என்னை ‘நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள் என மகாதீர் டிஏபி-க்குச் சவால்’

mahathir“என்னைத் தடுத்து வையுங்கள், என்னை நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லுங்கள் ! லிம் கிட் சியாங் இனவாதி  அவர் உண்மையில் இனவாதி என்ற எனது அறிக்கையை நான் மீண்டும் சொல்கிறேன்,” என அந்த முன்னாள்  பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறிக் கொண்டுள்ளார்.

எதிர்த்தரப்பு 13வது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவைக் கைப்பற்றினால் தாம் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்படலாம் என டிஏபி தேசியத் தலைவர் கர்பால் சிங் விடுத்துள்ள அறிக்கையின் நோக்கம், இனவாதி என்ற முறையில் லிம்-மின் நடத்தை குறித்து தாம் மேலும் விவரங்களை வெளியிடுவதை நிறுத்துவதாகும் என மகாதீர் சொன்னார்.

“லிம் கிட் சியாங் இனவாதி என தகவல் வெளியிட்டதற்காக கர்பால் சிங் என்னை தடுத்து வைக்க
விரும்புவதைக் கண்டு நான் அதிர்ச்சி அடைந்தேன்.”

சீனர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் மட்டுமே டிஏபி போட்டியிட விரும்புகின்றது. ஏனெனில்
சீனர்கள் மட்டுமே அந்தக் கட்சியை ஏற்றுக் கொண்டுள்ளனர். ஆகவே டிஏபி நடவடிக்கை அது இனவாதி
என்பதை தெளிவாகக் காட்டுகின்றது,” என நெகிரி செம்பிலான் கம்போங் பாடாங் ஜுவாலில் நிகழ்ச்சி ஒன்றில்
அவர் கூறினார்.

13வது பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை எதிர்த்தரப்பு கைப்பற்றினால் லிம்-மை இனவாதி என்று குற்றம்
சாட்டியதற்காக முன்னாள் பிரதமரைக் கைது செய்து நீதிமன்றத்தில் குற்றம் சாட்டும் என கடந்த
ஞாயிற்றுக்கிழமை கர்பால் சொன்னதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

டிஏபி-யுடன் அதன் தோழமைக் கட்சியான பாஸ் கட்சியும் இனவாதக் கட்சியாகும். அது மலாய் பெரும்பான்மை  இடங்களில் குறிப்பாக திரங்கானுவிலும் கிளந்தானிலும் போட்டியிடுகிறது. ஆனால் அம்னோவும் மசீச-வும் நாடு  முழுவதும் எந்த இன பெரும்பான்மையையும் கருத்தில் கொள்ளாமல் எல்லாத் தொகுதிகளிலும்  போட்டியிடுகின்றனர் என்றும் மகாதீர் கூறிக் கொண்டார்.

பாஸ் ஆன்மீகத் தலைவரும் கிளந்தான் மந்திரி புசாருமான நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட், இரட்டை
வேடக்காரர் என்றும் அவர் சொன்னார். ஏனெனில் அவர் வாக்குகளை பெறுவதற்காக புத்ரா ஜெயாவில் உள்ள
துவாங்கு மிஸான் ஜைனல் அபிடின் பள்ளிவாசலில் வெள்ளிக் கிழமை தொழுகை நடத்தியுள்ளார் என்றார்
அவர்.

“புத்ராஜெயாவை ஏலத்திற்கு விடப் போவதாக பாஸ் கட்சி ஏற்கனவே கூறியிருக்கிறது. ஆனால் அது இப்போது
புத்ராஜெயாவை ஏலத்திற்கு விடுவதில் அக்கறை காட்டவில்லை. மாறாக நாட்டின் நிர்வாகத் தலைநகரை வெற்றி  கொள்வதில் ஆர்வம் காட்டுகின்றது. கிளந்தானில் புத்ராஜெயாவைப் போன்ற நிர்வாகத் தலைநகரம் ஒன்றை  கட்ட வேண்டியது தானே,” என மகாதீர் வினவினார்.

அந்த நிகழ்வில் மகாதீரின் துணைவியார் டாக்டர் சித்தி ஹாஸ்மா முகமட் அலியும் கலந்து கொண்டார். அந்த
ஜோஹொல் சட்டமன்றத் தொகுதியில் பிஎன் வேட்பாளராக அபு சாமா மாஹாட் போட்டியிடுகிறார்.

பெர்னாமா