“கனி தாம் மந்திரி புசாராக இருந்த 18 ஆண்டு காலத்தில் ஜோகூருக்கு பல சாதனைகளைக் கொண்டு வந்துள்ளார்.”
வேட்பாளர் நியமன நாளன்று தமது அரசியல் எதிரியிடமிருந்து ஒருவர் இது போன்ற அங்கீகாரத்தைக் கொடுப்பார் என யாரும் எதிர்பார்க்க முடியாது. ஆனால் அதனை லிம் கிட் சியாங் வழங்கினார்.
கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதிக்கான டிஏபி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் லிம் நேற்று
செய்தியாளர்களிடம் பேசினார்.
அதே வேளையில் அடுத்த 15 நாட்களுக்கு ‘கனவான்’ அடிப்படையில் பிரச்சாரம் இருக்க வேண்டும் என்றும்
அவர் வலியுறுத்தினார்.
புள்ளி விவரங்கள் அடிப்படையில் பிரச்சாரம் செய்யவும் தீய அரசியலை ஒதுக்குவதாகவும் ஒப்பந்தம் செய்து
கொள்ள முன் வருமாறு கனிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் லிம் சொன்னார்.
தாம் இன்னும் கனியின் பதிலுக்குக் காத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“தனிப்பட்ட தாக்குதல்கள் இருக்கக் கூடாது. இனம், பணம் அடிப்படையிலான கறை படிந்த அரசியல் இருக்கக் கூடாது,” என அவர் மலாய் மெயில் நாளேட்டிடம் தமது தேர்தல் நடவடிக்கை அறையில் கூறினார்.
“புள்ளி விவரங்களை பேசித் தீர்க்க நாங்கள் விரும்புகிறோம். ஜோகூருக்கு டத்தோ அப்துல் கனி ஒஸ்மான் பெரிய முன்னேற்றத்தையும் கொண்டு வந்துள்ளார் என நான் கூறியதின் அர்த்தத்தையும் சொல்ல விரும்புகிறேன்.’
“நாங்கள் கடந்த கால அரசியலில் ஒட்டிக் கொண்டிருக்க விரும்பவில்லை. கனி பழைய அரசியல் பாணியைப்
பிரதிபலிக்கிறார்.”
“நாம் இன்னும் நன்றாக இயங்க முடியும். நாம் தைவான், ஹாங்காங், சிங்கப்பூர் ஆகியவற்றுக்கு இணையாக
ஏன் அவற்றை விட மேலான நிலையில் நாம் இருக்க வேண்டும். ஆனல் பின் தங்கியுள்ளோம்.”
“நாம் நாடு என்ற முறையில் முன்னேற வேண்டுமானால் பழைய கொள்கைகளைத் தொடரக் கூடாது.
சீனர்களாக இந்தியர்களாக மலாய்க்காரர்களாக அல்லாமல் நாம் மலேசியர்களாக பிரச்சாரம் செய்ய வேண்டும்,” என லிம் வலியுறுத்தினார்.
“நாம் எதிர்கால அரசியலை பிரதிநிதிக்கிறோம். அவர்கள் நீண்ட காலமாக இருந்து விட்டனர்.”
1969ம் ஆண்டு டிஏபி தலைமைச் செயலாளராக பொறுப்பேற்ற லிம் -முக்கு அதே மாதிரி சொல்ல முடியுமா
என்று அவரிடம் வினவப்பட்டது.
“ஆனால் நான் அரசாங்கத்தில் இல்லை!” என அவர் உடனடியாகப் பதில் அளித்தார்.
“அம்னோ அதன் தோழமைக் கட்சிகளின் தோள்கள் மீது நின்று கொண்டிருக்கிறது. பக்காத்தான் ராக்யாட்டில்
நாங்கள் அனைவரும் மலேசியர்கள் என்ற முறையில் சமமானவர்கள்.”