பேரணி நிகழவிருக்கும் வேளையில் புத்ராஜெயா அன்வாரைச் சாடுகின்றது

anwarதேசியத் தேர்தலில் தோல்வி கண்ட அன்வார் வாக்கு மோசடி எனத் தாம்  கூறிக் கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்  பொருட்டு இன்றிரவு நடத்தத் திட்டமிட்டுள்ள பேரணி வழியாக அவர் “பிரிவினைக்கு வித்திடுகிறார்” என்றும்  பதற்றத்தை ஏற்படுத்தத் திட்டமிடுகிறார் என்றும் மலேசிய அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த நாட்டை நீண்ட காலமாக ஆட்சி புரியும் பாரிசான் நேசனல் கூட்டணிக்கு நலிவான நாடாளுமன்ற  பெரும்பான்மையை வழங்கிய ஞாயிற்றுக்கிழமை தேர்தலில் பரவலாக மோசடிகள் நிகழ்ந்துள்ளதற்கான  ஆதாரங்கள் எனத் தாம் சொல்வதைத் தெரிவிப்பதற்காக அன்வார் அந்தப் பேரணிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

கோலாலம்பூருக்கு வெளியில் உள்ள விளையாட்டு அரங்கம் ஒன்றில் நடத்தப்படும் அந்த நிகழ்வுக்குத்
தேவையான அனுமதியை எதிர்த்தரப்புப் பெறவில்லை எனப் போலீசார் எச்சரித்துள்ள போதிலும்
ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.

“எதிர்ப்பு தெரிவிப்பதற்கான அந்த நிகழ்வுக்கு அன்வார் வேண்டுமென்றே அனுமதிக்கு விண்ணப்பிக்க மறுத்து
விட்டார். அத்துடன் கூட்டம் சாலைகளிலும் குவிய வேண்டும் என்பதற்காக சிறிய அரங்கத்தை வேண்டுமென்றே அவர்  தேர்வு செய்துள்ளார்.”anwar1

“அந்த நிகழ்வின் நோக்கம் பதற்றத்தை ஏற்படுத்துவதாகும்,” என்று அரசாங்கம் இன்று விடுத்த அறிக்கையில்  தெரிவித்தது.

வெளிப்படையாக அந்தப் பேரணிக்கு தடை விதிக்காமல், சமூக ஒழுங்கு சீர்குலைவைத் தூண்டும்  நடவடிக்கைகளை தடுக்கும் தேச நிந்தனைச் சட்டத்தை அந்தப் பேரணி மீறினால் அதன் ஏற்பாட்டாளர்கள்  மீதும் பேச்சாளர்கள் மீதும் ‘நடவடிக்கை’ எடுக்கத் தாங்கள் தயங்கப் போவதில்லை என போலீசார் அந்த
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

தேர்தல் முடிவுகளை மாற்றும் முயற்சிகளில் தாம் வெற்றி பெறக் கூடிய சாத்தியம் இல்லை என்றாலும் அந்த
முடிவுகளை எதிர்க்கவும் நாட்டின் தேர்தல் நடைமுறைகளைச் சீர்திருத்தவும் ‘தீவிரமான இயக்கத்தை’ நடத்தப்  போவதாக முன்னாள் துணைப் பிரதமருமான அன்வார் சூளுரைத்துள்ளார்.

தேர்தல் சீர்திருத்தங்களுக்கு போராடும் பெர்சே என்னும் சிவில் சமூக அமைப்பு அண்மைய ஆண்டுகளில்
கோலாலம்பூர் சாலைகளில் பெரிய பெரிய பேரணிகளை நடத்தியுள்ளது. அந்தப் பேரணிகள் போலீசாருடன்
வன்முறை மோதல்களாக முடிந்துள்ளன. அந்த அமைப்பு இன்றைய நிகழ்வில் அதிகாரப்பூர்வமாக பங்கு
கொள்ளவில்லை.

anwar2எதிர்த்தரப்பு, அதன் முதலாவது தேர்தல் வெற்றியை அடையாமல் ஏமாற்றப்பட்டு விட்டது என்ற தனது  வாதத்தை விளக்குவதற்கான முதல் படி அந்தப் பேரணி என்று நேற்று அன்வார் ராய்ட்டர் செய்தி  நிறுவனத்திடம் கூறியிருந்தார்.

“நாங்கள் மக்கள் எழுச்சியைக் கண்டோம். ஆனால் தேர்தலில் அதன் தாக்கத்தை ஆளும் கூட்டம் திருடி  விட்டது. இப்போது நாங்கள் அதனை மக்களுக்கு விளக்க வேண்டிய அவசியம் உள்ளது. மக்கள் அங்கிருந்து  தொடரட்டும்,” என்றார் அவர்.

கடந்த 44 ஆண்டுகளில் முதன் முறையாக ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணிக்குத் தேசிய அளவில்  குறைவான வாக்குகள் கிடைத்த போதிலும் நாடாளுமன்றத்தில் அதற்கு 133 இடங்கள் கிடைத்தன. ஆனால்  எதிர்த்தரப்புக் கூட்டணிக்கு 89 இடங்கள் மட்டுமே கிடைத்தது.

மொத்தமுள்ள 222 இடங்களில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளின் முடிவுகள் சந்தேகத்துக்குரியவை என
எதிர்த்தரப்பு அடையாளம் கண்டுள்ளதாகவும் அன்வார் சொன்னார். அதற்கான ஆதாரங்களை வரும்
வாரங்களில் அது வழங்கும்.

பிரதமர் அலுவலகத்தில் ஒரு பிரிவாக இயங்கும் நாட்டின் தேர்தல் ஆணையம் பாரபட்சமாக நடந்து
கொள்வதாக எதிர்க்கட்சிகளும் சிவில் சமூக அமைப்புக்களும் குறை கூறியுள்ளன. தேர்தல் ஆணையம்
அன்வார் சொல்லும் குற்றச்சாட்டுக்களைப் புலனாய்வு செய்யும் சாத்தியமில்லை.

ராய்ட்டர்ஸ்