கிளந்தான் பாஸ், கோத்தா பாரு நாடாளுமன்றத் தொகுதியில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரான தகியுடின் ஹசானைக் களமிறக்கப்போவதாக அறிவித்துள்ளது. இதனால், முன்னாள் பிரதமர்துறை அமைச்சர் ஜைட் இப்ராகிமுக்கு அங்கு வேட்பாளராக நிறுத்தப்படும் வாய்ப்பு இல்லை என்றாகிவிட்டது.
அத்துடன் கிளந்தான் மந்திரி புசார் நிக் அப்துல் அசிஸ் நிக் மாட்டின் மகன் நிக் அப்டு (இடம்) பாசிர் மாஸ் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் அது அறிவித்தது. அத்தொகுதியின் நடப்பு எம்பி பெர்காசா தலைவர் இப்ராகிம் அலி ஆவார்.
முன்னாள் உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட கைதியான நிக் அப்டு பாஸ் இளைஞர் பகுதியின் செயல்குழு உறுப்பினராவார். அவர், பாசிர் மாஸ் அம்னோ துணைத் தலைவர் சே ஜொஹன் சே பாவை எதிர்த்துக் களமிறங்குகிறார்.
நிக் அசிஸ் அவரது செம்பாகா தொகுதியில் போட்டியிடுகிறார்.
முன்னதாக பாஸும் பக்காத்தானும், முன்னாள் கித்தா கட்சித் தலைவரான ஜைட்டை கோத்தா பாருவில் களமிறக்குவது பற்றி பரிசீலித்து வருவதாகக் கூறப்பட்டிருந்தது.
நேற்று ஜைட் தம் வலைப்பதிவில் தாம் அத்தொகுதி வேட்பாளராகக் களமிறக்கப்படும் வாய்ப்பு மங்கி வருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.
“நாடும் மனசாட்சியும்” என்ற தலைப்பில் கட்டுரை இட்டிருந்த ஜைட், “சில நேரங்களில் இப்படி ஓய்வாக இருப்பதைவிட்டு பரபரப்புமிக்க அக்கூட்டத்துடன் சேர்ந்துகொள்ள மனம் விரும்புகிறது, ஆனால், அது நடக்காது எனத் தெரிகிறது” என்று கூறியிருந்தார்.
புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதிக்காகவும் சமத்துவத்துக்காகவும் ஜனநாயக உரிமைகளுக்காகவும் பாடுபடும் நல்லதொரு அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.