள்பாரிகூட ரித்வானுக்கு எதிராக நடவடிக்கை இல்லையென்றால் மஇகாவிலிருந்து விலகப்போவதாக எச்சரித்திருந்தார்.
“இப்படியெல்லாம் நடந்திருக்க, ‘நம்பிக்கை’ என்ற முழக்கமிட்டு இந்திய சமூகத்தினரைத் தம் பக்கத்தில் இழுத்து வைத்துள்ள நஜிப், இந்தியர்களின் உணர்வுகள் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் பெர்காசா ஆளான சுல்கிப்ளியை ஷா ஆலமில் தம் ‘உருமாற்ற வேட்பாளராக’க் களம் இறக்கியுள்ளார்”, என்று கோபிந்த் குறிப்பிட்டார்.
சுல்கிப்ளி ஒரு காலத்தில் பாஸ் கட்சியில் இருந்தவர். அவர் இப்போது பிஎன்- ஆதரவு வேட்பாளராக ஷா ஆலமில், அத்தொகுதி நடப்பு எம்பி ஆன பாஸ் கட்சியின் முகம்மட் ஸின் முகம்மட்டுக்கு எதிராகக் களமிறக்கப்பட்டிருக்கிறார்.
ஷா ஆலின் 100,076 வாக்காளர்களில் 14 விழுக்காட்டினர் இந்தியர்கள்.
சுல்கிப்ளிக்கும் சர்ச்சைக்கும் வெகு தூரமில்லை. இந்து உருவச் சிலைகளை விற்பனை செய்யும் ஒரு இந்தியரின் கடைக்குள் வெள்ளம் புகுந்தபோது இந்து சமூகத்தவரை இழிவுபடுத்துவதுபோல் சுல்கிப்ளி தெரிவித்த கருத்துக்கள் வீடியோவில் பதிவாகி இருந்தன. பிகேஆர் உதவித் தலைவர் என். சுரேந்திரன் உள்பட மாற்றரசுக் கட்சித் தலைவர்கள் பலர், “இந்துக்களையும் அவர்களின் சமயத்தையும் இழிவுபடுத்திய” சுல்கிப்ளியைக் கண்டித்தனர்.
சுல்கிப்ளி தம் செயலுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டார். ஆனால், அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதற்காக இந்து தரப்புகள் ஆத்திரம் கொண்டுள்ளன.
“எனவே, இவ்விவகாரத்தில் மஇகா வாயை மூடிக்கொண்டிருக்குமானால்- பெரும்பாலும் அது அப்படித்தான் இருக்கும், ஏனென்றால் இந்திய சமூகத்தைக் காப்பதற்காக அம்னோவை எதிர்த்து நிற்கும் துணிச்சல் அதற்கு இல்லை- பிறகு வேள்பாரி முன்பு சொன்னதுபோல் மஇகாவைவிட்டு விலகி இத்தேர்தலில் பிஎன்னை ஆதரிக்க வேண்டாம் என இந்தியர்களைக் கேட்டுக்கொள்ள வேண்டும்”, என்றும் கோபிந்த் கூறினார்.