பினாங்கை பிஎன் கூட்டணி கைப்பற்றினால், இப்போதைய மாநில அரசு மூத்த குடிமக்களுக்கு வழங்கும் ரொக்க அன்பளிப்புகள் இருமடங்காக்கப்படும். பினாங்கு பிஎன் தலைவர் தெங் சாங் இயோ இவ்வாறு உறுதிகூறியுள்ளார்.
லிம் குவான் எங் நிர்வாகம் தொடங்கிய இக்கொள்கையை பிஎன் அரசு தொடருமா என்று கேட்கப்பட்டதற்கு,“இக் கொள்கைகளைத் தொடர்வதுடன் அதை இருமடங்காக்குவோம்”, என்று அவர் கூறினார்.
தாபோங் ஹாஜி தலைமையத்தில் பினாங்கு பிஎன் தேர்தல் கொள்கை அறிக்கையை வெளியிட்ட பின்னர் தெங் செய்தியாளர்களிடம் பேசினார். அச்செய்தியாளர் கூட்டத்தில் அவருடன் முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹமட் படாவி, மாநில அம்னோ தலைவர் சைனல் அபிடின் ஒஸ்மான், மாநில மக்கள் முற்போக்குக் கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் எம்.லோகபாலன், மாநில மசீச தொடர்புக்குழுத் தலைவர் இங் யென் யென் முதலியோரும் கலந்துகொண்டனர்.
19-அம்சங்களைக் கொண்ட தேர்தல் கொள்கை அறிக்கையை பிஎன் ‘வாக்குறுதி’என்று வருணித்த தெங், மே 5 தேர்தலில் வெற்றிபெற்றால் அது அமல்படுத்தப்படும் என்றார்.
2009-இல் பக்காத்தான் நிர்வாகம் அறிமுகம் செய்த ரொக்க அன்பளிப்பு, தொகை குறைவுதான் என்றபோதிலும், 60-வயதைத் தாண்டிய மூத்த குடிமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அத்துடன் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு ரிம1,000 வழங்குவதையும் அது ஒரு கொள்கையாகக் கொண்டிருக்கிறது. ஒரு தடவை மட்டுமே இது வழங்கப்படும்.
இது பொதுத் தேர்தலை ஒட்டிக் கொண்டுவரப்பட்ட கொள்கை அல்ல. ஏனென்றால் அதற்குமுன்பே இது கொண்டுவரப்பட்டு விட்டது. அதனாலேயே இது பலருடைய பாராட்டைப் பெற்றுள்ளது.
அரசு நிர்வாகம் பற்றி தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படாதது ஏன் என்று தெங்கிடம் வினவப்பட்டது.
பக்காத்தான் அதன் அறிக்கையில் அரசு நிர்வாகத்தில் CAT (competency, accountability and transparency திறமை, பொறுப்புடைமை, வெளிப்படைத்தன்மை) கடைப்பிடிக்கப்படும் என்றும் இப்போதுள்ள திறந்த டெண்டர்முறையும் பின்பற்றப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தது.
“இதை இரண்டு வாரங்களுக்குமுன் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிமுகம் செய்த பிஎன் தேசிய கொள்கை அறிக்கையிலேயே குறிப்பிட்டாயிற்று”,என தெங் பட்டென்று பதிலளித்தார்.
சொத்துப் பிரகடனம் பற்றிக் குறிப்பிட்டவர், “எங்கள் சொத்துக்களை மட்டுமல்லாமல் எங்கள் மனைவிமார் வாரிசுகளின் சொத்துக்கள் என்னென்ன என்பதையும் அறிவிப்போம்”, என்றார்.