நிருபர்கள்: அஞ்சல் வாக்களிப்பு முறை மனநிறைவு அளிக்கவில்லை

13வது பொதுத் தேர்தலில் முதன் முறையாக ஊடகவியலாளர்கள் அஞ்சல் வாக்காளர்களாகப் பதிவு செய்து  கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளனர். என்றாலும் அதன் நடைமுறை தங்களுக்கு மனநிறைவைத் தரவில்லை என  பல நிருபர்கள் தெரிவித்துள்ளனர்.

அஞ்சல் வாக்குச் சீட்டுக்கள் மிகவும் தாமதமாக வந்தன என்பது பொதுவான புகார் ஆகும். சில நிருபர்களுக்கு
வாக்குச் சீட்டுக்கள் நேற்று தான் கிடைத்தன. ஆனால் சிலருக்கு ஏப்ரல் 29ம் தேதியே கிடைத்து விட்டன.pos

“அது எங்களுக்கு முன்கூட்டியே அதாவது குறைந்தது தேர்தல் தினத்துக்கு ஒரு வாரம் முன்னதாக  கிடைத்திருக்க வேண்டும்,” எனத் தம்மை அடையாளம் காட்டிக் கொள்ள விரும்பாத நிருபர் ஒருவர்
சொன்னார்.

அந்த நிருபர் இப்போது கோலா சிலாங்கூரில் பணியாற்றுகிறார், அவர் சிலாங்கூரில் இன்னொரு பகுதியில்  வாக்காளர்.

“வாக்களிப்புக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன. நான் சிலாங்கூரில் இருப்பதால் பரவாயில்லை.  ஜோகூர் அல்லது பினாங்கில் வாக்களிப்பவர் நிலை என்ன ? அவர்களுடைய வாக்குச் சீட்டுக்கள் ஞாயிற்றுக்
கிழமைக்குள் தேர்தல் அதிகாரிக்குக் கிடைக்குமா என்பது எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை,” என அவர்  சொன்னார்.

தேர்தல் ஆணைய (இசி) செலவில் சிறப்புக் கடித உறையில் முன்னுரிமை பெற்ற அஞ்சலாக வாக்குச் சீட்டுக்கள்  அனுப்பப்படுகின்றன. வாக்களிப்பு தினத்தன்று மாலை 5 மணிக்குள் அவை அஞ்சல் வாக்காளரின் தேர்தல்  அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

pos1கோத்தா கினாபாலுவில் உள்ள மலேசியாகினி நிருபர் அய்டிலா ரசாக்கிற்கும் அவரது நான்கு நண்பர்களுக்கும்  கோலாலம்பூரிலிருந்து நேற்று தான் வாக்குச் சீட்டுக்கள் கிடைத்தன.

அவருடைய வாக்குச் சீட்டுக்கள் உரிய நேரத்தில் அனுப்பப்பட்டு விடும் என அந்த நகரத்தில் உள்ள  அஞ்சலகம் வாக்குறுதி அளித்துள்ளதாக அய்டிலா சொன்னார்.

இதனிடையே கினிடிவி-யின் தொழில்நுட்ப தயாரிப்பாளர் ஜான் தான் ஜியான் வூ இசி, தொலைபேசி வழி  அலோர் ஸ்டார் தேர்தல் அதிகாரியுடன் தொடர்பு கொள்ள பல முயன்றதாகவும் இசி இணையத் தளத்தில்
குறிக்கப்பட்டுள்ள தொலைபேசி எண் தவறானது என்பதைப் பின்னர் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

“கடைசியாக மாலை 6 மணிக்கு அந்த தொலைபேசியில் பேசிய ஒரு மாது அது தமது வீட்டு தொலைபேசி  எண் எனத் தெரிவித்தார். அஞ்சல் வாக்குகள் பற்றி பலர் அந்த எண்ணில் தொடர்பு கொள்வதாகவும் அவர்
சொன்னார்,” என்றார் ஜான் தான்.