நடவடிக்கை மய்யங்கள் இயங்கவில்லை எனச் சொல்லப்படுவதை பினாங்கு அம்னோ மறுக்கிறது

zainalபினாங்கு பிஎன் வேட்பாளர் பட்டியல் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக அந்த மாநில அம்னோவின் பல  நடவடிக்கை மய்யங்கள் மூடப்பட்டு விட்டது எனச் சொல்லப்படுவதை அந்த மாநில அம்னோ தொடர்புக் குழுத்  தலைவர் ஜைனல் அபிடின் ஒஸ்மான் மறுத்துள்ளார்.

“இது வரை எந்த நடவடிக்கை மய்யமும் மூடப்படவில்லை. அவை மூடியிருந்ததாக காணப்பட்டால் அதற்குக்  காரணம் எங்கள் கட்சி ஊழியர்கள் பகல் நேரத்தில் வேலை செய்வதால் மாலையில் தான் அவர்கள் அவற்றைத்  திறப்பதாகும் ,” என ஜைனல் அபிடின் நிபோங் தெபாலில் கூறினார். அவர் அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

“கட்சி சுவரொட்டிகளோ அல்லது கொடிகளோ கிழிக்கப்படவில்லை. 200 கட்சி ஊழியர்களில் 10 பேர் மட்டுமே  எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். பிரச்சார காலம் நெருங்க நெருங்க பரபரப்பு அதிகரிக்கும். அப்போது நடவடிக்கை
மய்யங்கள் திறந்திருக்கும்,” என்றார் அவர்.

“ஏப்ரல் 20 வேட்பாளர் நியமன நாளுக்குப் பின்னர் நாங்கள் முழு மூச்சாக பிரச்சாரத்தில் ஈடுபடுவோம். அந்தப் பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்பட்டு விடும். வேட்பாளர் பட்டியல் மீது ஏமாற்றமடைந்துள்ள எங்கள் ஆதரவாளர்களைச் சாந்தப்படுத்தும் பணியை நாங்கள் தொடங்கியுள்ளோம்,” என அவர் உறுதி அளித்தார்.

செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியலில் இடம் பெறாத நடப்பு நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களுடைய ஆதரவாளர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளதால் 70 விழுக்காடு நடவடிக்கை மய்யங்கள் இயங்கவில்லை எனக் கூறப்படுவது பற்ரி ஜைனல் கருத்துரைத்தார்.