16ஆயிரம் புதிய வாக்காளர்களை எண்ணி கவலைப்படுகிறார் நுருல்

1 nuruபிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார், லெம்பா பந்தாய் நாடாளுமன்றத் தொகுதியைத் தக்கவைத்துக்கொள்வது பெரும்பாடாக இருக்கும். அங்கு அவருக்கு எதிராக போட்டியிடுபவர் பராமரிப்பு அரசாங்கத்தின் கூட்டரசு பிரதேச அமைச்சர் ராஜா நொங் சிக். அவருடன் சுயேச்சை வேட்பாளர் ருஸ்லி பாபாவும் களமிறங்கியிருப்பதால் அத்தொகுதியில் மும்முனை போட்டி உருவாகியுள்ளது.

அத்தொகுதியில் 16,500 புதிய வாக்காளர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இப்புதிய வாக்காளர்களை எண்ணித்தான்  நுருல் இஸ்ஸா, 32, பெரிதும் கவலைப்படுகிறார். இவர்களில் 5,000 பேர் ஆவி வாக்காளர்கள் என்றவர் திடமாக நம்புகிறார்.

2008 தேர்தலில் 2,895 வாக்குகள் வேறுபாட்டில்தான் அவர் அம்னோ மகளிர் தலைவர் ஷரிசாட் அப்துல் ஜாலிலைத் தோற்கடித்தார்.

எனவேதான், புதிய வாக்காளர்களை, குறிப்பாக ஆவி வாக்காளர்களை எண்ணி அவர் பெரிதும் கலக்கமடைந்துள்ளார். இதில் 2,000 அஞ்சல் வாக்காளர்கள் வேறு.

1 nuru nongராஜா நொங் சிக்கின் தேர்தல் இயந்திரம் பெரியது. தேர்தல் பணிகளுக்காக அது நன்கு முடுக்கி விடப்பட்டுள்ளது. ராஜா நொங் சிக் இளமைக்காலத்திருந்தே மக்களுக்குச் சேவை செய்பவர் என்று பெயர் பெற்றிருப்பவர்.

1980-களில் அவர் லெம்பா பந்தாய் அம்னோ இளைஞர் தலைவராக இருந்தபோது வெள்ளத்தின்போதும் தீவிபத்து போன்ற மற்ற பேரிடர்களின்போதும் மக்களுக்கு ஓடிஓடி உதவியதைக் காண்பிக்கும் படங்கள் எல்லாம் அத்தொகுதியில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. அவருக்கு அடிநிலை மக்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதாகத் தெரிகிறது.

பொருளியல் பட்டதாரியும் பட்டயக் கணக்காய்வாளருமான நொங் சிக், தேர்தல் பரப்புரை தொடங்குவதற்குமுன்பே தம் சாதனைகளைப் பட்டியலிடும் பதாதைகளையும் விளம்பரப் பலகைகளையும் லெம்பா பந்தாய் முழுவதும் நிறுத்தி வைத்துள்ளார். திங்கள்கிழமை தம் அடைவுநிலையைக் காண்பிக்கும் அறிவிப்பு அட்டையையும் வெளியிட்டார்..

‘என் சாதனைகள் எனக்கு வெற்றியைத் தரும்’

1 nuru nong 1லெம்பா பந்தாயில் போக்குவரத்தை மேம்படுத்த விரும்பும் நொங் சிக், அதற்காக மூன்று எம்ஆர்டி நிலையங்களை அங்குக் கொண்டுவர நினைக்கிறார். கோலாலும்பூர் மாநகர் அடுக்குமாடி வீடுகளில் வசதிகளை மேம்படுத்தியுள்ளார்.

“இதுவரை நான் செய்துள்ளவை பிகேஆரிடமிருந்து அத்தொகுதியைக் கைப்பற்ற உதவும் என்று நம்புகிறேன். சேவை செய்யும் ஒரு பிரதிநிதி தேவையா, வெறுமனே சத்தம் போடுபவர் தேவையா: மக்களே தீர்மானிக்கட்டும்”, என்றாரவர்.

பாதுகாப்பான தொகுதியைத்தான் தமக்குக் கொடுத்திருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொள்ளும் நொங் சிக், தாம் பிறந்தது, வளர்ந்தது, திருமணம் செய்தது, தம் பிள்ளைகள் பிறந்தது எல்லாமே லெம்பா பந்தாயில்தான் என்றார்.

நுருலுக்குப் பிரச்னை?

அமெரிக்காவின்  பிரபலமான ஜான் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியான நுருல் இஸ்ஸா தேர்தல் பரப்புரைகள் முழுவீச்சில் மேற்கொண்டிருக்கிறார் என்றாலும், “பிஎன் பிரதேசமாக” விளங்கும் ஸ்ரீபாகாங் அடுக்குமாடி குடியிருப்பு, பந்தாய் பெர்மாய் போன்ற பகுதிகளுக்குள் செல்வது சிரமமாக இருக்கிறது என்கிறார்.

1 nuru 1நடுத்தட்டு, மேல்தட்டு மக்கள் வசிக்கும்  பங்சார் பகுதியில் அவருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. குறைந்த விலை அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதிகளில் கணிசமான ஆதரவைப் பெற்று வருவதாக அவர் கூறுகிறார்.

அவரின் உதவியாளரான பாஹ்மி பாட்சில், பந்தாய் பெர்மாய் பகுதியில் நுருலுக்கு நிறைய ஆதரவு இருப்பதாகவும், ஆனால் அங்குள்ள மக்கள் மாநகர் மன்ற அடுக்குமாடி வீடுகளில்  வசிப்பதால் ஆதரவை வெளிப்படையாகக் காண்பிப்பதில்லை என்றார்.

“வெளிப்படையாக ஆதரவைக் காண்பித்தால், குடியிருக்கும் வீட்டை விட்டு வெளியேற்றப்படலாம் என அஞ்சுகிறார்கள். ஆனால், நல்ல ஆதரவு இருக்கிறது”, என்று பாஹ்மி கூறினார்.

இது தவிர, நுருல் இஸ்ஸாவின் ஆதரவாளர்களை பிஎன் ஆதரவாளர்கள் மிரட்டுவதாகவும் அவர் சொன்னார். அவர்களின் வாகனங்கள் நாசப்படுத்தப்படும் என்றெல்லாம் எச்சரித்திருக்கிறார்கள்.

செவ்வாய்க்கிழமை செய்தியாளர் கூட்டமொன்றில் பேசிய அன்வார் இப்ராகிம், தம் மூத்த மகள், ராஜா நொங் சிக்கை மட்டுமல்லாது மாநகராட்சி மன்றத்தையும் சமாளிக்க வேண்டியுள்ளது என்பதால் வெற்றிகாண இருமடங்கு அதிகமாக பாடுபட வேண்டியுள்ளது என்று குறிப்பிட்டார்.

ஆவி வாக்காளர்கள் இருப்பது உண்மையே என்று பாஹ்மி கூறினார். ஆவி வாக்குகள் முடிவுகளை மாற்றி அமைத்துவிடும் என்பதால் கட்சிப் பணியாளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றவர் வலியுறுத்தினார்.

ருஸ்லி: அது எப்படி  ராஜா நொங் சிக் தம்மைத் தாமே  மதிப்பிட்டுக் கொள்ள முடியும்?

1 nuru rusliசுயேச்சை வேட்பாளரான ருஸ்லி, முன்னாள் அம்னோ உறுப்பினர். அவர் வேட்பாளராக வேட்புமனுவைத் தாக்கல் செய்ததால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர், தேர்தல் நெருங்க நெருங்க தமக்கு ஆதரவு பெருகி வருவதாக மலேசியாகினியிடம் தெரிவித்தார்.

“நான் வெற்றிபெறும் சூழல் குறைவுதான் என்றாலும், நல்ல ஆதரவு கிடைத்து வருகிறது”,என்றார்.

அதேவேளை, அமைச்சர் தம்மைப் பற்றித் தாமே மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறார், அது நியாயமல்ல என்றுமவர் சாடினார்.

“அவர் அவரது செயல்முறையைக் காண்பிக்கும் அறிக்கையைச் சொந்தமாக தயாரித்துக்கொள்ளலாமா? அவரது சாதனைகளை வாக்காளர்கள் அல்லது குடியிருப்பாளர்கள் மதிப்பிடுவதுதானே சரியாக இருக்கும்”, என்று ருஸ்லி குறிப்பிட்டார்.

லெம்பா பந்தாயில் பிறந்து வளர்ந்தவரான ருஸ்லி, அங்குள்ள குடியிருப்பாளர்களின் உண்மைக் குரலாக ஒலிக்க விரும்புகிறார்.

கிரிஞ்சி அடுக்குமாடி வீடுகளை மறுபடியும் கட்டப்போவதாகக் கூறி உடைத்தார்கள். ஆனால், சொன்னபடி கட்டித்தரவில்லை. “இப்போது அங்கும் ஒன்றும் இல்லை. அதனால் மக்கள் ஆத்திரமடைந்துள்ளனர்”, என்றாரவர்.

கோலாலும்பூர் கூட்டரசு பிரதேசத்தில் கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படும் இடங்களில் லெம்பா பந்தாயும் ஒன்று. அங்கு, பழைய கிள்ளான் சாலைக்கு அப்பால் உள்ள கம்போங் செந்தோசா,  ஜாலான் ட்ரேவர்ஸ், பிரிக்பீல்ட்ஸ், பந்தாய் டாலாம், கம்போங் பகாஹ்யா, கம்போங் போஹோல்,  பெட்டாலிங், பெட்டாலிங் செலாதான் என எங்கு நோக்கினும் ராஜா நொங் சிக்கின் சாதனைகளை விளக்கும் பெரிய பெரிய விளம்பரப் பலகைகளும் சுவரொட்டிகளும்தான் கண்ணில் படுகின்றன.

அமைச்சரின் பிம்பங்கள், மின்னியல் விளம்பரங்களிலும் வந்துபோகின்றன. மாநகராட்சி மன்றத்திடம் உரிமம் பெற்று தனியார் நிறுவனமொன்று அதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

ஆனால், மலாயாப் பல்கலைகழக ஜனநாயக, தேர்தல் மையம் (யுஎம்சிடெல்), 1,407 பேரைச் சந்தித்து விவரங்கள் சேர்த்ததில் அவர்களில் 66 விழுக்காட்டினர் இந்த வகை பரப்புரையால் எந்தப் பயனுமில்லை என்றனர்.

அப்படியானால், மே 5-இல் லெம்பா பந்தாயில் வெல்லப்போவது யார்?