தேசிய வங்கி ஊழியர் சங்க உறுப்பினர்கள் போலீஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டனர்

anti_supraபராமரிப்பு அரசாங்க மனித வள அமைச்சர் டாக்டர் எஸ் சுப்ரமணியத்துக்கு எதிராக மறியலில் ஈடுபட்டதற்காக தேசிய வங்கி ஊழியர் சங்க உறுப்பினர்கள் சிகாமட் மாவட்ட போலீஸ் தலைமையகத்துக்கு வருமாறு போலீஸ் அழைப்பாணை வழங்கியது.

சிகாமட்டில் நேற்றும் இன்றும் மறியலில் ஈடுபட்ட அந்தச் சங்கத்தின் 150-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களிடமிருந்து வாக்குமூலத்தைப் பதிவு செய்ய போலீஸ் விரும்பியதாக அந்தச் சங்கத்தின் தலைமைச்  செயலாளர் ஜே சாலமன் கூறினார்.

“அதனைத் தான்- எனது எல்லா உறுப்பினர்களையும் கொண்டு வருமாறு போலீஸ் என்னிடம் கூறியது,” என சாலமன் சிகாமட் மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

அந்த உறுப்பினர்கள் தங்கியிருந்த விடுதிகளுக்கு இன்று காலை சென்ற போலீசார், மறியலில் ஈடுபட்ட எல்லா சங்க உறுப்பினர்களுடைய வாக்குமூலத்தை பதிவு செய்ய விரும்புவதாகத் தெரிவித்தனர் என அந்த சங்கத்தின்  துணைத் தலைமைச் செயலாளர் ஏ கருணா கூறினார்.

“அது அச்சுறுத்தல் என நாங்கள் அவர்களிடம் கூறினோம். பின்னர் நாங்கள் 11 மணிக்கு மறியல் செய்வதற்காக சென்றோம்,” என கருணா சொன்னார்.

“நாங்கள் மறியலில் ஈடுபட்டிருந்த போது நாங்கள் கலைந்து செல்ல வேண்டும் எனப் போலீசார் கோரினர். அவர்கள் கலகத் தடுப்புப் போலீசாரைக் கூட நிறுத்தினர்,” என்றார் அவர்.

“நாங்கள் கலைந்து செல்லா விட்டால் படைபலத்தைப் பயன்படுத்துவோம் என்றும் அவர்கள் கூறினர். ஆகவே எங்கள் உறுப்பினர்களும் எந்த வன்முறைக்கும் இலக்காகக் கூடாது என்பதற்காக நாங்கள் கலைந்து சென்றோம்,” என கருணா மேலும் சொன்னார்.

இதனிடையே வாக்குமூலம் கொடுப்பதற்காக எல்லா தேசிய வங்கி ஊழியர் சங்க உறுப்பினர்களும் சிகாமாட் போலீஸ் தலைமையகத்துக்கு வெளியில் இப்போது இரண்டு வரிசையாக நின்று கொண்டிருக்கின்றனர்.