உத்துசானின் முதல்பக்கச் செய்தியால் ஆத்திரமடைந்த வலைமக்கள் டிவிட்டரில் சாடல்

utusanஇன்றைய உத்துசான் மலேசியா, ‘Apa lagi Cina mahu?’(சீனர்களுக்கு இன்னும் என்னதான் வேண்டும்) என்ற தலைப்பில் அதன் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது  அம்னோ உச்சமன்ற உறுப்பினர் சைபுடின் அப்துல்லா உள்பட பலரையும் ஆத்திரம் கொள்ள வைத்துள்ளது. அவர்கள் டிவிட்டரில் பதிவிட்டு தங்கள் ஆத்திரத்தைக் கொட்டியுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை தேர்தலில்  நாடாளுமன்றத்துக்குப் போட்டியிட்ட தோற்ற சைபுடின் டிவிட்டரில்  இப்படிக் கூறியிருந்தார்:  “அந்தத் தலைப்பில் எனக்கு உடன்பாடில்லை.  13வது பொதுத் தேர்தல் முடிவுகளை விவேகமான முறையில் அலசி ஆராய வேண்டும்.

“நான் தோற்றேன்.  ஆனால், அதற்கு யாரும் காரணம் என்று நான் நினைக்கவில்லை”.

மற்ற வலைமக்களும், மலாய்க்காரர்கள் உள்பட,  அந்த முதல்பக்கச் செய்தித் தலைப்பைக் கண்டித்தனர்.

அச்செய்திக் கட்டுரையை வரைந்திருந்த அம்னோவுக்குச் சொந்தமான அச்செய்தித்தாளின் ஆசிரியர் சுல்கிப்ளி பக்கார், சீனர்கள்  டிஏபி-இன் இன அரசியலில் சிக்கிக்கொண்டதாகவும்  ஆனால்,  மலாய்க்காரர்களால் வழிநடத்தப்படும் பிஎன் அரசை அவர்களால்  கவிழ்க்க முடியவில்லை என்று குறிப்பிட்டிருந்தார்.

“சீனர்களுக்கு மேலும் என்னதான் வேண்டும்?” என்று வினவும் பல குறுஞ்செய்திகளையும் பெற்றிருப்பதாக அந்நாளேடு கூறியது

1 aliமுன்னாள் மலாக்கா முதலமைச்சர் முகம்மட் அலி ருஸ்தம் சீனர்கள் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளதாகவும் அது குறிப்பிட்டது.

“மலாய்க்காரர்களை இனவாதிகள் என்கின்றனர். ஆனால், அவர்கள்தான் இனவாதிகள். நாங்கள் செய்ததை அவர்கள் மதிக்கவில்லை.  இரவில் நெடுநேரம் கழித்துக்கூட என் வீடு தேடிவந்து உதவி கேட்பார்கள். இப்போது இதுதான் அதற்குக் கைமாறு.

“நான் அவ்வளவு மோசமானவனா?  மலேசியாவிலேயே வேலையின்மை குறைந்த அளவு உள்ள மாநிலம் மலாக்காதானே?

“சீனர்கள் மலாய்க்காரர்களைப் போலவே வளமாக இருக்கிறார்கள். பெரிய, பெரிய வீடுகளை வைத்துள்ளனர். ஆனால், பணம் வந்ததும் நம்மை இகழ்ச்சி செய்கிறார்கள்”, என்று முகம்மட் அலி கூறியதாக அது குறிப்பிட்டுள்ளது. முகம்மட் அலி புக்கிட் கெட்டில் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வி கண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்பக்கச் செய்தியால் குறித்து மலாய்க்காரர்களும் கவலை தெரிவித்தனர்

மலாய்க்காரர்கள் பலரும் டிவிட்டரில், இந்த முதல்பக்கச் செய்தியைக் கண்டித்துள்ளனர். ஒருவர் தாம் ஒரு சீன நிறுவனத்தில் பணிபுரிவதாகக் கூறியிருந்தார்.

இன்னொருவர், தாம் இன்று கல்லூரி வகுப்புக்குச் செல்லவே கவலையுறுவதாகத் தெரிவித்தார். அவரது வகுப்பில் பெரும்பாலோர் சீனர்களாம்.

இப்படி ஒரு செய்தியை முதல் பக்கத்தில் வெளியிட்ட அச்செய்தித்தாளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் பல மலாய்க்காரர்கள் வலியுறுத்தினர். பிரதமர் நஜிப்பும் அம்னோ இளைஞர் தலைவர் கைரி ஜமாலுடினும் அதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர்கள் விரும்புகின்றனர்.

நண்பகல்வரை உத்துசானைக் கண்டித்து சுமார் ஆயிரம் பேர் தங்கள் ஆத்திரத்தை டிவிட்டரில் பதிவு செய்திருக்கிறார்கள்.