கம்போங் பாரு மசோதாவை பேரரசரிடம் கொண்டு செல்ல பக்கத்தான் திட்டமிடுகிறது

கம்போங் பாரு மேம்பாட்டு கார்ப்பரேசன் மசோதா 2010 வைத் தடுத்து நிறுத்தும் இறுதி முயற்சியாக பேரரசர் மற்றும் சிலாங்கூர் சுல்தான் ஆகியோரின் தலையீட்டை பெற பக்கத்தான் ரக்யாட் ஆலோசித்து வருகிறது என்று அதன் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

“மலாய்க்காரர்களின் உரிமைகள் சம்பந்தப்பட்டிருப்பதால் இந்த மசோதாவை தாமதப்படுத்துவதற்கு அகோங் மற்றும் சிலாங்கூர் சுல்தான் ஆகியோர் இந்த விவகாரத்தின் மீது கவனம் செலுத்துவது தேவையாகிறது”, என்று இந்த மசோதா குறித்து நேற்று கம்போங் பாருவில் சுமார் 500 பேர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் அன்வார் கூறினார்.

இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டத்தைத் தடுத்து நிறுத்துவதில் பக்கத்தான் தோல்வியுற்றதால், பல குடியிருப்பாளர்கள் எதிர்க்கும் கம்போங் பாருவுக்கான திட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை நாடாளுமன்றத்திற்கு அப்பால் கொண்டு செல்ல எடுக்கப்படும் நடவடிக்கையாக இது காணப்படுகிறது.

கோலாலம்பூர் மாநகர் வரைவுத் திட்டம் 2020 இன் கீழ் கம்போங் பாரு ஒரு வர்த்தக மையமாக மாற்றப்படும். அதற்கான ஒரு நிருவாக அமைப்பை உருவாக்குவதற்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதா வகை செய்கிறது.

ஆனால், அங்கு வாழும் பல குடியிருப்பாளர்கள் அத்திட்டத்தில் அதிருப்தி கொண்டுள்ளனர். அக்குடியிருப்பு பகுதி அவர்களின் பரம்பரைச் சொத்தாக இருந்து வருகிறது. அது நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் வாதிக்கின்றனர்.