சொய் லெக் கட்சித் தேர்தலில் மீண்டும் போட்டியிட மாட்டார்

Soi Lekவிரைவில் நடைபெறவிருக்கும் மசீச கட்சித் தேர்தலிலிருந்து தாம் ஒதுங்கியிருக்கப் போவதாக அதன் தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் அறிவித்துள்ளார்.

இன்று வெளியிட்ட பத்திரிக்கை குறிப்பில் அதனைத் தெரிவித்த சுவா, தமது பதவியைத் தக்க வைத்துள்ள போட்டியிடாததற்கான காரணத்தைக் கூறவில்லை.

அவர் தேர்தலில் மோசமான அடைவு நிலைக்கு மசீச கட்சியைக் கொண்டு சென்றவர் என வரலாற்றில் அவர் குறிப்பிடப்படக் கூடும்.

மசீச 37 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு 7ல் மட்டுமே வென்றது. அது போட்டியிட்ட 90 சட்டமன்றத் தொகுதிகளில் 11ல் மட்டுமே வெற்றி பெற்றது. 2008ல் அது 15 நாடாளுமன்றத் தொகுதிகளையும் 32 சட்டமன்றத் தொகுதிகளையும் பிடித்தது.

“நான் மசீச இழப்புக்களை ஏற்றுக் கொள்கிறேன். மாநில நிலையிலும் கூட்டரசு நிலையிலும் கட்சி எந்த அரசாங்கப் பதவிகளையும் ஏற்காது.”

“கட்சியின் அவசரப் பொதுக் கூட்டத்தில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்ட அந்த முடிவை மத்தியக் குழுவும் ஒருமனதாக அங்கீகரித்துள்ளது,” என்றார் அவர்.

சீனர்கள் தவறாக வழி நடத்தப்பட்டுள்ளனர் ?

2008ஐக் காட்டிலும் மோசமான அடைவு நிலையைப் பெற்றால் அமைச்சரவைப் பதவிகள் உட்பட எந்த அரசாங்கப் பதவிகளையும் ஏற்றுக் கொள்வதில்லை என மசீச 2011ல் முடிவு செய்தது.

இதனிடையே வாக்காளர்களுடைய முடிவுகளை மசீச மதிக்கிறது என்றும் சுவா சொன்னார்.

“அது தான் ஜனநாயகம்,” என்றார் அவர்.

என்றாலும் பிஎன் -னுக்கு எதிராக பெரும்பாலும் வாக்களித்த சமூகத்தை நோக்கமாகக் கொண்ட சில கருத்துக்களையும் சுவா வெளியிட்டார்.

“டிஏபி அரசாங்கத்தை மாற்ற முடியும் என்ற எண்ணத்துடன் சீனர்கள் இனவம்சாவளி அடிப்படையில் வாக்களித்துள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது.”

“மாநில, கூட்டரசு அரசாங்கங்களிலிருந்து சீனர்களை வாக்களிப்பு மூலம் விலக்கி வைப்பதால் மட்டும் அரசாங்கத்தின் மீதான அதிருப்தியை போக்கி விட முடியாது,” என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும் விரைவில் பிரதமர் பொறுப்பை ஏற்கும் நஜிப் அப்துல் ரசாக், தமது அரவணைப்புக் கொள்கையை தொடர்ந்து சீன சமூகத்தின் நலன்களையும் கவனிப்பார் எனத் தாம் நம்புவதாகவும் சுவா சொன்னார்.

TAGS: