பிஎன்-னை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதற்கு ‘செப்டம்பர் 16’ பாணியில் இன்னொரு கட்சித் தாவலுக்கு முயற்சி செய்யப் போவதில்லை என பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.
என்றாலும் ஆட்சி புரிவதற்கு பிஎன்-னுக்கு உள்ள சட்டப்பூர்வநிலை இன்னும் கேள்விக்குறியாகவே இருப்பதை பிஎன் தலைவர் நஜிப் அப்துல் ரசாக் ஒப்புக் கொள்ள வேண்டும் என அவர் விரும்புகிறார்.
அன்வார் 13வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் முதன் முறையாக மலேசியாகினிக்கு அளித்த பேட்டியில் அவ்வாறு கூறியிருக்கிறார்.
மோசடிச் சம்பவங்கள், வாக்குகளை வாங்கியது, தேர்தல் ஆணையம் சம்பந்தப்பட்ட முறைகேடுகள்
ஆகியவற்றின் வழி பிஎன் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.
“ஆம், நாங்கள் மக்கள் விருப்பத்துக்குக் கட்டுப்படுவோம். ஆனால் இடைக்காலத்தில் என்றாலும் ஆட்சி புரிவதற்கு பிஎன்-னுக்கு உள்ள சட்டப்பூர்வ நிலை இன்னும் கேள்விக்குறியாகவே இருப்பதை பிஎன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். நீங்கள் தேர்தலை எங்களிடமிருந்தும் மக்களிடமிருந்தும் திருடி விட்டீர்கள்,” என்றார் அவர்.
12வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் 2008ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி 30 பிஎன் எம்பி-க்கள் பக்காத்தான் ராக்யாட்டில் சேருவர் என அன்வார் செய்த முயற்சிக்கு ‘செப்டம்பர் 16’ என்ற குறியீட்டுச் சொல் கொடுக்கப்பட்டிருந்தது. அத்தகைய முயற்சி மீண்டும் மேற்கொள்ளப்படுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அன்வார் அந்த விவரங்களைத் தெரிவித்தார்.
15 நாள் தேர்தல் பிரச்சாரத்திற்குப் பின்னர் பிஎன் 133 நாடாளுமன்றத் தொகுதிகளை வென்றது. அந்த
எண்னிக்கை 2008ல் அதற்குக் கிடைத்ததை விட ஏழு இடங்கள் குறைவாகும். பக்காத்தான் 89 இடங்களை பிடித்தது. அது அதிகாரத்தைப் பிடிக்க வேண்டுமானால் 23 எம்பி-க்கள் கட்சி மாற வேண்டும்.
மே 5 தேர்தலில் மொத்தம் செலுத்தப்பட்ட வாக்குகளில் 50 விழுக்காட்டுக்கும் குறைவாக பிஎன் -னுக்குப் போடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 505 சட்டமன்றத் தொகுதிகளில் 230ல் அது தோல்வி கண்டது. வரலாற்றில் அதற்குக் கிடைத்துள்ள மோசமான தேர்தல் அடைவு நிலை இதுவாகும்.
இறுதிக் கணக்குப்படி தீவகற்ப மலேசியாவில் மொத்த வாக்குகளில் பக்காத்தானுக்கு 53.29 விழுக்காடு வாக்குகள் கிடைத்துள்ளன. பிஎன் -னுக்கு 45.74 விழுக்காடு வாக்குகள் கிடைத்தன. சபா, சரவாக் உட்பட தேசிய அளவிலான புள்ளி விவரங்களின் படி பக்காத்தானுக்கு 50.87 விழுக்காடு வாக்குகளும் பிஎன்-னுக்கு 47.38 விழுக்காடு வாக்குகளும் கிடைத்துள்ளன.
மோசடி, தேர்தல் முறைகேடுகள் ஆகியவற்றுக்காக சில முடிவுகளின் சட்டப்பூர்வ நிலை குறித்து தேர்தல் மனுக்கள் சமர்பிக்கப்பட வேண்டும் என்றும் அன்வார் விரும்புகிறார்.
பிரச்சாரத்தின் போது தேர்தல் ஆணையம் நேர்மையாக நடந்து கொள்ளவில்லை என்றும் ஊடகங்களில் பக்காத்தானுக்கு சமமான இடம் கிடைப்பதை அது உறுதி செய்யவில்லை என்றும் அவர் சொன்னார்.
‘மலாய்க்காரர்களும் புரட்சி செய்துள்ளனர்’
சந்தேகத்துக்குரிய வகையில் பிரஜாவுரிமைப் பத்திரங்களைப் பெற்ற பின்னர் அந்நியர்களும் மே 5 தேர்தலில் வாக்களித்தனர் என அன்வார் மீண்டும் வலியுறுத்தினார்.
“அது பற்றி அறிந்த அம்னோ உறுப்பினர் ஒருவரை நான் சந்தித்தேன். அந்த விஷயம் பற்றிச் செல்லுமாறு நான் அவரைக் கேட்டுக் கொண்டேன்.’
“இந்த நாட்டின் எதிர்காலத்தை மலாய்க்காரர்களும் மற்ற மலேசியர்களும் நிர்ணயிக்க முடியும் என்பதில் உங்களுக்கு நம்பிக்கை இல்லையா ? அதனால் நீங்கள் அந்நியர்களை சார்ந்திருக்க வேண்டுமா ?” என நான் அவரிடம் கேட்டேன்.
“தாம் அதனை ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அதில் தமக்கு எந்தப் பங்கும் இல்லை என்றும் அந்த அம்னோ உறுப்பினர் பதில் அளித்தார்,” என்றார் அன்வார்.
இன ரீதியாக வாக்களிப்பப்பட்டுள்ளதைத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாக சொல்லப்படுவதை அன்வார் நிராகரித்தார். பல மலாய்க்காரர்கள் குறிப்பாக கிளந்தான், திரங்கானு, சிலாங்கூர் ஆகியவற்றில் மலாய்க்காரர்கள் பிஎன்-னுக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
மலாக்காவில் இரண்டு மலாய் பெரும்பான்மை தொகுதிகளான புக்கிட் கட்டிலிலும் புக்கிட் பாருவிலும் முறையே பிகேஆர் கட்சியும் பாஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
“ஜோகூர் பாருவில் நடைபெற்ற 80 விழுக்காடு செராமாக்களில் அதிகமான மலாய்க்காரர்கள் கலந்து
கொண்டனர். வடக்கில் கூலிமிலும் பாடாங் செராயிலும் அதே நிலை தான் நிலவியது.
“எதிர்த்தரப்புக்குச் சீனர் ஆதரவு சாதகாமக இருந்தது என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் இன ரீதியாக வாக்களிக்கப்பட்டது எனக் கூறப்படுவதை நான் ஆதரிக்கவில்லை.”
“தேர்தல் நடைமுறையில் மோசடிகள் இல்லாவிட்டால் நாங்கள் எங்கள் இலக்கை அடைந்திருப்போம்,” என்றார் அன்வார்.
தேர்தல் வரலாற்றில் மோசமான அடைவு நிலையை பிஎன் பெற்றதற்கு “சீனர் சுனாமி” காரணம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பழி சுமத்தியிருந்தார்.
பாஸ் கட்சிக்கு நிலைமை கடுமையாக இருந்தது
பாஸ் உதவித் தலைவர் முகமட் சாபு, உதவித் தலைவர்களான சலாஹுடின் அயூப், ஹுசாம் மூசா, மத்தியக் குழு உறுப்பினரான சுல்கெப்லி அகமட் போன்ற மிதவாதிகள் தோல்வி அடைந்துள்ளது குறித்து அன்வார் வருத்தம் தெரிவித்தார்.
முஸ்லிம் அல்லாதார் ‘அல்லாஹ்’ என்னும் சொல்லைப் பயன்படுத்த முடியுமா முடியாதா என்ற சர்ச்சைக்குரிய விஷயங்கள் மலாய்க்காரர்களிடம் பெரிதாக காட்டப்பட்டது போன்ற பிரச்னைகளை அந்தத் தலைவர்கள் சமாளிக்க வேண்டியிருந்தது என்றார் அவர்.
“முக்கிய நாளேடுகள் ‘அல்லாஹ்’ விவகாரத்தை பெரிதாக்கின. அதே வேளையில் விளக்குவதற்கு பாஸ் கட்சிக்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை. ‘அல்லாஹ்’ விஷயத்தில் இஸ்லாமிய நிலையை துணிச்சலாக எடுத்துக் கூறிய பாஸ் கட்சிக்கு அவை நியாயமான இடம் கொடுக்கவில்லை.”
“மக்கள் விரக்தியையும் அவர்கள் எங்களுக்குக் காட்டிய பாசத்தையும் பார்க்கும் போது அத்தகைய அம்சங்கள் எனக்கு வருத்தத்தை கொடுக்கின்றன.”
வாக்குகள் வாங்கப்பட்டது குறித்து தெரிவிக்கப்பட்ட புகார்கள் மீது இசி எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை. நியாயமான சுதந்திரமான தேர்தல்களை நடத்தும் பொருட்டு அந்த ஆணையம்
சீர்திருத்தப்பட வேண்டும் என பக்காத்தான் தொடர்ந்து போராடும் என்றும் அவர் சொன்னார்.
‘தேசிய சமரசத்தை’ நாடப் போவதாக நஜிப் அளித்துள்ள வாக்குறுதியையும் அன்வார் நிராகரித்தார். அந்த
வாக்குறுதி வெறுமையானது எனக் குறிப்பிட்ட அவர், அதேவேளையில் பிஎன்-னைக் கைவிட்டதற்காக நஜிப் சீனர்கள் மீது பழி போடுகிறார் என்றார்.
“அவர் பெரிய மனதுடன் நடந்து கொள்வதற்கான அறிகுறிகளைக் காட்டலாம். ஆனால் அவர் பிஎன் இழப்புக்களுக்கு ‘சீனர் சுனாமி’ காரணம் பழி போடும் போது தாம் சொல்வதையே மறுக்கிறார்.”
“மலாய்க்காரர்களையும் இந்தியர்களையும் வாங்கியது போல சீன தலைவர்களை வாங்குவதில் அவர் வெற்றி பெறாமல் போனதால் அவர் பழி போடுகிறார்.”
“அவரது சமரச முயற்சிகளுக்கு கலந்துரையாடல் உணர்வுடன் உருப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,” என்றும் அன்வார் குறிப்பிட்டார்.
தேர்தல் ஆணையமே ஆளும் கட்சியின் கையில் இருந்தால் முறைகேடுகல் நடக்கதானே செய்யும்.
இன்னும் எத்தனை நாளைக்கு தான் இந்த bn அரசாங்கம் நம்மை ஏமாற்றி ஆளுமோ… மக்கள் மாற்றத்தை ஏற்படுத்த நினைத்தாலும் இவர்கள் கள்ள ஓட்டும்,அந்நிய நாட்டவருக்கு ic கொடுத்து பிரஜைகளாக மாற்றி ஒட்டு சேகரித்தும் ,வாக்களிப்பு முடிந்து வாக்கு சாவடிக்கு கொண்டு செல்லபடும் பெட்டிகலை மாற்றியும் வெற்றி பெற்று இருக்கிறார்கல்.
தேர்தல் ஆணையம் நடந்துகொண்ட விதம்….,விரலில் மைதடவி அனைவரையும் முட்டாளாக செய்த சதி. உழல் நிறைந்த மை ……30 நிமிடம் தாக்கு பிடிக்கல. இவங்கலாம் தலைவன்கள்.
nirmala ; இங்கேயே பிறந்து வாழ்ந்து கொண்டு இருக்கும் நாம்மவர்களுக்கு ic கொடுக்க மனசு வராதவர்கள்,ஆயிரம் கேள்வி கேட்பார்கள்.பிறகு andah tidak layak kerana taktahu bercakap bahasa malaysia .ஆனால் அந்நிய நாட்டுக்காரானுக்கு ஒரு கேள்வியும் கேட்கமாட்டர்கள்.அந்நிய நாட்டுக்காரான் ic கேட்காமலே வாரி வாரி வழங்குவார்கள். இவர்கள் தேர்தலில் வெற்றி பெற சட்டத்தை தவாறாக பயன் படுத்துவார்கள்.யாரும் கேள்வி கேட்க முடியாது.கேட்டால் பதில் இந்நாட்டு பிரைஜைகள் என்கிறார்கள் இந்தாஅநியாயத்தை யாரிடம் சொல்ல எங்கே போய் சொல்ல என்று தெரியவில்லை.