நாடாளுமன்ற சிறப்புக்குழு நாளை கூடாது, நஸ்ரி

தேர்தல் சீரமைப்பு மீதான நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் முதலாவது கூட்டம் நாளை நடைபெறாது என்று பிரதமர்துறை அமைச்சர்  முகம்மட் நஸ்ரி அப்துல் அசீஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன்வழி நேற்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், நாடாளுமன்றக் குழு அமைக்கப்படுவதாக செய்த அறிவிப்பை அடுத்து உருவான குழப்பத்துக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.

“நாளை நடப்பது அமைச்சரவைக் கூட்டம், நாடாளுமன்ற சிறப்புக்குழு கூட்டமல்ல.

“எம்பிகள் கொடுத்த மகஜரை நான்தான் கொண்டு சென்றேன். சிறப்புக்குழு அமைக்க ஒப்புக்கொண்டோம்”, என்று நஸ்ரி கூறினார்.

நாடாளுமன்றத்தின் அவசரக்கூட்டம் கூட்டப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு ஆகஸ்ட் 8-இல் மாற்றரசுக் கட்சி எம்பிகள் ஒப்படைத்த மகஜரைத்தான் நஸ்ரி குறிப்பிட்டார்.

நிரந்தர வசிப்பிடத் தகுதி கொண்ட சுமார் 1,100 பேர் வாக்காளர்களாக வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்பட்டதன் தொடர்பில் அவர்கள் அந்த மகஜரைச் சமர்பித்திருந்தனர்.

இரு தரப்பு உறுப்பினர்களையும் கொண்ட  நாடாளுமன்ற சிறப்புக்குழுவின் கூட்டம் நாளை நடைபெறும் என நஜிப்பை மேற்கோள்காட்டி பெர்னாமா நேற்று அறிவித்திருந்தது.