பேராக் புக்கிட் சண்டான் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பை அம்னோ மகளிர் துணைத் தலைவி கமிலியா இப்ராஹிம் நிராகரித்து விட்டதாக பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் கூறுகிறார்.
ஆகவே பொதுத் தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை, பிஎன் அவரது பணிகளைப் பாராட்டவில்லை என்ற கேள்வியே எழவில்லை என அவர் சொன்னார்.
அடுத்த பேராக் மாநில அரசாங்கத்தை அமைக்குமானால் மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் பதவியை
கமிலியாவுக்கு வழங்குவதும் அந்த வாய்ப்பில் அடங்கியுருந்ததாக நஜிப் மேலும் தெரிவித்தார். ஆனால்
கமிலியா அதனை ஏற்கவில்லை.
“அது அவருடைய முடிவு. அம்னோ மகளிர் துணைத் தலைவிக்கு இடமளிக்கப்படவில்லை. பிஎன்
பாராட்டவில்லை என்ற கேள்வியே இல்லை. அவர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட விரும்பினார்,
ஆனால் மாநிலச் சட்டமன்றத் தொகுதியே மிகவும் பொருத்தமானது என நாங்கள் கருதினோம்.”
“காலஞ்சென்ற லிம் கெங் எய்க் கெராக்கான் தலைவராக இருந்த போது மாநில ஆட்சி மன்ற உறுப்பினர்
பதவியை ஏற்றுக் கொண்டார். மாநில ஆட்சி மன்ற உறுப்பினர் பதவி முக்கியமான பொறுப்பாகும்.
நஜிப் கோலாலம்பூரில் தனித்து வாழும் தாய்மார்களுக்கான Juwita எனப்படும் அமைப்பைத் தொடக்கி வைத்த
பின்னர் நிருபர்களிடம் பேசினார்.
அம்னோ மகளிர் பிரிவு உயர் நிலைத் தலைவிகள் வேட்பாளர் பட்டியலில் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாகவும் பெண்களுக்கு அவமானத்தைத் தந்துள்ளதாகவும் கமிலியா கூறியுள்ளதாக வெளியான செய்தி குறித்து அவர் கருத்துரைத்தார்.
பெர்னாமா