இவ்வாண்டுக்கான பொருளாதார சுதந்திர அளவை மதிப்பீடு செய்யும் குறியீட்டில் இடம் பெற்றுள்ள 140 நாடுகளில் மலேசியா 78வது இடத்துக்கு தாழ்ந்து விட்டது.
அரசாங்கத்தின் அளவு, வலிமையான பணத்திற்கான வாய்ப்புக்கள் ஆகியவை உட்பட பல துறைகளில் நாட்டின் அடைவு நிலை அந்தக் குறியீட்டில் மோசமாகப் பதிவாகியுள்ளதே அதற்குக் காரணம் ஆகும்.
பொருளாதாரத்தில் ஜிஎல்சி என அழைக்கப்படும் அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்கள் பெரும் பங்கு வகிப்பதால் அரசாங்கத் தொழில்கள், முதலீடுகள் என்னும் துணைப் பிரிவில் நாட்டுக்கு பூஜ்யம் மதிப்பெண் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது மிகவும் கவலையை அளிக்கும் விஷயமாகும்.
“2011ம் ஆண்டுக்கான பொருளாதார சுதந்திரம் மீதான ஆண்டறிக்கையை” கோலாலம்பூரில் சமர்பித்த பிரேசர் அமைப்பின் பேராளர் பிரட் மக்மாஹோன் அவ்வாறு கூறினார்.
பொருளாதாரத்தில் அரசாங்க நிறுவனங்கள் அதிக ஈடுபாடு கொள்ளும் போது ஆதரவு நடவடிக்கைகள் அதிகமாகக் கூடிய சாத்தியம் உண்டு என அவர் சொன்னார்.
“பொருளாதாரத்தில் ஜிஎல்சி நிறுவனங்கள் 50 விழுக்காட்டுக்கும் மேற்பட்ட பங்கைக் கொண்டிருப்பதால் மலேசியாவுக்கு அந்தப் பிரிவில் பூஜ்யம் மதிப்பெண் கொடுக்கப்பட்டுள்ளது.”
“அத்தகைய நிலை சுதந்திரமான பரிவர்த்தனைக்கான வாய்ப்புக்களை குறைக்கிறது. பொருளாதாரம் அரசியல் மயமாகும் வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன. ஆதரவு நடவடிக்கைகளும் கூடுகின்றன”, எனக் குறிப்பிட்ட அவர், 2009ம் ஆண்டு திரட்டப்பட்ட புள்ளி விவரங்கள் அடிப்படையில் அந்தக் குறியீடு அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.