‘தேர்தல் மோசடியை’ ஆட்சேபித்து நாளை பக்காத்தான் பேரணி நடத்தும்

anwarநாட்டின் தேர்தல் நடைமுறையை சீர்திருத்தும் பொருட்டும் தாம் தோல்வி கண்ட தேர்தல் முடிவுகளை  ஆட்சேபித்தும் ‘தீவிரமான இயக்கம்’ ஒன்றைத் தாம் வழி நடத்தப் போவதாக எதிர்த்தரப்புத் தலைவர்  அன்வார் இப்ராஹிம் சூளுரைத்துள்ளார். அதற்காக அவர் முதலில் இந்த வாரம் தமது ஆதரவாளர்கள் கலந்து  கொள்ளும் பேரணி ஒன்றுக்கும் அவர் ஏற்பாடு செய்துள்ளார்.

ஞாயிற்றுக் கிழமை நிகழ்ந்த தேர்தலில் பிஎன் வெற்றி அடைந்ததை ஏற்றுக் கொள்ள மறுத்த அன்வார், ஆளும்
கூட்டணிக்கு ஆதரவாக வாக்களிக்க அந்நிய குடியேற்றக்காரர்கள் பயன்படுத்தப்பட்டது உட்பட விரிவான  மோசடிகளினால் தேர்தல் முடிவுகள் களங்கப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.

தேசிய அளவில் ஆளும் கூட்டணி கடந்த 44 ஆண்டுகளில் முதன் முறையாக சிறுபான்மையான வாக்குகளை
பெற்ற போதிலும் அதற்கு நாடாளுமன்றத்தில் 133 இடங்கள் கிடைத்ததுடன் ஒப்பிடுகையில் எதிர்த்தரப்புக்
கூட்டணிக்கு 89 இடங்களே கிடைத்துள்ளன.

“தேர்தல் முறைகேடுகளிலிருந்தும் மோசடிகளிலிருந்தும் இந்த நாட்டைத் தூய்மைப்படுத்துவதற்கான தீவிரமான  இயக்கத்தின் தொடக்கமாக’ நாளைய பேரணி அமையும்,” என முன்னாள் நிதி அமைச்சருமான 65 வயது  அன்வார் குறிப்பிட்டார்.

கோலாலம்பூருக்கு அருகில் சிலாங்கூர் மாநிலத்தில் 40,000 பேர் அமரக் கூடிய ஒர் அரங்கத்தில் அந்தப்
பேரணியை நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. சிலாங்கூரை எதிர்த்தரப்பு தக்க வைத்துக் கொண்டுள்ளது.

29 தொகுதிகளில் தேர்தல் முடிவுகளை எதிர்ப்பதற்கு போதுமான ஆதாரங்கள் எதிர்க்கட்சிகளிடம் இருப்பதாக
அன்வார் கூறினார். அது முழுமையாக தேசிய அளவிலான முடிவுகள் குறித்து கேள்வி எழுப்புவதற்குப்
போதுமானது என்றார் அவர்.

தேர்தலில் மோசடி நிகழ்ந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறிக் கொள்வதை மலேசிய அரசாங்கம் நிராகரித்துள்ளது.  அண்மைய வாரங்களில் பிஎன் -னுக்கு நிலைமை சாதகமாக இருப்பதைக் காட்டிய கருத்துக் கணிப்புக்களுக்கு  இணங்க அந்த முடிவுகள் அமைந்துள்ளதாக அது சொல்கிறது.

“தேர்தலைப் பற்றி ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை எதிர்த்தரப்பு விடுக்கின்றது,” என மலேசிய அரசாங்கப்
பேச்சாளர் ஒருவர் சொன்னார்.

ராய்ட்டர்ஸ்