முஸ்லிம் அல்லாதார் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கான தடையை நஜிப் தற்காத்துப் பேசியுள்ளார்

al kitabமுஸ்லிம் அல்லாதார் ‘அல்லாஹ்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பது என்னும் அரசாங்க முடிவை பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தற்காத்துப் பேசியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களும் ஒருவரை ஒருவர் மன வருத்தமடையச் செய்யக் கூடாது என அவர் சொன்னார்.

“அல்லாஹ்’ என்னும் கோட்பாடு மீதான முஸ்லிம் சிந்தனை, கிறிஸ்துவ சிந்தனையிலிருந்து மாறுபட்டதாகும்.  நாம் முஸ்லிம்களை வருத்தம் கொள்ளச் செய்யக் கூடாது. முஸ்லிம்களும் கிறிஸ்துவர்களை வருத்தமடைய  செய்யக்கூடாது. நாம் காலம் காலமாக ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறோம். அது தொடர வேண்டும்,” என  அவர் அல் ஜாஸிரா அனைத்துலக செய்தித் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த பேட்டியில் கூறினார்.

அந்த 30 நிமிடப் பேட்டி நாளை பிற்பகல் மணி 12.30க்கு ஒளிபரப்பாகும். அடுத்த இரண்டு நாட்களுக்கு அது
மூன்று முறை மறு ஒளிபரப்பாகும் என அல் ஜாஸிரா வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.

‘இறைவன்’ என்ற சொல்லுக்கு மலாய் மொழி பெயர்ப்பாக ‘அல்லாஹ்’ என்ற சொல் குறிப்பாக மலாய் மொழி
பைபிள்களில் 2007ம் ஆண்டு தடை செய்யப்படும் வரை பயன்படுத்தப்பட்டு வந்தது.

அந்தத் தடை அரசமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் 2009ம் ஆண்டு தீர்ப்பளித்தது. ஆனால்
அந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்து கொள்ளப்பட்டுள்ளதால் அந்த் தீர்ப்பு நிறுத்தி
வைக்கப்பட்டுள்ளது.

நஜிப் அந்தப் பேட்டியில் தமது பரம எதிரியான பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிமுடன் விவாதம்
நடத்துவதை நிராகரித்துள்ளதாகவும் சொல்லப்படுகின்றது.najib1

“பொது மக்களை அணுகுவதற்கு பல வழிகள் உள்ளன. மலேசியாவில் இரண்டு அரசியல் கட்சிகளுக்கும்  நிறைய இடம் உள்ளது. நாங்கள் விவாதம் நடத்தும் சாத்தியமில்லை. நாங்கள் மக்களுடன் தொடர்பு கொள்ள  வேண்டிய தேவை உள்ளது. எதிர்த்தரப்பும் மக்களுடன் தொடர்பு கொள்ள வேண்டும்,” என அவர் ‘Talk to Al-  Jazeera’ என்ற நிகழ்ச்சியில் சொன்னதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நஜிப்பும் அன்வாரும் தங்கள் கட்சிகளின் தேர்தல் கொள்கை அறிக்கையை விவாதிக்க வேண்டும் என தீவகற்ப
மலேசியாவில் 63 விழுக்காடு வாக்காளர்கள் விரும்புவதை மலாயாப் பல்கலைக்கழக தேர்தல், ஜனநாயக மய்யம்  நடத்திய ஆய்வு காட்டியுள்ளது.