‘மிலோசுவாம்’ என்ற பக்காத்தான் ராக்யாட் வலைப்பதிவாளர் அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளது, அவர் தமது வலைப்பதிவில் சேர்த்த ஆவணம் உண்மையானது என்பதை நிரூபிப்பதாக பிகேஆர் கட்சியின் ஆர் சிவராசா சொல்கிறார்.
ஏப்ரல் 23ம் தேதி அந்த வலைப்பதிவாளர் ‘Maklumat sulit: Pendatang asing bakal cetus huru hara di Sabah’ (ரகசியத் தகவல்: சபாவில் அந்நியர்கள் குழப்பத்தை ஏற்படுத்துவர்) என்ற தலைப்பில் சேர்த்த வலைப்பதிவு மீது அவரை விசாரிப்பதாக போலீசார் இன்று நீதிமன்றத்தில் கூறியுள்ளனர்.
கோத்தா கினாபாலுவிலும் தாவாவிலும் 1,400 அந்நியர்கள் குழப்பத்தை ஏற்படுத்த தயாராக இருப்பதாக
எச்சரிக்கும் ரகசிய போலீஸ் ஆவணம் ஒன்றின் படத்தையும் மிலோசுவாம் வலைப்பதிவில் வெளியிட்டிருந்தார்.
“அவர்கள் இப்போது அதிகாரத்துவ ரகசியச் சட்டத்தின் கீழ் விசாரிக்கின்றனர். அது அந்த ஆவணத்தில்
கூறப்பட்டுள்ளவை உண்மையானவை என்பதை நிரூபிக்கின்றது.”
“ஏன் அது குறித்து மலேசியர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை ?” என சிவராசா வினவினார்.
மிலோசுவாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதற்கும் தாங்கள் கொடுக்கும் காரணங்களையும் போலீசார் மாற்றிக்
கொண்டே இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
முன்கூட்டியே வாக்களிப்பது தொடர்பான வலைப்பதிவுக்காக மிலோசுவாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக
இதற்கு முன்னர் வந்த தகவல்கள் கூறியதாக அவர் சொன்னார்.
யூசுப் அல் சிடிக் என்ற இயற்பெயரைக் கொண்ட அந்த வலைப்பதிவாளர் தடுத்து வைக்கப்படும் காலத்தை
நீட்டிப்பதற்கும் போலீசார் வழி தேடுவதாகவும் சிவராசா சொன்னார்.
மிலோசுவாமின் தடுப்புக் காவல் காலம் இன்று முடிவடைந்தது.