சுல்கிப்லியை ஆதரிக்க வேண்டாம் என மஇகா கேட்டுக் கொள்கிறது

saravananஷா அலாம் நாடாளுமன்றத் தொகுதிக்கான பாரிசான் நேசனல் (பிஎன்) வேட்பாளர் சுல்கிப்லி நூர்டின் குறித்த  தமது அதிருப்தியை மஇகா உதவித் தலைவர் எம் சரவணன் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

அந்த பெர்க்காசா தலைவருக்கு தங்கள் ஆதரவைக் கொடுக்க வேண்டாம் என்றும் அவர் இந்தியர்களைக்  கேட்டுக் கொண்டார்.

இந்தியர்கள் பற்றி சுல்கிப்லி சொன்ன கருத்துக்காக தாம் அவரை மன்னிக்க முடியாது என்றும் சரவணன்
சொன்னார். சுல்கிப்லி இந்தியர்களுடைய ஆதரவைப் பெறுவதற்குத் தகுதி இல்லாதவர் என்றார் அவர்.

“முஸ்லிம்களுக்கு எதிராகத் தாம் மரியாதைக் குறைவாக எதையாவது சொல்லி விட்டு பின்னர் மன்னிப்புக்
கேட்டால் அவர்கள் அதனை ஏற்றுக் கொள்வர் என நீங்கள் எண்ணுகின்றீர்களா ?” என அவர் வினவினார்.

பராமரிப்பு அரசாங்கப் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் முடிவைத் தாம் மதிப்பதாகக் குறிப்பிட்ட சரவணன்,
ஆனால் சுல்கிப்லி பிஎன் தரத்தைக் குறைத்து விட்டார் என்றும் அவர் கூட்டணிக்கு அவமானம் என்றும்
சொன்னார்.saravanan1

“என்றாலும் மற்ற எல்லாப் பகுதிகளிலும் தங்கள் பிளவுபடாத ஆதரவை இந்திய சமூகம் பிஎன் -னுக்கு வழங்க  வேண்டும் என நான் கேட்டுக் கொள்கிறேன்.”

உலகம் முழுவதும் இந்தியர்கள் அவமானச் சொல் எனக் கருதும் கெலிங் என்ற வார்த்தையை சுல்கிப்லி  பயன்படுத்துவதைக் காட்டும்  வீடியோ இணையத்தில் பரவலாக வெளியானதைத் தொடர்ந்து இந்திய சமூகம் அவர் மீது  இந்திய சமூகம் ஆத்திரமடைந்துள்ளது.

இந்துக்கள் புனிதமாக கருதும் கங்கை ஆற்றின் தூய்மை குறித்தும் சுல்கிப்லி கேள்வி எழுப்பியதாகச்
சொல்லப்படுகின்றது.

70 விழுக்காடு வாக்குகள் வரை இழக்கக் கூடும்

பிகேஆர் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு 2010ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி சுல்கிப்லியை கட்சியிலிருந்து
ஏகமனதாக முடிவு செய்து நீக்கியது.

பின்னர் அவர் பிஎன் -னுக்கு நட்புறவான எம்பி -யாக இயங்கி எதிர்க்கட்சிகளைக் குறை கூறி வந்தார்.

சுல்கிப்லி நிறுத்தப்பட்டால் சிலாங்கூர் போன்ற சில மாநிலங்களின் முடிவுகளை நிர்ணயிக்கும் இந்தியர்களுடைய  வாக்குகளை மஇகா இழக்கக் கூடிய அபாயம் இருப்பதாக அதன் வியூக ஆலோசகர் எஸ் வேள்பாரி, கட்சித்  தலைமைத்துவத்தை ஏற்கனவே எச்சரித்துள்ளார்.

மஇகா தலைவர் ஜி பழனிவேலு தமது கவலையை நஜிப்பிடம் தெரிவிக்க வேண்டும் என்ற குறுஞ்செய்தியை
வேள்பாரி அவருக்கு அனுப்பியுள்ளார்.

சுல்கிப்லி நிறுத்தப்பட்டால் கட்சி 50 விழுக்காடு முதல் 70 விழுக்காடு வரையில் இந்தியர் வாக்குகளை இழக்கக்  கூடும் என்றும் அவர் சொன்னார்.

இருந்தும் பிஎன் தனது சிலாங்கூர் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட போது சுல்கிப்லி பிஎன் -னுக்கு
நட்புறவான வேட்பாளராக பெயர் குறிப்பிடப்பட்டார்.

முன்னாள் மஇகா தலைவர் எஸ் சமிவேலுவின் புதல்வரான வேள்பாரிக்கு அந்த அறிவிப்பு மேலும் எரிச்சலை
தந்துள்ளது. ஷா அலாமில் 15,000 பேரும் கோத்தா ராஜாவில் 30,000 பேரும் காப்பாரில் 17,000 பேரும்
இந்திய வாக்காளர்கள் எனக் குறிப்பிட்ட அவர், அவர்களில் பெரும்பாலோர் ஏமாற்றம் அடைந்துள்ளதாகச்
சொன்னார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதல் இந்தியர்களிடம் மன்னிப்புக் கேட்டதின் மூலம் தமக்கு எதிரான
கண்டனங்களை தணிப்பதற்கு சுல்கிப்லி முயன்று வருகிறார்.

பல்வேறு இனங்களையும் சமயங்களையும் சார்ந்த மலேசியர்கள் ஒற்றுமையாக வாழ முடியும் என்பதை தாம் அறிந்துள்ளதாகவும் பெர்க்காசா உதவித் தலைவருமான அவர் தமது இரண்டாம் நாள் பிரச்சாரத்தின் போது  கூறியிருந்தார்.

சுல்கிப்லி பக்காத்தான் ராக்யாட் மீது பழி போட்டார்

அவர் தமது முந்திய தீவிரவாத இனவாத அரசியலுக்கு பக்காத்தான் ராக்யாட் மீது பழி போடவும் முயன்றார்.

“எதிர்த்தரப்பான டிஏபி, பாஸ், பிகேஆர் ஆகியவைக் கற்றுக் கொடுத்ததால் தாம் தீவிரவாத அரசியல், இனவாத
அரசியல், ஆதிக்கப் போக்கு ஆகியவற்றை நான் பின்பற்றினேன் என பல இடங்களில் நான்
தெரிவித்துள்ளேன்,” என்றார் அவர்.

இதனிடையே சுல்கிப்லியின் கடந்த கால அறிக்கைகளை தாம் கண்டித்த போதிலும் வாக்களிக்கும் போது
இறுதியில் முடிவு செய்வது மக்களே என்று மஇகா இளைஞர் தலைவர் டி மோகன் கூறியுள்ளார்.

“அவர் சொன்னது தவறு தான். ஆகவே நான் அதனை கடுமையாக ஆட்சேபிக்கிறேன். ஆனால் மற்ற
தலைவர்களும் குறிப்பாக எதிர்க்கட்சிகளைச் சார்ந்தவர்களும் இந்தியர்களுடைய உணர்வுகளைக்
காயப்படுத்தியுள்ளனர்,” என்றார் அவர்.

சரவணனுடன் ஒப்பிடுகையில் சுல்கிப்லி மீது மோகன் அனுதாபம் காட்டியுள்ளார். சுல்கிப்லி அதிகாரப்பூர்வமாக  மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளதால் அவருக்கு இரண்டாவது வாய்ப்பை சமூகம் கொடுக்க வேண்டும் என  அவர் சொன்னார்.

“பினாங்கில்  கோவில்-பள்ளிவாசல் விவகாரம் மீது அவமானத்தைத் தரும் அறிக்கைகளை
வெளியிட்டதாகச் சொல்லப்படும் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்திய சமூகத்தை ‘பறையர்கள்’ என
அழைத்ததாக கூறப்படும் அஸ்மின் அலி போன்ற மற்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்தியர்களுடைய
உணர்வுகளை காயப்படுத்தியுள்ளனர். அவர்கள் எங்கே மன்னிப்புக் கேட்டார்கள் ?” என மோகன் வினவினார்.

மலாய் மெயில்

TAGS: