பிகேஆர்: சந்தேகத்துக்குரிய வாக்காளர்களை அழைத்துவருவதில் பிரதமர் அலுவலகத்துக்குத் தொடர்புண்டு

1 voterகிழக்கு மலேசியாவிலிருந்து தீவகற்பத்துக்கு சந்தேகத்துக்குரிய வாக்காளர்களை விமானத்தில் அழைத்துவருவதில் பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) சம்பந்தப்பட்டிருப்பதாக பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறுகிறார்.

ஒவ்வொரு நாளும் கிழக்கு மலேசியாவிலிருந்து  தீவகற்பத்துக்கு  16 விமானப் பயணங்கள்  வாடகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று கூறிய அவர்,  அதற்கான ஆதாரங்களைத் தம் கட்சி  வைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.

அதன்படி பார்த்தால்  வாக்களிப்பு நாளுக்கு  முன்னதாக குறைந்தது  40,500 பேர் விமானங்கள்வழி இங்கு அழைத்துவரப்பட்டிருப்பார்கள்  என்றாரவர்.  பிகேஆர் வசமுள்ள பயணிகளின் பட்டியல் அவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டவர்  என்பதைக் காண்பிப்பதாகவும் அவர் சொன்னார்.

மலேசிய விமான நிறுவனத்துக்குள் நிகழ்ந்துள்ள மின்னஞ்சல் தொடர்புகளைக் காண்பிக்கும் பிரதி ஒன்றும் தம் கட்சிக்கு கிடைத்திருப்பதாகக் கூறிய அன்வார், அது வாடகை விமானப் பயணங்களுக்கும் பிஎம்ஓ-வுக்கும் சம்பந்தமுண்டு என்று குறிப்பிடுவதாகவும் தெரிவித்தார்.

ஆனால், அந்த ஆவணங்களில் எதுவும்  ஊடகங்களிடம் காண்பிக்கப்படவில்லை.  அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்பதால் அவற்றை வெளியிட இயலாது என்று மாற்றரசுக் கட்சித் தலைவர் கூறினார்.