இந்து மதத்தை இழிவுபடுத்தி பேசிய பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளி நோர்டின் ஷா ஆலம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டிருப்பது இந்தியர்களிடையே கடும் ஆத்திரத்தை உண்டுபண்ணியுள்ளது. (காணொளியை பார்வையிட இங்கே அழுத்தவும்)
இந்து சமயத்தையும் இந்துக் கடவுள்களையும் பகிரங்கமாக இழிவுபடுத்திப் பேசி, இந்தியர்களின் மனதைப் புண்படுத்திய முன்னாள் கூலிம்-பண்டார் பாரு எம்பியான சுல்கிப்ளியை பிஎன் வேட்பாளராக்கியுள்ள நஜிப்பின் செயல், மஇகாவிலும் பிஎன்னின் மற்ற கட்சிகளிலுமுள்ள இந்திய தலைவர்களின் கன்னத்தில் ஓங்கி அறைந்ததற்கு ஒப்பாகும்.
பிறர் மதத்தைக் குறை சொன்ன சுல்கிப்ளி மீது சட்டம் 298ஏ விதியின் கீழ் குற்றம்சாட்டியிருக்க வேண்டும். ஆனால் நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் காவல்துறையில் செய்யப்பட்டும் இதுநாள்வரை அவர் மீது எந்தவொரு நடவடிக்கையும் இல்லை. இது அம்னோ அரசாங்கத்தின் ஒருதலைப்பட்சமான போக்கையே காட்டுகிறது.
இதேவேளை, சுல்கிப்ளியை பிஎன் வேட்பாளராக பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தேர்வு செய்துள்ளதை கண்டிக்கும் வகையில் நேற்று மதியம் பிரிக்பீல்ட்ஸ் தாமரை தாடகத்திற்கு அருகில் கண்டனக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், நியாட் தலைவர் ஹாஜி தஸ்லிம் உட்பட பல அரசு சார அமைப்புகளின் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள், இந்தியர்களின் மனதை காயப்படுத்திய பெர்காசா உதவித் தலைவர் சுல்கிப்ளியையும், அவரை பிஎன் வேட்பாளராக தேர்வு செய்த நஜிப்பையும் கடுமையாக சாடினர்.
சுல்கிப்ளி இந்து மதத்தையும், இந்தியர்களையும் இழிவுபடுத்திய சர்சைக்குரிய அரசியல்வாதி. அவருக்கு இந்தியர்களிடமிருந்து பரவலான எதிர்ப்பு கிளம்பும் இவ்வேளையில், அவரை பிஎன் வேட்பாளராக நஜிப் அறிவித்துள்ளதானது இந்தியர்களை அப்பட்டமாக அவமதிக்கும் செயல் என அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் செம்பருத்தி இணையத்தளத்திடம் தெரிவித்தனர்.
வந்திருந்தவர்கள் தங்களது ஆத்திரத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்தி பேசிக்கொண்டிருந்த வேளையில் இயற்கையும் தனது பங்கிற்கு சீற்றத்தை வெளிப்படுத்தியது.
ஆம், கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த தாமரை தடாகத்திற்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த நஜிப்பின் படம் பொறிக்கப்பட்ட தேர்தல் பிரச்சார பதாகை இரண்டு துண்டுகளாக கிழிந்து தலைகீழாக தொங்கியது.
இது அங்கு கூடியிருந்தவர்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்தது எனலாம்!