பிகேஆரின் தேர்தல் பரப்புரைகளில் ‘நேரடித் தொடர்புக்கு’ முன்னுரிமை

1 ge campஇன்னும் 10 நாள்களுக்குத்தான் தேர்தல் பரப்புரைகள் செய்யலாம் என்பதால் இந்தக் கடைசி 10 நாள்களில் பிகேஆர் அதன் பரப்புரைகளில் இரண்டு அணுகுமுறைகளைக் கடைப்பிடிக்கும்- அதிகமான செராமாக்கள் ஏற்பாடு செய்யப்படும், வாக்காளர்களை நேரடியாக தொடர்புகொள்வது தீவிரப்படுத்தப்படும்.

விவாதிக்கப்படும் விவகாரங்களைப் பொறுத்தவரை, அன்றாட வாழ்க்கைப் பிரச்னைக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

டிஏபியைப் பொறுத்தவரை சீனர்களின் ஆதரவைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. சீனர்களிடையே நிர்வாக-எதிர்ப்பு மோலோங்கி இருப்பதால் வேட்பாளர் நியமன நாளுக்கு முன்னதாகவே  டிஏபிக்கு அவர்களின் ஆதரவு நிறையவே இருந்தது. ஆனால், பிகேஆரின் விசயம் அப்படியல்ல. மலாய்க்காரர் ஆதரவைப் பெற அது படிப்படியாகத்தான் முயற்சி மேற்கோள்ள வேண்டியுள்ளது.

அது, தொகுதிகளைச் சுற்றிவருவதற்கும், வீட்டுக்கு வீடு சென்று தன் வேட்பாளர்களை அறிமுகப்படுத்துவதற்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கிறது. அதற்கு அடுத்தப்படியாக சிறுசிறு கூட்டம் சேர்த்து அவர்களிடையே உரை நிகழ்த்தப்படுகிறது. பெரும் கூட்டங்களைக் கூட்டி சொற்பொழிவாற்றுவதெல்லாம் நகர்புறங்களில்தான்.

1ge 1ஜோகூர் பிகேஆர் துணைத் தலைவரும் பாசிர் கூடாங் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளருமான அஹ்மட் ஃபைதி சைடி (இடம்), அந்தத் தென் மாநிலத்தில் பிகேஆரின் தேர்தல் பரப்புரை மூன்று கட்டங்களாக பிரிக்கப்பட்டு மேற்கொள்ளப்படுவதாகக் கூறினார்.

முதல் கட்டம், தொகுதிகளைச் சுற்றிவந்து, வீடு-வீடாகச் சென்று வாக்காளர்களை நேரடியாகச் சந்திப்பது, இரண்டாவதாக, சிறுசிறு கூட்டத்தைச் சேர்த்து அவர்களிடம் உரையாடுவது, மூன்றாவதாக, பெரிய அளவில் செராமாக்களை நடத்துவது.

நேற்றிரவு பத்து பாஹாட்டில் ஒரு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பின்னர் பிகேஆரின் வியூக இயக்குனர் ரபிஸி ரம்லி, பிகேஆரின் தேர்தல் வியூகங்கள் குறித்து மலேசியாகினியிடம் விவரித்தார்.

“எல்லாம் நல்லபடியாக போய்க்கொண்டிருக்கிறது…… (தேர்தல்) வெற்றிக்கு இரண்டு விசயங்கள் அடிப்படையாக விளங்கப் போகின்றன. முதலாவதாக, நேரடித் தொடர்பு”, என்றாரவர்.

அதை மேலும் விளக்கிய ரபிஸி, பிஎன் வேட்பாளர்களில் பலர், இறுதி நேரத்தில்தான் முடிவுசெய்யப்பட்டார்கள் என்பதால் அவர்களுக்கு வாக்காளர்களுடன் நேரடித் தொடர்பு அவ்வளவாக இல்லை என்றார்.

“கடைசி நேரத்தில்தான் முடிவுசெய்யப்பட்டார்கள் என்பதால், அவர்களால் நேரடித் தொடர்பை அவ்வளவாக வளர்த்துக்கொள்ள முடியவில்லை. இன்னும்கூட அவர்களின் வேட்பாளர் தேர்வில் சிக்கல்கள் தீரவில்லை. இங்கு நிலைமை எங்களுக்குச் சாதகமாக உள்ளது”.

எனவேதான், வீட்டுக்குவீடு சென்று சந்திப்பதை அதிகரித்துக்கொள்ள வேண்டுமென்று கட்சி அதன் வேட்பாளர்களிடம் வலியுறுத்தி வருகிறது.

மதில்மேல் பூனை வாக்காளர்களில் மலாய்க்காரர்களே அதிகம்

முன்எப்போதும் இல்லாத வகையில், அம்னோவின் அடிநிலை உறுப்பினர்களிடையே பெரும் கிளர்ச்சி தோன்றியுள்ளதும் இந்தப் பொதுத் தேர்தலில்தான். 269 சுயேச்சை வேட்பாளர்களில் 22 விழுக்காட்டினர் அம்னோவைச் சேர்ந்தவர்கள்.

நேரடிச் சந்திப்புக்கு அடுத்தபடியாக செராமாக்கள் வருகின்றன. பிகேஆர் தலைவர்கள் நாடு முழுக்கப் பயணம் செய்து செராமாக்கள் நடத்துவார்கள்.

ஆனால், செராமாக்கள்வழி வாக்காளர்களைக் கவர முடியுமா என்பது கேள்விக் குறியே. ஏனென்றால், மதில்மேல் பூனைகளாக உள்ள வாக்காளர்களில் பெரும்பாலோர் மலாய்க்காரர்கள்தான். இவர்கள் பக்காத்தான் செராமாக்களில் கலந்துகொள்வது குறைவு. தொலைவில் நின்றே பேச்சைக் கேட்டுவிட்டுச் சென்று விடுவார்கள்.

ரபிஸி: பிகேஆர், வாக்காளர்களை இனவாரியாக அல்லாமல் வகுப்புவாரியாக பிரித்துப் பார்க்கிறது

கடந்த இரண்டு வாரங்களாக ஜோகூரில் செராமாக்கள் நடந்து வருகின்றன. செராமா நடக்கும்  இடங்களில் பார்த்தால் மேடைக்கு முன்னே உள்ள கூட்டம் குறைவாகத்தான் இருக்கும். பெரும்பாலோர். சற்றுத் தொலைவில் நின்றபடியே பேச்சைக் கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

1ge rafiziஇந்நிலையில் மலாய்க்காரர் பகுதிகளில்  தேர்தல் பரப்புரைகள் எப்படி அமையும் என்று வினவியதற்கு பிகேஆர், வாக்காளர்களை இனவாரியாக அல்லாமல் வகுப்புவாரியாக பிரித்துப் பார்க்கிறது என்று ரபிஸி (இடம்) தெரிவித்தார்.

“அன்றாட பிழைப்பைப் பாதிக்கும் விவகாரங்கள் பற்றிப் பேசுவோம். இவைதான் உழைக்கும் கூட்டத்தாரைப் பாதிக்கும் விசயங்களாகும். 20-க்கும் 40-வயதுக்கும் இடைப்பட்ட அந்த உழைக்கும் கூட்டத்தார்தான் எங்களுக்கு வாக்களிக்கப் போகின்றவர்கள். அவர்கள்தான் அவர்களின் பெற்றோரையும் எங்களுக்கு வாக்களிக்குமாறு செய்வார்கள்.

“கடந்த மூன்றாண்டுகளாக சோதித்து அறியப்பட்ட ஒரு சூத்திரம் இது. இதைக் கடைசி நேரத்தில் மாற்றிக்கொள்ளப் போவதில்லை. இதை மேலும் முடுக்கி விடுவோம்”, என்றவர் விவரித்தார்.

அம்னோவின் வழக்கமான பரப்புரைபாணி பற்றி ரபிஸி கவலைப்படவில்லை. பக்காத்தான்  அரசாங்கத்தில் மலாய்க்காரர்-அல்லாதார்  கை மேலோங்கி இருக்கும் அதனால் மலாய்க்காரர் உரிமைகளும் நலன்களும் பறிபோகும் என்று மலாய்க்காரர்களைப்  பயமுறுத்துவது அம்னோவின் வழக்கமாகும்.

“நகர்புறமோ, கிராமப்புறமோ அன்றாட பிழைப்பு விவகாரங்கள் எல்லா இனங்களையும் பாதிக்கும் விசயங்களாகும். அதனால்தான் நாங்கள் மலாய் மேலாதிக்கம் பற்றிப் பேசுவதில்லை.

“அம்னோ பயமுறுத்தினால் பயமுறுத்தட்டும். யாருடைய பேச்சு நடைமுறைக்கு உகந்தது என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள். மலாய் மேலாண்மை போன்ற பெரும் கோட்பாடுகள் பற்றிப் பேசுவதைவிட அவர்களின் அன்றாட பிரச்னை பற்றிப் பேசுவதே நடைமுறைக்கு ஏற்புடையது”, என்றார்.

இதே அணுகுமுறையை டிஏபியும் பாஸும் பின்பற்றுமா என்பது தெரியவில்லை.

டிஏபிக்கு சீன வாக்காளர்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. அதை மேலும் வளர்த்துக்கொள்ள முயன்றுவரும் அது மலாய்ப் பகுதிகளுக்குள்ளும்  ஊடுருவ  முயன்று வருகிறது. அதற்கு பிகேஆர் மற்றும்  பாஸ் கட்சியின் உதவியை நாடுகிறது.

பாஸுக்கென வழக்கமான ஆதரவாளர்கள் உண்டு. ஆனால், பிஎன் செல்வாக்குடன் விளங்கும் மலாய்ப்பகுதிக்குள் செல்வதுதான் அதற்கும் பெரிய பிரச்னையாக உள்ளது. அங்கும் தங்கள்  செல்வாக்கை விரிவுபடுத்த அதன் வேட்பாளர்கள் பெரும் பாடுபடுகிறார்கள்.