நஜிப்: பிரிம் மேலானது என்கிறபோது பெட்ரோல் விலையைக் குறைப்பானேன்?

1 najibபிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக், பிரிம் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ரொக்க அன்பளிப்புப்போல் பெட்ரோல் விலைக்குறைப்பு ஏழை மக்களுக்கு நன்மை அளிக்காது என்கிறார்.

“பெட்ரோல் விலை குறைக்கப்பட்டால் நன்மை அடைவது யார்? பணக்காரர்கள் பயனடைவார்கள். பெரிய, பெரிய கார்களை வைத்துள்ள பணக்காரர்களுக்குத்தான் அது நன்மையாக இருக்கும்.

“ஆனால், பிரிம் யாருக்குக் கிடைக்கிறது. பொதுமக்கள்தான் அதனால் பயனடைகிறார்கள்”, என்றவர் கூற கூட்டத்தினர் கைதட்டி அதை வரவேற்றனர்.

நஜிப், இன்று காலை பாகான் செராய் டாட்டாரான் அம்னோவில், ஆயிரம் பேர் கலந்துகொண்ட 1மலேசியா நிகழ்வு ஒன்றில் பேசினார்.

1 anwarஞாயிற்றுக்கிழமை, பேராக்கில், கோலா கங்சார் உள்பட, எட்டு நாடாளுமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் செய்த பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் (வலம்) பக்காத்தான் தேர்தலில் வென்று ஆட்சி அமைத்தால் பெட்ரோல் விலையைக் குறைக்கும் என வாக்குறுதி அளித்தார்.

“மே 5-இல் புத்ரா ஜெயாவை வென்றால் அடுத்த நாள், அரசாங்கத்தை அமைக்கும்போது பெட்ரோல் விலைக்குறைப்பையும் அறிவிப்போம்.

“பணத்தை மக்களின் சுமையைக் குறைக்கப் பயன்படுத்தாமல் சும்மா வைத்துக்கொண்டிருப்பதால் என்ன பயன்?”, என்றவர் குறிப்பிட்டதும் கோலா கங்சார் செராமாவுக்கு வந்திருந்த கூட்டத்தினர் ஆரவாரம் செய்தனர்.