எல்லை தாண்டல்- பிஎன் வியூகத்தில் தொடக்கநிலை தவறுகள்

1watchதேர்தல் கண்ணோட்டம்  

1watch1கண்ணோட்டம் விடுபவர் Bridget Welsh

தேர்தல் பரப்புரைகளை மதிப்பிடும்போது அதில் வியூகங்கள் நகர்த்தப்படுவதன் நோக்கங்களையும் அதனால் ஏற்படும் தாக்கத்தையும் கருத்தில் கொள்வது முக்கியமாகும்.

அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களில் பிஎன் செய்த முடிவுகள் வாக்காளரிடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி மாற்றரசுக் கட்சியின் நிலையை வலுப்படுத்தியுள்ளது.

அவையாவன:

1. பாஸ் கட்சிக்கு எதிராக செக்ஸ் வீடியோக்களைப் பயன்படுத்தியது. அடுத்து  மாற்றரசுக் கட்சியின் மற்ற அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் செக்ஸ் வீடியோக்கள் பயன்படுத்தப்படலாம்.

2. பெர்காசா தலைவர் சுல்கிப்ளி நோர்டினை ஷா ஆலம் வேட்பாளராக்கியது.

3. டிஏபி-இன் மத்திய நிர்வாகக் குழுவை அங்கீகரிப்பதில்லை என்று சங்கப் பதிவதிகாரி அலுவலகம் செய்துள்ள முடிவு.

இவை ஒவ்வொன்றையும் தனித் தனியே பார்ப்போம்:

1.களங்கப்படுத்தும் காணொளிகள்

1999 தொடங்கி செக்ஸைக் கருவியாக்கிக்கொண்டு தாக்குதல் நடத்தி ஒருவரது பெயரைக் களங்கப்படுத்துவது பிஎன்னின் பாணியாகி விட்டது. அத்தாக்குதலுக்கு ஆளானவர்கள்- பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், மசீச தலைவர் சுவா சொய் லெக், பிகேஆர் துணைத் தலைவர் அஸ்மின் அலி, அண்மையில் பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி எனப் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

1 watch2அம்னோ கட்சித் தேர்தல்களின்போதுகூட பல தலைவர்கள்மீது செக்ஸ் வீடியோ தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. பராமரிப்பு அரசாங்கத்தின் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கூட அதிலிருந்து தப்பவில்லை.  சம்பந்தப்பட்ட மனிதரின் பெயரைக் கெடுப்பது- அது ஒன்றுதான் அதன் நோக்கமாகும்.

செக்ஸ் வீடியோவைப் பயன்படுத்துவதால் வாக்காளர்களைத் தங்கள் பக்கம் இழுக்க முடியும் என்று நடப்பு அரசாங்கம் நினைப்பதுபோலத் தெரிகிறது.  இது ஓர் உத்தி என்றால் சில கேள்விகள் எழுவதைத் தடுக்க முடியவில்லை.  ஒருவரைக் களங்கப்படுத்த  பிஎன் செக்ஸ் வீடியோவைத்தான் கருவியாகக் கொள்ள வேண்டுமா? இது பயனளிக்கும் என்று பிஎன் உண்மையிலேயேநினைக்கிறதா? அது பயனளிப்பதில்லை என்பது தெரிந்தும்கூட அதை விடாமல் பிடித்துக்கொண்டிருப்பது ஏன்?

அடிப்படையில் ஒழுக்கநெறிகள் மதிக்கப்படுவதில்லை என்பதைத்தான் இது காண்பிக்கிறது. பல காணொளிகள் உண்மையானவை அல்ல என்பதும் தொழிநுட்பத் துணை கொண்டு உருவாக்கப்பட்டவை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும் செக்ஸ் வீடியோக்களைப் பயன்படுத்தினால் மலேசிய வாக்காளர்களர்களின் ஆதரவைத் திருப்பி விடலாம் என்று அவர்கள் தங்களுக்குத் தாங்களே ஒரு அனுமானத்துக்கு வந்திருப்பதுபோலத் தெரிகிறது.

அன்வார்மீது 1999-இல் குதப்புணர்ச்சி குற்றம்சாட்டப்பட்டது அவர்களையே திருப்பித் தாக்கியது. ஊடகங்களில் அவர்மீது தொடுக்கப்பட்ட இடைவிடாத தாக்குதல்களும் இரண்டாவது குதப்புணர்ச்சி வழக்கும் அவரைக் களங்கப்படுத்துவதற்குப் பதில் மேலும் பல கேள்விகளைத்தான் எழுப்பின. இரண்டாவது குதப்புணர்ச்சி குற்றச்சாட்டையும் அது தொடர்பான காணொளிகளையும் பற்றி பெரும்பாலான மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கருத்துக்கணிப்புகள் காட்டின. அவை மட்டமான அரசியல் தந்திரம் என்பதே அவர்களின் நினைப்பு.

அவர்கள் யாரைக் குறிவைத்து இந்த ஆபாச வீடியோக்களை உலவ விடுகிறார்களோ அந்தப் பழைமைப்போக்குள்ள மலாய்க்காரர்கள், இதை இழிவான செயலாகத்தான் நினைக்கிறார்கள். அவை நம்பத்தக்கவை அல்ல என்பதுதான் பொதுமக்கள் பலரின் கருத்தாகும்.

1 watch3 videoஇதற்குக் கடந்த வாரம் வெளியிடப்பட்ட முஸ்தபா அலியைச் சித்திரிப்பதாகக் கூறும் வீடியோ தெளிவான சான்றாகும். ஏனோ தெரியவில்லை,  பாஸ் கட்சியில் செல்வாக்கு மிக்கவராகவும் மிகவும் மதிக்கப்படுபவருமான மூத்த தலைவர் ஒருவரை நஜிப்பின் அம்னோ களங்கப்படுத்தும் முயற்சியில் இறங்கியது.

வேடிக்கை என்னவென்றால், அத்தாக்குதல் மாற்றரசுக் கட்சியில் தளர்ச்சியை உண்டுபண்ணவில்லை, மாறாக புதிய அரசாங்கத்தை அமைக்கும் முயற்சியில் ஒன்றித்து பாடுபட வேண்டும் என்ற அவர்களின் மன உறுதியைத்தான் மேலும் வலுப்படுத்தியுள்ளது. ஒரு தரப்பின்மீது தாக்குதல் நடத்தும்போது அத்தரப்பினர் தங்களைத் தற்காப்பதில் மேலும் முனைப்புக் காட்டுவார்கள். பேராக் நெருக்கடிக்குப் பின்னர்  மாற்றரசுக் கட்சியில் இதுதான் நடந்து வருகிறது.

களங்கப்படுத்தும் அரசியலால் பிஎன்னுக்குத்தான் பாதிப்பு.  வாக்களிப்பு முறையில் மாற்றத்தை ஏற்படுத்த அது உதவாது.

2. சுல்கிப்ளியை வேட்பாளராக்கியது

முடிவெடுப்பது, சந்தேகத்துக்கு இடமளிக்காத முடிவைச் செய்தல் மிகவும் முக்கியமாகும். ஆனால், ஒரு வழக்குரைஞரான சுல்கிப்ளி நோர்டின் அம்னோ வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டது பல சந்தேகங்களைக் கிளப்பி விட்டிருக்கிறது.

1 watch zulஅவர் குறுகிய மனப்போக்குக் கொண்டவர் என்றும் இந்து சமயத்தையும் கிறிஸ்துவ சமயத்தையும் தாறுமாறாக விமர்சிப்பவர் என்றும் கருதப்படுபவர்.

சுல்கிப்ளி இந்து சமயத்தை இழிவுபடுத்திப் பேசுவதைக் காண்பிக்கும் காணொளி இணையத்தளத்தில் பரவலாக வலம் வந்தது. அது வாக்களிக்கத் தயாராகிக் கொண்டிருக்கும் இந்திய சமூகத்தினரிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவது உறுதி.

இந்த உத்தியும் சில கேள்விகளை எழுப்புகிறது. சுல்கிப்ளியின் (வலம்) கருத்துகளை நஜிப் ஏற்கிறாரா? பிஎன் வேட்பாளர் பட்டியலில் பல்லின சகிப்புத்தன்மைக்கு மரியாதை இல்லையா?

இதை மலாய்க்காரர்-அல்லாதார் மட்டுமல்ல மலாய் இன இளம் தலைமுறையினர்கூட விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் இன அச்சத்தை ஏற்படுத்தி அதை ஊன்றுகோலாகக் கொண்டு ஏற்றம் காண்பதில் அவர்கள் பெருமை கொள்ள மாட்டார்கள்.

3. ஆர்ஓஎஸ் தொல்லை

நேற்று ஆர்ஓஎஸ் டிஏபி-க்கு அனுப்பி வைத்த கடிதம், அரசியல் கட்சிகளை அச்சுருத்த அரசுத்துறைகள் பயன்படுத்தப்படும் மட்டமான தந்திரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

இந்தப் பழக்கம் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது. குறிப்பாக சாபாவிலும் சரவாக்கிலும் இப்படிப்பட்ட சம்பவங்கள் நிறையவே நடந்துள்ளன. ஆர்ஓஎஸ் அரசியல் நோக்கத்துகாக பயன்படுத்தப்படுவது அதற்குள்ள நற்பெயரைக் கெடுப்பதுடன் நாட்டின் அரசுத்துறைகள் மீதுள்ள நம்பிக்கைக்கும் குழி பறிக்கிறது.

மக்கள் நியாயத்தை மதிக்காதவர்கள் என்றவர்கள் நினைக்கிறார்களா?  இப்படிப்பட்ட அநியாயத்தை மலேசியர்கள் பொறுத்துக்கொள்வார்கள் என்பது அவர்களின் நினைப்பா?

1 watch dapடிஏபி-இன் மத்திய நிர்வாகக் குழுவை அங்கீகரிக்க மறுத்திருப்பது அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி அக்கட்சியில் சீர்குலைவையும் குழப்பதையும் உண்டுபண்ணும் பிஎன் தந்திரம் என்பதைத்தான் காண்பிக்கிறது.

இதனால் மாற்றரசுக் கட்சிகளுக்கிடையில் ஒத்துழைக்கும் உணர்வுதான் மேலும் வலுப்பட்டுள்ளது. டிஏபி இப்போது பாஸ் மற்றும் பிகேஆர் சின்னங்களில் போட்டியிடும் வாய்ப்பும் உள்ளது.இது அவை கொண்டுள்ள பரஸ்பர நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது.

அந்த வகையில் ஆர்ஓஎஸ் நடவடிக்கையால் அவற்றின் பிணைப்பு மேலும் வலுப்பட்டுள்ளது.

பொது உறவு போரில் தோல்வி   எந்தப் பரப்புரையிலும் சரியான உபாயத்தைப் பயன்படுத்துவது முக்கியமாகும். அதைப் பயன்படுத்துவதற்கும் ஒரு வரம்பு உண்டு. வரம்பு மீறினால் பயன்படுத்துபவரையே அது பதம் பார்த்துவிடும்.  பிஎன்னின் அண்மைய நகர்வுகள் அவர்கள் முடிவு செய்யும்போது மக்களிடம் அம்முடிவுகள் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும் என்பதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை என்பதைத்தான் காண்பிக்கின்றன..

பிஎன் கடைப்பிடிக்கும் உபாயங்கள் ஏற்கத்தக்கவையாகத் தோன்றவில்லை. நியாய-அநியாயத்தைப் பகுத்தறியும் மலேசியர்களின் அறிவுத்திறனை அவர்கள் குறைத்து மதிப்பிட்டு விட்டார்கள் என்றுதான் தெரிகிறது. வாக்காளர்கள் பற்றிய அவர்களின் அனுமானம் வாக்காளர்களின் அறிவுத்திறனுக்கே ஒரு இழுக்காகும்.

மலேசிய அரசியலில் உணர்வுகள் முக்கிய சக்தியாக விளங்கி வந்திருக்கின்றன. பணத்தைவிட, அரசு இயந்திரத்தைவிட அவை வலிமை வாய்ந்தவை.  அவைதாம் யாருக்கு வாக்களிப்பது என்று வாக்காளர்களை முடிவெடுக்க வைக்கின்றன. வாக்காளர்களின் அந்த உணர்வுகளை அறிவதில் பிஎன் கூட்டணி  இதுவரை தப்புக்கணக்குத்தான் போட்டு வந்திருக்கிறது. ================================================================================================

DR BRIDGET WELSH சிங்கப்பூர் நிர்வாக பல்கலைக்கழகத்தில் அரசியல் இணைப் பேராசிரியர். மலேசியவைச் சுற்றிவந்து  மலேசியாகினிக்கு 13வது பொதுத் தேர்தல் பற்றிய ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வருகிறார். அவரது இணையத்தள முகவரி [email protected].