பாஸ் கட்சியால் பிஎஸ்எம் தலைவர் தொகுதியில் சர்ச்சை தொடர்கிறது

1electகோத்தா டமன்சாரா சட்டமன்றத் தொகுதியில் பிஎஸ்எம் தலைவர் நாசிர் ஹஷிம் பிகேஆரின் சின்னத்தில் போட்டியிடுவார் எனப் பேசி முடிவுகாணப்பட்டுள்ள வேளையில் இப்போது பாஸ் கட்சியால் பிரச்னை உருவாகும்போல் தெரிகிறது. அத்தொகுதிமீது அதுவும் கண்வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது.

சினார் ஹரியானில் வெளியாகியுள்ள ஒரு செய்தியை அடுத்து இப்படியொரு பேச்சு அடிபடுகிறது. சுபாங் தொகுதி பாஸ் துணைத் தலைவர் ரோஸ்லான் அபு பக்கார், பிஎஸ்எம் பக்காத்தான் ரக்யாட்டின் உறுபுக்கட்சிகளில் ஒன்றல்ல என்பதால் அத்தொகுதியில் பாஸ் போட்டியிட விரும்புவதாகக் கூறினார் என அச்செய்தி கூறிற்று.

“மேலும் 2004-இல் பாஸ் அங்கு போட்டியிட்டிருக்கிறது. அத்துடன் பிஎஸ்எம்மால் கோத்தா டமன்சாரா வாக்காளர்களைக் கவர முடியும் என்பதிலும் எங்களுக்கு நம்பிக்கை இல்லை”, என்று அவர் கூறியதாகவும் அந்நாளேடு தெரிவித்துள்ளது.

பாஸ் நுழைந்தால் கோத்தா டமன்சாராவில் மும்முனை போட்டி நிகழலாம்.

1 elect1பிஎஸ்எம் அதன் தலைமைச் செயலாளர் எஸ்.அருட்செல்வனை (வலம்) செமிஞி சட்டமன்றத் தொகுதியில் களமிறக்க விரும்புவதால் அங்கும்கூட மும்முனை போட்டி உருவாகும்போல் தெரிகிறது.

ஏனென்றால், பிகேஆர் ஏற்கனவே அதன் செர்டாங் தொகுதித் தலைவர் ஹமிடி ஹசன் அங்கு போட்டியிடுவார் என்று அறிவித்துள்ளது.

பிஎன் வேட்பாளராக அங்கு, அம்னோ செமிஞி தொகுதித் தலைவர் ஜொஹன் அப்துல் அசிஸ் போட்டியிடுகிறார்.

பேராக் டிஏபி செயலாளர் இங்கா கொர் மிங், அக்கட்சி பிஎஸ்எம்-மை டிஏபி சின்னத்தில் போட்டியிட அனுமதிக்காது என்று அறிவித்துள்ளார்.

“ஜெலாபாங்கில் டிஏபிதான் போட்டியிடுவது என பக்காத்தான் ரக்யாட் முடிவு செய்துள்ளது. எனவே, பிஎஸ்எம் ஒரே ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் மட்டுமே போட்டியிடலாம். டிஏபி-க்கு இடமளித்து பிஎஸ்எம் ஒத்துழைக்க வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.

“அங்கு போட்டியிடுவது  என்ற முடிவில் பிஎஸ்எம் உறுதியாக இருந்தால் மும்முனை போட்டியில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு”, என்றாரவர்.

கடந்த தேர்தலில் ஜெலாபாங்கில் டிஏபி-இன் ஹீ இட் பூங் போட்டியிட்டார். ஆனால் வெற்றிபெற்ற பின்னர் அவர், தம்மைச் சுயேச்சை உறுப்பினர் எனக் கூறிக்கொண்டு பிஎன்-ஆதரவு பிரதிநிதியாக மாறினார்.

TAGS: