டிஏபி ஆலோசகர் லிம் கிட் சியாங் குறித்து தெரிவித்த கருத்துக்களுக்கு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் மூன்று நாள்களுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வழக்குரைஞர் கர்பால் சிங் கோரிக்கை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கேலாங் பாத்தா நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளரான லிம்முக்கு எதிராக மகாதிர் தம் வலைப்பதிவில் தெரிவித்த கருத்துகள் தொடர்பில் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மகாதிர் ஏப்ரல் 11-இல் கேலாங் பாத்தா என்ற தலைப்பில் இட்டிருந்த பதிவு, லிம்மீது அவதூறு கூறுகிறது நேற்று அனுப்பப்பட்ட கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதில் மகாதிர், லிம்மை பல்லின சமுதாயத்தின் உணர்வுகளை மதிக்காத ஒரு இனவாதி என்று வருணித்திருந்ததுடன் கேலாங் பாத்தாவில் மலாய்க்காரர்களுக்கும் சீனர்களுக்குமிடையில் நிலவும் இன இணக்கத்தைக் கெடுப்பதுதான் அவரது நோக்கமாகும் என்றும் கூறியிருந்தார்.
அக்கட்டுரை, லிம்மைப் பல்லினங்களுக்கிடையில் வன்செயல்களைத் தூண்டிவிடுபவர் போலவும் மலாய்க்காரர்களுக்குப் பொருளாதார வளம் கிடைப்பதைத் தடுப்பவராகவும் சித்திரித்துக் காண்பிக்க முயல்வதாக அக்கடிதம் கூறியது.
கட்டுரையை மகாதிர் மூன்று நாள்களுக்குள் மீட்டுக்கொள்ளாவிட்டால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்பால் கூறினார்.
மகாதிர் அவ்வாறு கூறியதன் தொடர்பில் அவர்மீது அரச நிந்தனை, அவதூறு வழக்கு தொடர லிம் விரும்புவதாகவும் கர்பால் சொன்னார்.