தேர்தல் அறிக்கை மீதான விவாதத்துக்கு நஜிப் வரவில்லை

1 forumநேற்று கோலாலும்பூர், சிலாங்கூர் அசெம்ளி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் கொள்கை அறிக்கை மீதான விவாதத்துக்கு, அழைப்பு அனுப்பப்பட்ட போதிலும்,  எதிர்பார்க்கப்பட்டதுபோல் நஜிப் வரவில்லை.

பெர்சே, நஜிப்புக்கும் மாற்றரசு கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கும் முன்கூட்டியே அழைப்பு அனுப்பி வைத்திருந்தது. ஆனால், நஜிப் அழைப்புக்குப் பதிலளிக்கவில்லை. தம் பிரதிநிதியாக எவரையும் அனுப்பி வைக்கவும் இல்லை.

1 forum1இதனால் விவாத அரங்கில் தனித்துவிடப்பட்ட அன்வார் தம் கூட்டணியின் கொள்கை அறிக்கையைச் சுருக்கமாக விளக்கினார். நடுவர் டாக்டர் பாரூக் மூசாவின் கேள்விகள் சிலவற்றுக்கும் பதிலளித்த அன்வார் பிஎன், பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கைகளையும் ஒப்பிட்டுப் பேசினார்.

விவாத அரங்குக்கு ஆர்வத்துடன் வந்திருந்த சுமார் 3,000பேர் நஜிப் வரவில்லை என்பதற்காக வருத்தப்பட்டவர்களாக தெரியவில்லை. அவர்களில் பலர் மண்டபத்துக்குள் இடமில்லை என்பதால்  வெளியில் நின்றபடி அங்கு வைக்கப்பட்டிருந்த வீடியோ திரைகளில் அரங்கில் நடப்பனவற்றை உற்சாகமாகக் கண்டுகளித்துக் கொண்டிருந்தனர்.

1 forum2அன்வார் அரங்குக்கு வந்தபோது அவருக்கு ஆரவாரமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. சிறிது நேரத்துக்குப் பின்னர், மற்ற நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றபோதும் ஆர்வாரத்துடன் வழி அனுப்பி வைக்கப்பட்டார்.  அவர் திரும்பிச் சென்ற பின்னரும் கூட்டத்தினர் அங்கே தங்கி  பக்காத்தான் தேர்தல் கொள்கை அறிக்கை குறித்து ரபிஸி அளித்த விளக்கத்தைச் செவிமடுத்தனர்.

ஏற்பாட்டாளர்கள், பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையை அறிமுகப்படுத்தியபோது நஜிப் ஆற்றிய உரையையும் பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையின் முக்கிய பகுதிகளைக் காட்டும் படங்களையும் திரையிட்டுக் காண்பித்தார்கள்.

1 forum3நஜிப்பின் உரை இடம்பெற்ற போதெல்லாம் கூட்டத்தினர் கூச்சலிட்டனர். அதே வேளை அன்வார் நல்ல விசயங்களை எடுத்துரைத்தபோது கைதட்டிப் பாராட்டினர்.

அன்வார், தம்முரையில் பக்காத்தான் தேர்தல்அறிக்கை “மக்கள்கூட்டத்தைக் கவரும்” கொள்கைகளைக் கொண்டிருப்பதற்காக தாம் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றார்.

“அவை மக்களைக் கவரும் வகையில் இருப்பதில் என்ன தவறு?”, என்றவர் வினவினார்.

மக்களைக் கவர்வதற்காக நடைமுறைக்கு ஒத்துவராத வாக்குறுதிகளை வழங்குவதுதான் தவறு என்றாரவர்.