சங்கப்பதிவதிகாரி அலுவலகம் (ஆர்ஓஎஸ்) டிஏபி மத்திய நிர்வாகக் குழுவை இரத்துச் செய்திருந்தாலும் அக் கட்சி பொதுத் தேர்தலுக்கு வேட்பாளர்களை நியமனம் செய்வதற்குத் தடை ஏதுமில்லை.
இதைத் தேர்தல் ஆணைய (இசி)த் தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப் இன்று பிற்பகல் உறுதிப்படுத்தினார்.
“அதனால் பாதிப்பில்லை. அவர்கள் தேர்தலில் போட்டியிடலாம்”, என்று அசீஸ் மலேசியாகினிக்குக் குறுஞ் செய்தி அனுப்பியிருந்தார்.
ஆர்ஓஎஸ் டிஏபி மத்திய நிர்வாகக் குழுவை இரத்துச் செய்வதாக அனுப்பியுள்ள கடிதத்தைச் சுட்டிக்காட்டி அதனால் அக்கட்சி தேர்தலுக்கு வேட்பாளர்களை நியமனம் செய்வது பாதிக்கப்படுமா என்று அப்துல் அசீசிடம் வினவியதற்கு அவர் முன்சொன்னவாறு மறுமொழி அளித்திருந்தார்.
கடந்த ஆண்டு டிஏபி கட்சித் தேர்தல்களின் போது வாக்குகளைக் கணக்கிடுவதில் ஏற்பட்ட ‘தொழில் நுட்பக் குளறுபடி’காரணமாக அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சிப் பொறுப்பாளர்களை அங்கீகரிப்பதற்கில்லை என ஆர்ஓஎஸ் அக்கட்சிக்குக் கடிதம் அனுப்பி வைத்துள்ளது.
இதன் தொடர்பில் விசாரணை நடப்பதால் விசாரணை முடியும்வரை மத்திய நிர்வாகக் குழுவை முடக்கி வைக்க வேண்டும் என்றும் ஆர்ஓஎஸ் உத்தரவிட்டுள்ளது.
ஆர்ஓஎஸ், டிஏபி-க்கு அனுப்பிய கடிதத்தின் பிரதி ஒன்று இசிக்கும் அனுப்பப்பட்டது.