இசி தலைவர்:‘வெளி வாக்காளர்கள்’ என்று கூறப்படுவதை நம்ப முடியவில்லை

1 ecதேர்தல் ஆணைய (இசி) தலைவர் அப்துல் அசீஸ் முகம்மட் யூசுப், ஞாயிற்றுக்கிழமை 13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக “வெளி வாக்காளர்களை” அழைத்து வருவதற்காக கமுக்கமான முறையில் விமானங்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டிருப்பதாகக் கூறப்படுவது குறித்து கேள்வி  எழுப்பியுள்ளார்.

“எப்படி முடியும்? சாபா, சரவாக்கிலிருந்து வாக்காளர்களை இங்கு அழைத்து வரவும் இங்கிருந்து வாக்காளர்களை அங்கு அழைத்துச் செல்லவும் விமானப் பயணங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகக் கூறுவதை நான் நம்பவில்லை”, என்றவர் மறுத்தார்.

1 ec1“மக்கள் வீடு மாறிச் செல்லும்போது தங்கள் முகவரிகளை ஒரு இன்னொரு இடத்துக்கு மாற்றிக்கொள்கிறார்கள். அது சட்டப்படி சரியானதுதான்”.

அந்த மாற்றங்களும்கூட இரண்டு-வாரகால ஆட்சேபணை காலம் வழங்கப்பட்டு ஆட்சேபணை இல்லை என்று தெரிந்த பின்னரே அரசிதழில் வெளியிடப்படும்.

“நினைத்தவுடன் மக்களை அப்படியெல்லாம் கார்களில், பேருந்துகளில், விமானங்களில் அழைத்து வருவது முடியாத காரியம். வேண்டுமானால் விடுமுறையைக் கழிக்க அப்படி அழைத்துச் செல்லலாம்”, என்றாரவர்.

இராணுவத்தினர் உள்பட “வெளி வாக்காளர்களை” விமானங்களில் அழைத்துவர அம்னோ ஏற்பாடு செய்திருப்பதாக பக்காத்தான் ரக்யாட் ஆட்சியில் உள்ள சிலாங்கூர் அரசு கூறிக்கொள்வது குறித்து கருத்துரைக்குமாறு கேட்டதற்கு அப்துல் அசீஸ் இவ்வாறு கூறினார்.

அவ்வாறு கூறப்படுவது பற்றி பிஎன் தலைவர்களின் கருத்தை அறிய அவர்களையும் தொடர்புகொள்ள மலேசியாகினி முயன்றது. ஆனால், அவர்களில் எவரும் கருத்துரைக்க முன்வரவில்லை.

அப்துல் அசீஸ், இன்று காலை கோலாலும்பூர் போலீஸ் பயிற்சி மையத்துக்கு வருகை புரிந்து போலீசார் முன்கூட்டியே வாக்களிப்பதை நேரடியாக பார்வையிட்டார்.