நம்பவைத்து நாசமாக்கிய தலைவர் இவரன்றோ!

samy-vellu-எம். குலசேகரன், ஏப்ரல் 23, 2012.

1980-களில் இந்திய சமுதாயத்தை ஏழ்மை நிலையில் இருந்து பொருளாதார துறையில் உயர்த்தப் போவதாக தானைத் தலைவரும் சமுதாயத் தலைவருமான டத்தோ ஶ்ரீ உத்தாமா சாமிவேலு, ஏழை எளிய , சாமானிய மக்களிடமிருந்தும் ஏறக்குறைய 106 மில்லியன் (10 கோடி) வெள்ளிப் பணத்தை வசூல் செய்தார் என்பது அனைவரும் அறிந்தது. அதனை முதலாகக் கொண்டு மைக்கா ஹோல்டிங்ஸ்  எனப்படும் நிறுவனத்தைத் தொடங்கி இந்தியர்களின் உயர்வுக்கு இது ஒரு நல்ல படிக்கல்லாக அமையும் என்று ஊரெல்லாம் பறை சாற்றி தன் மீது நம்பிக்கை வைக்கும்படி பெரிதும் வேண்டினார்.

அவர் நம்பிக்கைப் பேச்சை நம்பிய ஏழை பாமர மக்கள் , தோட்டத் தொழிலாளர்கள் தங்களிடம் இருந்த பணத்தை அள்ளிக் கொடுத்தும் ,ஆடு மாடுகளை விற்றும் , போதாதற்கு நகைகளை அடகு வைத்தும், வங்கியில் கடன் வாங்கியும் அந்த 10 கோடி வெள்ளி பணத்தை அவரிடம் கொடுத்தனர்.

சரியான பொருளாதார அறிவும் , அனுபவமும் பணத்தை நிர்வகிக்கக் கூடிய திறமையும்  கொண்ட ஆட்களை நியமிக்காத காராணத்தினால் அந்தப் பணம் கடலில் கரைத்த உப்பாய் போனது வாங்கிய பணத்தை ஊதுவத்தி கம்பெனியிலும், விசிடி கம்பெனியிலும் போட்டு நட்டத்தில் போய் முடியும்படி செய்தார் நமது முன்னாள் ம.இ.காவின் தலைவர்.

அன்று நடந்த கூட்டங்களில் , மைக்கா நிர்வாகம் குறித்து யாரும் கேள்வி கேட்டால் கிடைப்பது அடியும் உதையும்தான், அப்படி குண்டர்களாலும் கைக் கூலிகளாலும் அடியும் உதையும் வாங்கிய மக்களில் நானும் ஒருவன்.

பல போரட்டங்களுக்குப் பிறகும் , அழுத்தங்களுக்குப் பிறகும் சாமிவேலு  ஒரு கட்டத்தில் தனக்கும் மைக்க ஹோடிங்ஸ்சுக்கும் எந்த ஒரு சம்பந்தமுமில்லைஎன்று  கூறும் அளவுக்கு திமிறாகப் பேசினார். மக்கள் இறுதி வரை போராடியதாலும் , நான் பாராளுமன்றத்திலும் ,  மக்கள் மன்றங்களிலும் தொடர்ந்த்து குரல் கொடுத்து கேள்விகளை கேட்டு அழுத்தம் கொடுத்த பிறகும் இருமாப்பாக இருந்த  தானைத் தலைவர் இறுதியில் அவரை நம்பி முதலீடு செய்த இந்திய மக்களை நாமம் போட்டு கையை விரித்து விட்டார்.

25 வருடங்களுக்குப் பிறகு மக்களுக்கு கிடைத்ததெல்லாம் போட்ட முதல் மட்டும்தான் . இதுதான் தானைத் தலைவரின் சாதனையா ? இதனையே சில ம.இ.கா “பொருளாதார மேதைகள் ” அவ்வளவு வருடங்கள் கழித்து பத்திரமாக அப்பணத்தை திருப்பிக் கொடுத்ததையே ஒரு சாதனை என்று பறை சாற்றுகிறார்கள்.

kulaஓர் உருப்படியான நிபுணர் குழு அமைத்து ஒரு நல்ல வியூகம் அமைத்து அந்த பணத்தை தோட்டத்தில் முதலீடு செய்திருந்தால் இன்று அதன் மதிப்பு  பல கோடிகள் உயர்ந்திருக்கும்.

அன்றைய காலக்கட்டத்தில் பேரா, பஹாங்.  கெடா போன்ற மாநிலங்களில் ஓர் ஏக்கர் நிலத்தின் விலை ஏறக்குறைய 6 ஆயிரம் வெள்ளிதான்  . அவ்வேளையில் இந்த 10 கோடி வெள்ளிப் பணத்தைக்கொண்டு 16 ஆயிரம் ஏக்கர் நிலத்தை  வாங்கி இருக்கலாம். அது இன்று நமது சமுத்தாயத்தின் மாபெரும் சொத்தாக இருந்திருக்கும். அதையே தோட்டங்களாக வாங்கியிருந்தாலும் கூட பல நிர்வாகிகள் , துணை நிர்வாகிகள் கிராணிமார்கள் தண்டல்களை. உருவாக்கியிருக்கலாம், மறு நடவு, அறுவடை போன்ற குத்தகை அடிப்படையிலான தொழில்களை நமது இன சகோதர்களைக் கொண்டே செய்திருந்தால், அவர்களும் பொருளாதார ரீதியாக உயர்ந்திருப்பார்கள்.

16 ஆயிரம் ஏக்கர் தோட்ட நிலம் இன்று  நமது உரிமை என்றிருந்தால் அதன் வழி வருமானம் எவ்வளவு என்று கணக்கிட்டால் அது ஒரு பிரமிப்பையே உண்டாக்கும். ஒரு மாதத்திற்கு 16 ஆயிரம் டன் வரை செம்பனைப் பழங்களை அறுவடைச் செய்திருக்க முடியும். இன்றைய விலையில் டன் ஒன்றிற்கு, செலவுக்கு மிஞ்சிய லாபமாக 200 வெள்ளி என்று வைத்தாலும் கூட மாத வருமானம் 32 லட்சம் ஆகியிருக்கும் அல்லது வருடத்திற்கு 384 லட்சம் வெள்ளி ஆகியிருக்கும். இப்படி குறைந்தது 8 வருடங்களில் 30  கோடி வெள்ளியை லாபமாக சம்பாதித்திருக்கலாம். அதோடு வாங்கியிருந்த தும்போக் தோட்டத்தையும் துண்டு போட்டு விற்காமல் இருந்திருக்கலாம்.  அதோடு இந்த 16,000 ஏக்கர் நிலத்தின் இன்றைய விலை ஒரு ஏக்கருக்கு 1 லட்சம் என்ற விகிதத்தில் பார்த்தால்,  160 கோடி வரையில் உயர்ந்திருக்கும். அதாவது 1 வெள்ளிக்கு 16 வெள்ளி என்ற விகித்தத்தில் ஆரம்ப முதலீடு உயர்ந்திருக்கும். இவ்வளவும் அந்த முதலீட்டைக் கொண்டு செய்திருக்கலாம் என்று அறியாத அறிவிலிகளாய் நமது தானைத் தலைவரின் கூட்டம் இருந்திருக்கிறது. இது நமக்கு இந்த தலைவர்கள் வழி வாய்க்கப் பட்ட விதி என்று வேதனைப்படாமல் இருக்க முடியவில்லை.

இந்த பணத்தை வசூலிக்காமலே இருந்திருந்தாலாவது நம் மக்கள் அவர்களுக்கு தெரிந்த ஏதாவது ஒரு வழியில் முதலீடு செய்து எதோ ஒரு வகையில் லாபத்தைப் பெற்றிருப்பார்கள். அதற்கும்  வழியில்லாமல் செய்து விட்டார்கள் இவர்கள்.

இப்படிப்பட்ட சோடை போனவர்களா மலேசியாவில் உள்ள இந்திய சமூகத்தினரை காப்பாற்ற போகின்றார்கள்? இவர்களை நம்பி, வரும் தேர்தலில் இவர்களை தேர்ந்தெடுத்தால் இன்னும் ஒரு  நூற்றாண்டு காலம் ஆனாலும்  நமது சமுதாயத்தை இவர்களால் முன்னுக்கு கொண்டு வர முடியாது.

இந்த இலட்சணத்தில் கோட்டை விட்ட சுங்கை சிப்புட் கோட்டையை பிடிக்க மீண்டும் களமிறங்கியிருக்கும் சாமிவேலுவை நம்பினால் என்னவாகும்?