முதுநிலை வழக்குரைஞர் சிசில் அப்ராஹமை வழக்குரைஞர் மன்றம் வழக்குரைஞர்-சொலிஸிட்டர் ஒழுங்கு நடவடிக்கை வாரியத்துக்கு இந்த மாதம் கொண்டு சென்றுள்ளது. 2008ம் ஆண்டு பாலசுப்ரமணியம் செய்த இரண்டாவது சத்தியப் பிரமாணத்தில் அவருக்குப் பங்கு இருப்பதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து அவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
அந்தத் தகவலை வழக்குரைஞர் மன்றத் தலைவர் கிறிஸ்டபர் லியோங் உறுதிப்படுத்தினார். இரண்டாவது சத்தியப் பிரமாணத்தை வரைந்ததில் சிசில் தவறாக நடத்து கொண்டுள்ளதாக புகார் செய்யப்பட்டுள்ளது.
“ஆமாம், நாங்கள் அதிகாரப்பூர்வமாக வழக்குரைஞர்-சொலிஸிட்டர் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவிடம் புகார் செய்து சிசிலை விசாரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம்,” என லியோங் தொடர்பு கொள்ளப்பட்ட போது மலேசியாகினியிடம் தெரிவித்தார். இந்த மாதத் தொடக்கத்தில் அந்தப் புகார் செய்யப்பட்டதாகவும் அவர் சொன்னார்.
அந்த விவகாரம் மீது தனது வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டியிருந்ததால் வழக்குரைஞர் மன்றம் நடவடிக்கை எடுப்பதற்கு காலம் பிடித்தது என்றும் லியோங் சொன்னார்.
அந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மை இருக்கிறதா என்பதை வாரியம் முதலில் ஆய்வு செய்து அவை மீறல்களா என்பதை முடிவு செய்யும். அதற்கு பின்னரே தேவைப்படால் அது நடவடிக்கை எடுக்கும்.
குற்றவாளி என அறிவிக்கப்பட்டால் அவர் ஒழுங்கு நடவடிக்கை வாரிய முடிவை எதிர்த்து விண்ணப்பம் செய்வதற்கு உரிமை பெற்றுள்ளார்.