மலாக்கா கோத்தா லக்ஸ்மணா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுவதால் நெருக்குதலுக்கு இலக்காகி இருக்கும் டிஏபி மூத்த உறுப்பினர் சிம் தொங் ஹிம், நேற்று கட்சி வெளியிட்ட காலக் கெடுவைத் தொடர்ந்து நீக்கப்படுவதை எதிர்நோக்கவும் ஆயத்தமாக இருக்கிறார்.
டிஏபி சின்னத்தில் கோத்தா மலாக்கா நாடாளுமன்றத் தொகுதியைத் தக்க வைத்துக் கொள்ளவும் போட்டியிடும் சிம், மே 5ம் தேதி தேர்தலில் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற முடியும் என உறுதியாக நம்புகிறார்
நான் எந்தத் தொகுதியில் வெற்றி பெற்றாலும் மீண்டும் கட்சியில் சேர விண்ணப்பிப்பேன். கட்சி என்னை ஏற்றுக் கொள்ளா விட்டால் இடைத் தேர்தலுக்கு வழி விடும் பொருட்டு என் இடத்தைக் காலி செய்வேன்,” என அவர் வெளிப்படையாகவே சொன்னார்.
தமது ‘சுயேச்சை’ என்ற முத்திரையை கைவிட்டு விட்டு கோத்தா லக்ஸ்மணா போட்டியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என உத்தரவிடும் எந்தக் கடிதமும் நேற்று மாலை வரையில் தமக்குக் கட்சியிடமிருந்து
கிடைக்கவில்லை என 65 வயதான சிம் குறிப்பிட்டார்.
சிலாங்கூரில் தெராத்தாய் சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடும் அதன் நடப்பு உறுப்பினர்
ஜெனிஸ் லீ-யும் சிம்-மும் விலகிக் கொண்டு தங்கள் நடவடிக்கைக்காக கட்சியிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங்-கும் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் லிம் கிட் சியாங்கும் ஆணையிட்டுள்ளனர்.
“மற்றவர்களிடமிருந்து அந்தச் செய்தி எனக்குக் கிடைத்தது என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன் என்றாலும்
நேற்று மாலை வரையில் எனக்கு எந்த எச்சரிக்கைக் கடிதமும் கிடைக்கவில்லை,” என்றும் சிம் சொன்னார்.