அன்வார்: என்னுடைய வேலை இன்னும் முடியவில்லை

anwarபிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அரசியலிலிருந்து ஒய்வு பெறுவது குறித்து இன்னும் சிந்திக்கத் தொடங்கவில்லை. காரணம் நேற்றைய சர்ச்சைக்குரிய தேர்தலில் பக்காத்தான் ராக்யாட் தோல்வி கண்ட பின்னர் மலேசிய அரசியல் களத்தில் தமது வேலை ‘இன்னும் முடியவில்லை’ என அவர் கருதுகிறார்.

பொதுத் தேர்தலுக்கான தேர்தல் ஆணைய (இசி) முடிவுகளை தாம் ஏற்றுக் கொள்ளவில்லை எனக் கூறிய அன்வார், தேர்தல் முடிவுகள் குறித்த “எல்லா பிரச்னைகளையும் தீர்க்க வேண்டியுள்ளதாக” சொன்னார். அதற்குப் பின்னர் தமக்கு உள்ள அடுத்த வழிகளை ஆராயப் போவதாக அவர் தெரிவித்தார். நேற்றைய தேர்தலில் பக்காத்தான் 89 நாடாளுமன்ற இடங்களை வென்றது. கூட்டரசு அரசாங்கத்தை அமைப்பதற்கு அது போதுமானது அல்ல.

இந்தத் தேர்தலில் பக்காத்தான் அதிகாரத்தைக் கைப்பற்றத் தவறினால் ஐரோப்பாவில் கற்பிக்கும் வேலையை ஏற்றுக் கொண்டு ஓய்வு எடுப்பது பற்றிப் பரிசீலிக்கப் போவதாக அன்வார் ஏற்கனவே கூறியிருந்தார்.

“இந்தத் தேர்தலை அம்னோ/ பிஎன் எங்களிடமிருந்து திருடி விட்டது. என்னைப் பொறுத்த வரையில் இந்தத் தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம்,” என பிகேஆர் தலைமையகத்தில் மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னார்.

தாமும் மற்ற கூட்டணி தோழமைக் கட்சிகளான டிஏபி, பாஸ் ஆகியவற்றின் தலைவர்களும் அடுத்த கட்ட நடவடிக்கையை முடிவு செய்வோம் என்றும் அன்வார் கூறினார்.

சர்ச்சைக்குரிய சில தொகுதிகளில் முடிவுகளை இசி மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என பக்காத்தான் விண்ணப்பம் செய்யக் கூடும் என்றார் அவர்.