பொதுத் தேர்தலில் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ள பக்காத்தான் ரக்யாட்டே கூட்டரசு அரசாங்கத்தை அமைக்கும் தகுதி படைத்தது.
“நாங்கள் வாக்குகளில் 51.4 விழுக்காட்டைப் பெற்றோம். பிஎன்னுக்குக் கிடைத்தது 48.6 விழுக்காடுதான். ஆனால், அரசாங்கத்தை அமைக்க எங்களுக்குப் போதுமான இடங்கள் இல்லை. அது எப்படி?”, என்று பினாங்கு பக்காத்தான் தலைவர் லிம் குவான் எங் வினவுகிறார்.
“எங்களுக்கு மிகவும் ஏமாற்றமளிக்கிறது. மக்கள் அளித்த வாக்குகளில் 51.4 விழுக்காட்டைப் பெற்ற எங்களுக்கு எட்டு இடங்கள்தான் கூடுதலாகக் கிடைத்தன. இது எப்படி இருக்கிறது?”.
பினாங்கில் 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் பக்காத்தானுக்கு ஆதரவாகக் கிடைத்த 63 விழுக்காட்டு வாக்குகள் 13வது பொதுத் தேர்தலில் 66 விழுக்காடாக கூடியிருப்பது குறித்து லிம் மகிழ்ச்சி தெரிவித்தார்.
“இது, பினாங்கு மக்கள் பக்காத்தான் மாநில அரசின்மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது”, என்றாரவர்.
பக்காத்தானுக்கு ஆதரவாக திரும்பிய வாக்குகளை “சீனர் சுனாமி” என்று பிஎன் தலைவர் நஜிப் அப்துல் குறிப்பிட்டதை அவர் நிராகரித்தார்.
“இரு இன அமைப்புமுறை” ஒன்றை உருவாக்கி இருப்பதாக டிஏபிமீது பழிபோடும் மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக்கையும் அவர் குறைகூறினார்.
அவர்களின் கூற்று தேர்தலில் பிஎன்னின் பலவீனமான அடைவுநிலையைவிட்டுக் கவனத்தைத் திசைதிருப்பும் முயற்சியாகும்.
பக்காதான் சீனர் வாழும் பகுதிகளில் மட்டுமல்லாமல் மலேசியா முழுவதுமே பல இடங்களில் குறிப்பிடத்தக்க வகையில் வெற்றி பெற்றுள்ளது என்று லிம் வலியுறுத்தினார்.
ஆறு நாடாளுமன்றத் தொகுதிகளை- கோலா திரெங்கானு, டுங்குன், அலோர் ஸ்டார், லூமுட், சிப்பாங், பெனாம்பாங்- பட்டியலிட்ட லிம், அவற்றில் 50 விழுக்காடு அல்லது அதற்கும் கூடுதலாக மலாய்க்காரர்கள் இருந்தாலும், பக்காத்தான் அதிக வாக்குகள் பெற்றதைச் சுட்டிக்காட்டினார்.
மாநில அளவில் மலாய் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளான, பினாங்கில் செபறாங் பிறை (64 விழுக்காடு), பகாங்கில் தஞ்சோங் லும்பூர் (77 விழுக்காடு), ஜோகூரில் பாரிட் யானி, புத்ரி வங்சா (40 விழுக்காடு) போன்றவற்றில் பக்காத்தான் வெற்றிபெற்றுள்ளது.
சாபாவில் பூமிபுத்ராக்கள் அல்லது பல இனங்கள் கலந்து வாழும் இடங்களான மாத்துங்கோங், கெடமாயான், தம்புருலி, இனனாம், மோயோக் ஆகிய இடங்களிலும் அது வெற்றி பெற்றது.
“டிஏபி-இன் இந்தச் செயல்பாடு அதை இனவாதக் கட்சி என்பது பொய் என்பதை அம்பலப்படுத்துகிறது”, என்றாரவர்.
பலஇன பிரதிநிதிகள்
டிஏபி-இல் இப்போது இரண்டு மலாய் எம்பிகள் (பினாங்கில்) புக்கிட் பெண்டேரா-விலும் (பகாங்) ரவுப்பிலும் உள்ளனர். ஆறு இந்திய எம்பிகள் இருக்கிறார்கள். (பத்து கவான், புக்கிட் குளுகோர், ஈப்போ பாராட், பத்து காஜா, பூச்சோங், கிள்ளான்).
இது மஇகாவில் இருப்பதைவிட அதிகமாகும் என்று லிம் கூறினார்.
“மலேசியர்கள் இனவாதத்தைப் புறக்கணித்து பக்காத்தானுக்கு வாக்களித்துள்ளனர். இது சீனர்களின் சுனாமி அல்ல. கிளந்தானில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாகவுள்ள (90 விழுக்காடு) பகுதிகளிலும் பக்காத்தான் வென்றுள்ளது.
“நாங்கள் மலாய் வாக்குகளைப் பெறவில்லை என்று கூறுவது பொய்யுரையாகும். அவர்களின் 50 விழுக்காட்டு வாக்குகள் இல்லாமல் எங்களால் வெற்றிபெற்றிருக்க முடியாது.
“இனவாத வலையில் விழுந்து விடாதீர்கள். இனத்தைவிட கொள்கைகள் முக்கியமாகும். ஒரு தூய்மையான அரசு வேண்டும் என்றுதான் மக்கள் வாக்களிக்கிறார்கள். அதுதான் முன்னே செல்வதற்கான ஒரே வழி. இனத்தின் அடிப்படையில் ஒரு வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து அவர் ஓர் ஊழல்வாதியாக இருந்தால் என்ன செய்வது? ”, என்றவர் வினவினார்.
இந்த கூற்றைவிட நஜிப் சொன்ன வார்த்தைகளும் இது போன்றதே …. சீனர்கள் சூனாமி ! வேசம் போட்டு மேடையில் பேசும்போது சத்து மலேசியா … ஓட்டு போட்டபிறகு குறைகூறுவது , சீனர்களை சாடுவது ! இதிலிருந்து தெரிகிறது அடுத்த ரவுண்டுக்கு ஆள் எங்கிருப்பாரோ …..
அடுத்த ரவுண்டில் அல்தான்தூயா ஆவி அழைத்துவிடும் !mr .oranglama !