பினாங்கு கறுப்பு 505 பேரணியில் வரலாறு காணாத அளவு கூட்டம்

505பினாங்கு மாநிலத்தின் தென் பகுதியில் வழக்கமாக மிக அமைதியாக இருக்கும் பத்து கவான் நேற்றிரவு மிகவும்  சுறுசுறுப்பாகக் காணப்பட்டது. காரணம் பக்காத்தான் ராக்யாட் ஏற்படு செய்த இரண்டாவது கறுப்பு 505  பேரணியாகும்.

மூன்று நாட்களுக்கு முன்னர் கிளானா ஜெயாவில் நிகழ்ந்த பேரணியில் கூடிய 120,000 மக்களைப் போன்று
இங்கும் அதே எண்ணிக்கையில் மக்கள் ஒன்று திரண்டனர்.

கெடா, பேராக் போன்ற அண்டை மாநில மக்களுக் கூட அதில் கலந்து கொண்டிருந்தனர்.

சிலாங்கூர், நெகிரி செம்பிலான் மக்களும் அங்கு தென்பட்டனர். அவர்கள் பக்காத்தான் ராக்யாட் மூன்று கட்சி சின்னங்களைக் கொண்ட கொடியுடன் தங்கள் மாநிலக் கொடிகளை அசைத்துக் கொண்டிருந்தனர்.

பல இன மக்களும் பங்கு கொண்ட அந்தக் கூட்டத்தில் 85 விழுக்காட்டினர் இளைஞர்கள் ஆவர்.

மாலை 4 மணி தொடக்கம் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில் பத்து கவானுக்குச் செல்லும் புக்கிட் தம்புன் பாதையில் கார்கள் ஊர்ந்து கொண்டிருந்தன.5051

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, செபராங் ஜெயா சட்டமன்ற
உறுப்பினர் டாக்டர் அபிப் பஹார்டின் ஆகியோர் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் கார்களை நிறுத்தி விட்டு  நிகழ்ச்சி நடக்கும் இடத்துக்கு நடந்து சென்றார்கள்.

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் இரவு 9 மணி வாக்கில் அங்கு சென்றடைந்தார்.

“நாங்கள் மலேசியர்கள்”, “மக்கள் சுனாமி”, “இனவாதம் கடந்த காலம்” எனக் கூறும் பதாதைகளை மக்கள்  ஏந்தியிருந்தனர்.

மலாய் அல்லாத பிஎன் கட்சிகள் துடைத்தொழிக்கப்பட்டதற்கு ‘சீனர் சுனாமி’ காரணம் என பிஎன் தலைவர்
நஜிப் அப்துல் ரசாக் குற்றம் சாட்டியதற்கு அந்தப் பதாதைகள் பதில் அளித்தன.

அண்மைய தேர்தலில் மொத்தம் செலுத்தப்பட்ட வாக்குகளில் 50.9 விழுக்காடு பக்காதானுக்குச் சென்றது. பிஎன்  -னுக்கு 47.4 விழுக்காடு வாக்குகளே கிடைத்தன.

மலேசியர்களுக்கு  என்ன வேண்டும் ?

‘சீனர்களுக்கு மேலும் என்ன வேண்டும்’ என உத்துசான் மலேசியா வெளியிட்ட சர்ச்சைக்குரிய தலைப்புச் செய்தி மீதும் நஜிப் கருத்து மீதும் மக்கள் கொண்டுள்ள வெறுப்பை அன்வார் தமது உரையில் பயன்படுத்திக் கொண்டார்.

5052“சீனர்கள், மலாய்க்காரர்கள், இந்தியர்கள், டயாக்குகள், கடாஸான்கள் ஆகியோர் தூய்மையான நியாயமான
தேர்தல்களை நாடுகின்றனர். மக்கள் செல்வத்தை பிஎன் அல்லது அம்னோ கொள்ளையடிக்கக் கூடாது அது
திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர்.”

“தேசிய இலக்கியவாதி ஏ சமாட் சைட் சொல்வது போல இந்தத் தேர்தல் எல்லா மோசடிகளுக்கும்  அன்னையாகும்.”

“அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும். அது மலேசியர்களை  ஏமாற்ற முடியாது.”

“அவர்கள் ஏற்கனவே அதனைச் செய்துள்ளனர். நாங்கள் அவர்களை மன்னித்து விட்டோம். 13வது பொதுத் தேர்தலில் நாங்கள் இப்போது பதிலைக் கோருகிறோம்,” என அன்வார் சொன்ன போது கூட்டத்தினர் பெருத்த ஆரவாரம் செய்தனர்.

அந்தப் பேரணிக்கான இடம் புக்கிட் மெர்டாஜாம் MPSP அரங்கத்திலிருந்து குறுகிய ஒரு நாள்
முன்னறிவிப்பில் பத்து கவானுக்கு மாற்றப்பட்ட போதும் 125,000க்கும் அதிகமான மக்கள் கூடியது குறித்து லிம்  தமது உரையில் மகிழ்ச்சி தெரிவித்தார்.

“அரங்கத்தில் மக்கள் பெருந்திரளாகக் கூடியிருப்பதால் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியில் நின்று
கொண்டிருக்கின்றனர்.”

“நஜிப் சொன்னதற்கு மாறாக இந்த சுனாமியில் அனைவரும் சம்பந்தப்பட்டுள்ளனர். மொத்த வாக்காளர்களில் சீனர்கள் 25 விழுக்காட்டினரே. மொத்தம் செலுத்தப்பட்ட வாக்குகளில் 51.4 விழுக்காடு பக்காத்தானுக்கு கிடைத்துள்ளது. ஆகவே எஞ்சியுள்ள 26 விழுக்காடு எங்கிருந்து வந்தது ?”

“அவை வங்காள் தேசிகள் வாக்குகள் எனச் சொல்ல வேண்டாம்,” என லிம் சொன்ன போது கூட்டத்தில்
பலத்த கைதட்டல் எழுந்தது.

மாட் சாபு என அழைக்கப்படும் முகமட் மிகவும் வேடிக்கையாகப் பேசினார். இசி-க்கு எதிராக அவர் சொன்ன நகைச்சுவை மக்களைக் கவர்ந்து இசி-யைக் கேலி செய்ய வைத்தது.

“அந்த மை அழிக்க முடியாதது என இசி கூறியது. ஆனால் அது ஒரு மணி நேரத்துக்குக் கூட தாங்கவில்லை. ஹா! ஹா! ஹா!,” என அவர் சிரித்த போது கூட்டத்தினரும் சிரித்து விட்டார்கள்.

“இந்தத் தேர்தல் மிகவும் நேர்மையானது, தூய்மையானது என அவர்கள் கூறுகின்றனர். அவர்களைக் கிண்டல் செய்வோம். அவர்கள் தொலைந்து போகட்டும்.”

அந்த நிகழ்வில் மொத்தம் 10 பேர் பேசினார்கள். நள்ளிரவு வாக்கில் பேரணி நிறைவடைந்தது. கூட்டம்
கட்டுக்கோப்பாக நடைபெற்றது. மக்கள் அமைதியாக இருந்தனர். ஒன்றுபட்ட உணர்வும் காணப்பட்டது.